12 ஜூலை 2016

யானை கொலை


எங்கே தான் போவோம்..
எங்களுக்கான இடங்களை
நீங்கள் திண்று செரித்த பின்...
எப்படி பசி போக்குவோம்
எங்கு போனால் எங்கள் தாகம் தீரும்
அட்டகாசம் செய்கிறோமாம்
பயிரை அழிக்கிறோமாம்
நாங்களோ சுயம் இழந்து
வாழ்வாதாரம் தேடுகிறோம்,
நீங்களோ துப்பாக்கி ஏந்தி
கொல்ல வருகிறீர்!
ஊரே திரண்டு
தம்பட்டமடித்து துரத்துகிறீர்
தீ எறிந்து சுடுகிறீர்
ஓடினால்....
நாங்கள் அறிந்திராத
சாலைகள் குறுக்கிடுகிறது
வாகனங்கள் மோதி
அழிக்க எத்தனிக்கிறது!
முன்பிருந்த நீர்நிலைகளை
தும்பிக்கை கொண்டு தேடுகிறோம்
நாங்கள் அமைத்திருந்த
வழிப்பாதைகளை தேடுகிறோம்
அதில் எங்கள் முந்தைய கால் தடம் தேடுகிறோம்
நீங்களோ எங்களை கொல்ல தேடிவருகிறீர்
நேற்று கூட உங்கள் எமக்கூட்டம் வந்தது,
எங்கள் செல்ல மகராஜாவை
பிடித்து சித்ரவதை செய்தது,
துப்பாக்கி கொண்டு
மருந்ததனை விசமாய் ஏற்றியது,
அவனை அநியாயமாய் கொன்றது!
வேறொரு சினேகிதனும்
அவன் தொழுது வேண்டினான்
காடு சேரவேண்டி,
ஓடி ஓடி ஓய்ந்தான்
வழிதான் தெரியவில்லை
ஏதோ ஒன்று நெருங்கிவந்தது,
ரயிலாம்..
அது அத்தனை விசையுடன்
சீறி சிதைத்தது
சாகடித்து வீசிச்சென்றது!
என்ன செய்ய முடியும்
களிறுகள் நாங்கள் பிளிறுவதை தவிர!
உங்கள் ராஜாங்கம்
இன்னும் எவ்வளவு காலம்???
நாங்கள் இல்லாமல் நீங்களா.....
காடுகள் இல்லாமல்
நீங்கள் எழுதும் விதி
என்ன கதியாகும்?
குமாரசாமி கணக்கு போடுகிறாய் மானிடா!
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: