20 ஆகஸ்ட் 2016

ராஜிவ் பிறந்தநாள் பதிவு - 20-8-2016

ராஜிவ், அவர் புன்னகை ஒன்றே போதும் எல்லோரும் மயங்கிட, ராஜிவ்-ன் புன்னகைக்கு அப்படி ஓர் கிறக்கம் எப்போதும் இருக்கும். என்பதுகளில் அவர் புகழ் உச்சியில் இருந்தது, அவர் இந்தியாவின் இளைய நம்பிக்கையாக துளிர்த்திருந்தார். அவரது ஆங்கிலம் மிகச் சிலாகிக்கபட்ட ஒன்று, ஆங்கிலம் கற்கவும், அவரது பாணியை உள்வாங்கிக்கொள்ளவும் என் வீட்டில் கூட இரவு நேரங்களில் அந்தக் காலத்தின் பானாசோனிக் டேப் ரிகார்டர் கேசட்டை எண்ணிறந்த முறைகள் சுழற்றி, சுழற்றி என் உறவுமுறை மாமா ஒருவருகாக ஒலிக்கவிட்டிருக்கிறது. அப்போது தான் எனக்கும் அவரது ஆங்கிலப்பேச்சு அறிமுகம். மிக இளைய பிரதமராக ராஜிவ் அரசாட்சி செய்த காலங்களில் இந்தியாவின் முன்னேற்றத்தின் பல கதவுகள் திறந்துவைக்கப்பட்டது, கோட் சூட் போட்டுக்கொண்டு ஐரோப்பியர்களோடு கைகுலுக்கும் ராஜுவை தேசமே மனம் நெகிழ்ந்து வாழ்த்தி ரசிக்கும், அவர் ஐரோப்பியர்கள் மத்தியில் அவர்களுள் ஒருவராகவே தெரிவார் அதனாலேயே மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடனான இணக்கம் அவரால் அதிகம் பேணப்பட்டது, இந்திய வெளியுறவு வலுப்பெற்றிருந்தது. இன்றைய இந்தியாவுக்கான புதிய பொருளாதாரம் குறித்து அவர் கண்ட கனவுகள் நிறைய, அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு இருந்த செய்தியறிந்து ரிசர்வ் பேங்கிலிருந்த மன்மோகன் சிங்கைக் கூட நிதிமந்திரியாக ஆக்கி அதை மெய்பிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரை அதற்குள் தீவிரவாதம் பலி தீர்த்துக்கொண்டது. இன்றைய இந்தியா கண்டிருக்கும் நவீன தொலை தொடர்புத்துறையின் அதீத வளர்ச்சிக்கும் ராஜிவ் இட்ட திட்டங்கள் தான் முலாதாரப்புள்ளிகள் என்றால் மிகையில்லை. இவர் கொல்லப்பட்ட போது 'பால் வடியும் பவளத்திரள் ராஜிவே.." என்று பதிமூன்று வயது சிறுவன் நான் கவிதை எழுதி அழுதேன். அப்படி சிறியவர் பெரியவர் என்றில்லாது எல்லோரிடத்திலும் அவர் ஆழமாக ஊடுருவி இருந்தார். ராஜிவ் மகத்தான தலைவன். செயலாற்றல் மிகுந்த பிரதமர். இதிலிருந்து இன்றைய பிரதமர் குறித்து ஏதும் சொல்லத்தேவையில்லை என்பதும் இவர் எப்படி இருக்கிறார் என்பதும் வெள்ளிடைமலை.பவர் ஸ்டாரின் பில்டப்புக்கள் வெற்று வேட்டு என்பதை தமிழுலகம் அறிந்தது போல இந்தியாவும் வெகுவிரைவில் கண்டு கொள்ளும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: