22 ஜூலை 2016

அன்பின் வள்ளல் வழுத்தூர் லப்பாத்த. ராஜ்முஹம்மது மறைந்தார்

காலம் பூராவும் மலேசியாவில் இருந்து பிறகு இப்போது ஏழெட்டு ஆண்டாக ஊரில் தங்கியும் சும்மா இருக்கக்கூடாதென பள்ளிக்கூடத்திற்கு எதிரில் பிள்ளைகளுக்கான சிறிய மிட்டாய்கடை நடத்தி இன்றுவரை உழைத்த உழைப்பாளி, மிகத்துடிப்பான முஸ்லிம் லீக்காரர், எப்போதும் இன்முகத்தோடு மிக வயதில் இளையவராக யார் இருந்தாலும் மரியாதையும் கண்ணியமும் கொடுத்து பேசும் அழகர், இறைத்தூதர் நாயகம் ஸல்லால்லாஹு அலைஹிவசல்லம், இறைநேசர்கள் என்றால் அவ்வளவு நேசம், திக்ரு மஜ்லிஸ், பயான் மஜ்லிஸ் என எல்லாவற்றிற்கும் முந்தியடித்து முதலில் ஆஜராகும் ஆன்மீகவாதி, எங்கள் ஊருக்கு பரக்கத்தாக எப்போதும் இறையருளை எல்லோருக்கும் யாசிப்பவராக நடமாடிக்கொண்டிருந்த மதிப்புமிகு லப்பாத்த. ராஜ்முஹம்மது மாமு அவர்கள் இன்று மறைந்த செய்தி வந்தது, உள்ளபடியே மனம் வாடிப்போனேன்.
வழுத்தூரில் முன்பு இருந்த பெரியவர்களில் எல்லோரும் பெரும்பாலும் முஸ்லிம் லீகர்களே.. அதில் துடிப்புமிக்கவர் மறைந்த ராஜ்முஹம்மது மாமு, எங்கு முஸ்லிம் லீக் மாநாடு, கூட்டம் என்றாலும் அலாதி பிரியத்துடன் முன்பே வாகனம் முதற்கொண்டு முன்பதிவு செய்துகொள்வார். தன்னுடைய இறப்புக்கு கூட நெருங்கிய நண்பர்களிடம் நான் இறந்தால் என் உடம்பில் முஸ்லிம் லீக்கின் பிறைகொடியை போர்த்துங்கள் என்று சொல்லி இருக்கிறாராம்.
அவரோடு பழகிய நாட்கள், பேசிய நேரஙக்ள் என எல்லாம் மனதில் விரிந்தன. அத்தனை அன்பை கொட்டிப்பேசுவார், என் மீது அத்தனை அன்பு அவருக்கு, ஊர் வரும்போதெல்லாம் இனிக்கப்பேசுவார். நலம் விசாரித்து மகிழ்வார், நமது பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பது குறித்து அத்தனை ஆதங்கமும், அவாவும் இருக்கும், அது பாழ்படும் நிலைகளை குறித்து வருத்தத்துடன் பகிர்ந்துகொள்வார். தினமும் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓடும் வாய்க்காலுக்கு குளிக்க வரும் அவரை பார்க்கலாம், பழங்கால கதைகள் பேசி அனுபவங்கள் பலவற்றை பேசிக்குளிப்போம். இன்று அவர் மறைந்துவிட்டார், இனி ஊர்போனால் அவரின் நடமாட்டத்தை பார்க்கமுடியாது. மிகச்சிறப்பான மனிதரை இழந்துவிட்டோம்.
ராஜ்முஹம்மது மாமு அவர்களின் இழப்பு வழுத்தூரின் மீதமிருந்த முத்துக்களில் ஒரு முத்தை இழந்தது போலத்தான். அவர் மிக நேசித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம், ஆஹ்லுல் பைத்துக்கள், இறை நேசப்பெருந்தகைகள் ஆசிகள் சூழ இறைவன் அவரது தூய ஆன்மாவை என்றும் நித்திய சாந்தியில் நிலைக்கச்செய்வானாக, ஆமீன்.
இந்த புகைப்படம் பெரியப்பள்ளிவாசலில் ரபிய்யுல் அவ்வல் ஹந்தூரி நடைபெற்ற காலைப்பொழுதில் 2014-ல் எடுத்தது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: