05 ஜூலை 2016

நம் தவவாழ்வு விடைபெறுகிறது..!

நம் மாண்புமிகு முதல்வரின் தவவாழ்வு பற்றி யாம் அறியோம்! ஆனால் நாம் அனைவரும் கடந்த ஒரு மாதமாக மிகச்சிறப்பான ஆத்மபயிற்சி மேற்கொண்டு தவவாழ்வின் மெய்யுணர்வினை பெற்றிருந்தோம் என்றால் மிகையில்லை.
கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் சாப்பாடு.. சாப்பாடு.. சாப்பாடென உள்ளே தள்ளி.. இடைவிடாது வேலை வாங்கிக்கொண்டிருந்த குடல் & கோ-விற்கு 15 முதல் 16 1/2 மணி நேரம் வரை ஹாயாக காலியாக்கி குடலுக்கு குதூகளம் செய்தோம். முதல் நாள் என்ன இப்படி தண்ணிகூடவா உன்னால ஊத்த முடியாதுன்னு வாய் மூலமா பசியால.. தாகத்தால கேட்க சிம்டம்ஸ் கொடுக்கும் ஆனால் நாம நோன்புங்கிற எண்ணம் எல்லாத்தையும் மிகைச்சு நிக்கிறதால பாடி அப்பிடியே பதூசா கேட்டுக்கும், பிறகு ரெண்டாம் நாளிலிருந்து பாடிக்க்ளாக்கே மாறிப்போய்டும்,
தூக்கத்த பிச்சு.. பிச்சு பகல்ல கொஞ்சம், ராத்திரில கொஞ்சம்ன்னு ஆக்கி மொத்தமா மாத்திடுவோம், இந்த மாசத்துல ராத்திரி பூரா பகலா இருந்திச்சு. நேரம் ஓடுவதே தெரியாது.. இஃப்தார் அவசரமா முடிச்சுட்டு மஃரிப், பிறகு வந்ததே தெரியாது இஷாக்கு பாங்கு அப்புறம் தராவீஹ் தொழுகை முடிச்சு பாத்தா மணி 10க்கு மேல... இங்க நாங்க அப்பதான் ஊருக்கே போன் பேசுவோம்.. அப்புறம் சஹருக்கு சமையல்..அது, இதுன்னு பாத்தா மணி 12ஐ தாண்டி நிக்கும். பிறகு படுப்போம் இல்லேன்னா 1 மணி கூட ஆகிடும்.
அடுத்ததா 3.30க்கு மீண்டும் சஹர் உணவு, பஜ்ர் தொழுகைன்னு 5 மணிக்கிட்டதட்ட படுத்தா ஒருமணி கழிச்சு எழுதிரிக்கவே முடியாம தூக்கத்த பிச்சுப்போட்டு ஆபிஸுக்கு போகனும், 6மணி நேர ஆபிஸ் முடிஞ்சு
பிறகு மதியம் வந்து கொஞ்சம் குட்டித்தூக்கம். அப்பறம் இப்தார் இப்படீன்னு ஒரு மாறுபட்ட வாழ்வு.
ஒரு மாசமா நாங்க இந்த டீவி பெட்டிய தொறக்கல.. பாண்டே..அது இதுன்னு எந்த அடிதடி ரகளை டீவி விவாத நிகழ்ச்சியோ.. இல்ல சீரியலோ இல்ல வெரெந்த கருமாந்திரமோ பாத்து டெய்ம் வேஸ்ட் பண்ணல.. டிவி பாக்காமயே பழகிப்போச்சு இந்த மாசம், இப்படியே கண்டினிவ் பண்ணினாலும் பேஷா தான் இருக்கும்.
ஓரு மாசமா நோன்பு திறக்க பயறு, வெந்தயம், இஞ்சி, பூண்டு இன்ன பிறவும் அரிசியும் கலந்த நோன்பு கஞ்சி, பழவகைகள், ஹரீஸ் (அரேபிய கோதுமை, ஆட்டுக்கறி கலந்த கஞ்சி போன்ற உணவு) வகைறாக்கள்ன்னு நல்ல சமாச்சாரமா மட்டும் சாப்பிட்ட மாதம்.

ஆபிஸுக்கு காலைல டிபன், மதியம் சாப்பாடுன்னு லன்ச் பேக்க எடுத்துக்கிட்டு அழையற வேலையும் மிச்சம், அப்டியே ஃப்ரியா ஹாயா பேண்ட், சட்டைய போட்டோமா ட்ரைவ் பண்ணினோமா..ன்னு ரிலாக்ஸா பறவையா பறந்தோம். அதிகமா குர்ஆன் வசனங்களோடு வசனிக்க வைத்த மாதம், பள்ளிவாசலெல்லாம் ஹவுஸ்புல்லா இருந்த மாதம், வீட்டுக்கு காசனுப்பி லிஸ்ட் போட்டு எல்லாத்துக்கும் தான தர்மம் செஞ்ச மாதம், அறியாதவங்க, தொண்டு செய்ற இயக்கம்ன்னு யார் வந்து கேட்டாலும் கொடுத்து..கொடுத்து சந்தோசமடைந்த மாதம்.
நம்மை அறியாமலேயே ஒரு புண்ணிய உணர்வும், புனிதமும் நம்மை சூழ்ந்திருந்த மாதம், நானே நேரடியாக (தன்னையே) நோன்புக்கு கூலி கொடுக்கிறேன்னு இறைவன் சொன்னது போல அவனே நம்மை சதா அட்கொண்டிருக்கும் அருளார்ந்த நிலை எல்லாம் இந்த ரலமானில் பரிசாக கிடைத்தது. இந்த நிலையே இனி தொடராதா.. வருசம் முழுக்க ரமலானாகவே இருந்தா இன்னும் சந்தோசமா இருக்குமேன்னு மனசு ஏங்கத்தான் செய்கிறது ஆனாலும் நாளை இந்த வருசத்து கடைசி நோம்பாச்சே.
இன்ஷா அல்லாஹ் மீண்டும்... மீண்டும் வசந்தம் பூத்துக்குளுங்கிடும் ரமலான் வரும் வருடங்களில் நம்மை வந்து அடையட்டும் எல்லையில்லா ஆனந்தத்தை அள்ளி.. அள்ளி வழங்கிடட்டும்.

குல்லு ஆம் வ அன்த்தும் பி(b) ஹைர்.
எல்லோருக்கும் இனிய ஈத் முபாரக்.

- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
4-7-2016
இரவு 10.10 மணி

கருத்துகள் இல்லை: