09 ஜூன் 2011

பா..ப்ப்ப்..பூ..


சுல்தான் அஹமது நளீர்

மழலைக் குழைய மகனே நீ

*பா..ப்ப்ப்..பூ.. என்று குரல் அழைக்க


மனமெல்லாம் பூப்பூவாய்
புதுப்புது பூவயல்கள்- என்

புவிதோறும் பூக்குதடா..!


அடிமனதில் ஆனந்த சுனைகள்

பீரிட்டு பொங்கி பெருகிட - அது

காட்டாற்று வெள்ளமாய்

கற்கண்டு இனிப்போடும்

களிப்பூட்டும் குளிரோடும்

கவினுற சூழுதடா..!


உன் பாசக்குரல் என்

ஏழு தலைமுறைக்கு

அப்பாலும் சென்று

எல்லோர் ஆத்மாவையும்

தட்டி அழைக்குதாடா..!


உன் அழைப்பின்

ஒவ்வொரு மைக்ரோ ஒலியிலும்

உயிரிலையின் மெய்நாதம் கேட்குதடா..!


எத்தனை ஒலிகள்

காதிற் புகுந்தாலும்

நான் மொத்தமாய் மூழ்கியது

உன் தெவிட்டாத தேன் குரலில் தானடா..!


என் காதுகள் இரண்டிற்குள்ளும்

தேக்கி வைத்த ஓயா அலை

உன் ஜீவ அலைதானடா..!


மனது...

அதற்கு வேண்டும் போதெல்லாம்

சலிப்படையாமல் உன் குரலைத்தானடா

ஒலிக்கச்செய்து திருப்தி அடைகிறது.


உன் அழைப்பு மட்டுமே

எந்த சார்பும் அற்ற எதார்த்தம்.


என்னையும் உன்னையும்

நூல் இடைவெளி கூட

பிரிவின்றி இணைத்து விட்டாய்!


உன்னோடு போசும் போது தானடா

சிரித்துக் கொண்டே அழுகின்றேன்!


கண்ணே உன்னை

தொட்டுப்பார்க்க ஆசைதான்

பாசத்துடன் தொடப்போனால்

கணிணியின் திரைதானடா விரல் முட்டுகிறது!

----(வீடியோ சாட்டிங்2000 கி.மீ வெளி இடையில்)


மகனே நீ..

உரிமையோடு எனை அழைக்க

உயிரே ஒன்று திரண்டு ரசிக்குதடா..!


என் ஏக்கத்திற்கெல்லாம்

தீணிபோடும் எசமானன் நீதானடா..!


மகனே நீ..

இயற்கையின் கொடை..!

இரசூலின் கொடை..! - எங்கள்

இதயம் இனிக்க வாழ்க!
இகம் தழைக்க வாழ்க!!


மனிதப்புனிதர் மன்னவர் அருள் பெற்று
மண்ணில் புகழ்மகுடம் சூடி வாழ்க!


நிமலனது நீங்கா கிருபையால்..!

நீதம் தவறாத நித்தியனாய்

நிலமதில் என்றும் நிலைபெருக!

----------------- ------------------------------- -------------------------
வாழ்த்திக்கொண்டே இருக்கும் உன் பாப்பு,
ஜே.எம்.பாட்ஷா ( அமீரகம்)

*பாப்பு ; அப்பாவிற்கான எங்கள் தஞ்சை மாவட்ட வட்டார வழக்குச்சொல்.
சென்ற ஆகஸ்டில் அபுதாபியில் இருந்தபோது எழுதியது, தற்போது ஃபுஜைராவில் வைத்து முழுமையானது.

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

நல்லாயிருக்குங்க..

admin சொன்னது…

நன்றி