23 ஆகஸ்ட் 2016

பள்ளி ஊர்தி ஓட்டுனர்கள்!

பள்ளிக்கூட ஊர்தி என்பது மிகவும் பொறுமையும், நிதானமும் கொண்டு கையாளப்படவேண்டிய ஒன்று, ஊர்தி ஓட்டுனர்களை நம்பியே தங்களின் எதிர்காலமாகவும், கனவாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும் பிரிய பிள்ளைச்செல்வங்களை பெற்றவர்கள் ஒப்படைக்கின்றனர். சிறுபிள்ளைகள் உலகம் தெரியாதவர்கள், பலகீனமானவர்கள்.. அவர்களை பரிவோடு கையாள்வது மிக முக்கியம்.
ஓட்டுனர் நண்பர்களே..வெளிநாடுகளில் இருப்பது போன்று மிகக்கடுமையான சட்டதிட்டங்கள், உயர் வசதி கொண்ட கண்காணிப்பு கருவிகள் எதுவும் நமது இந்தியாவில் இல்லை மாறாக உங்களை நம்பியே பிள்ளைகளை ஒப்படைக்கின்றனர். நீங்கள் மிகப்பொறுப்புணர்வோடு செயல்படுவது மிக அவசியம்.
இதெல்லாம் குறித்து எல்லா பள்ளி நிர்வாகமும் மிக கவனமுடன் செயல்பட வேண்டும், தகுதியான ஓட்டுனரை பணியில் அமர்த்தி அவரையும் கண்காணிக்க வேண்டும். ஊர்தியையும் சோதனை செய்து பழுதி நீக்கி பிள்ளைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பாதுகாப்பு இல்லாமல் நம் நாட்டில் எத்தனையோ துயர நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அவை இனி நடக்கக்கூடாது அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளை எடுத்து எந்த துயரமும் நடக்காமல் சிறப்பாக செயல்படுத்தி நன்மதிப்பை பெறுவது எல்லா பள்ளிகளின் மேலாண்மையாளர்களின் கடமையாகும்.
ஊர்திகளில் செல்லும் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, தெருவில் செல்லும் பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் என யாருக்கும் பாதிப்பு வராத அளவுக்கு ஊர்தி ஓட்டுனர்கள் பொறுமையுடனும் கடமை உணர்வுடனும் செயல்பட வேண்டும், இன்று எங்கள் வழுத்தூரில் மாலை நடந்த நிகழ்வில் LKG படிக்கும் ஒரு மழலைக்குழந்தை கடையில் மிட்டாய் வாங்கிவிட்டு தெருவில் செல்லும் வேளை ஏதிர்பாராது வந்த பள்ளி ஊர்தி முனையில் திருப்பும் போது சற்றே கவனம் தவற பரிதாபமாக அந்தப்பிள்ளை அதே இடத்தில் பலியாகி இருப்பது நெஞ்சை கனக்க வைக்கிறது. அந்த பிள்ளையின் தாயார் பிள்ளை இறந்திருப்பது அறியாது தஞ்சையில் மருத்துவரிடம் சென்று காப்பாற்றும்படி கதறி அழுதாராம், கேவையில் இருக்கும் தகப்பனுக்கு இடிபோன்ற இந்த செய்தி சொல்லப்பட உலகமே இருண்டு ஓடி வருகிறாராம். இனி ஒரு நிகழ்வு இது போல யாருக்கும் வேண்டாம் நண்பர்களே.. பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுங்கள். பிள்ளைகள் பாவம் அவர்கள் மிக பிஞ்சு போன்றவர்கள். அவர்களது உயிரோடு யாரும் விளையாட வேண்டாம்.
பள்ளி நடத்துவர்கள், பொறுப்புதாரிகள், ஊர்தி ஓட்டுனர்கள் என எல்லோரும் பொறுப்புடன் செயல்படுங்கள். பெற்றோர்களே நீங்களும் ஊர்தியை, ஓட்டுனரை கவனியுங்கள் ஏதேனும் ஐயம் இருந்தால் உடனே புகார் செய்யுங்கள். நம் பிள்ளைகள் நமக்கு முக்கியம். அவர்களுக்காகத்தான் நாம், அவர்கள் தான் நம் கனவும் நினைவும். அவர்கள் பாதுகாப்பு என்றும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்தியா போன்ற நமது தேசத்தில் பள்ளி போக்கு வரத்து குறித்து நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆகையால் நாம் அனைவரும் அவரவர் பொறுப்புணர்ந்து விழிப்போடு இருப்போம். பிள்ளைச் செல்வங்களைக் காப்போம்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
22-8-2016 - 10.15pm


கருத்துகள் இல்லை: