12 ஜூன் 2022

குர்ஆனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு




நான் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், தமிழ்ப்பாடமெடுக்க ஒருநாள் தமிழாசான் வந்தார்.


பாடத்திற்கு இடையே ஏதோ ஒரு விசயத்திற்காக எடுத்துக்காட்டு சொல்லப்போக தமிழாசான்
“இங்குள்ள இஸ்லாமிய மாணவர்கள் நான் சொல்லப்போகும் வார்த்தைக்களுக்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்றார்.

ஏன் இப்படியெல்லாம் நம் தமிழாசிரியர் பேசுகிறார்?
அப்படி என்ன தான் சொல்லப்போகிறார்?
ஏன் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கிறார்? மனதில் பல கேள்விகள்..என்ன தான் சொல்லப்போகிறார் என்று கேட்க ஆவலானோம்.

ஒருவேளை உலகெங்குமுள்ள இஸ்லாமிய புனித நூலான அனைத்து திருக்குரான்களும் ஆங்காங்கே திரட்டப்பட்டு ஒரே நேரத்தில் எரித்து அழித்துவிடுவதான நிகழ்வு நடந்துவிடுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்.. என்றார் எங்களுக்கு திகீல் என்று இருந்தது.. சொல்வது நம்ம ஆசிரியர் தானா என்று அதிர்ச்சியாக இருந்தது.

பதறாதீர்கள்.. அதற்கு தான் ஆரம்பிக்கும் முன்பே அவ்வாறு கூறி ஆரம்பித்தேன்.. இது ஒரு புரிதலுக்கான எடுத்துக்காட்டு தானே தவிர வேறொன்றுமில்லை.. என்று கூறி மீண்டும் தொடர்ந்தார்.

ஒருவேளை நான் சொன்னது போல உலகெங்குமுள்ள இஸ்லாமிய புனித நூலான அனைத்து திருக்குரான்களும் ஆங்காங்கே திரட்டப்பட்டு ஒரே நேரத்தில் எரித்து அழித்துவிடுவதான நிகழ்வு நடந்துவிடுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்.. என்ன நடக்கும் என்றார்?

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. தலைசுற்றி உட்கார்ந்திருந்தோம்.

வகுப்பே வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருந்தது. எல்லோர் முகத்திலும் இனம்புரியாத மெளனம் ஏனென்றால் இதுபோல எங்கள் ஆசிரியர் பேசி பார்த்ததில்லை.

பிறகு ஆசிரியரே தொடர்ந்தார்.

அது போல ஒன்று நடந்தால்.. உலகில் வேறொரு திருக்குரான் பிரதியே இல்லை என்ற நிலை வந்தாலும் கூட அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகெங்கும் அதே திருக்குரானின் அச்சரப்பிசகு இல்லாத பிரதிகள் உடனே தயாராகும். இந்த அதியசம் வேரெந்த சமூகத்திலும் வேரெந்த மதத்தைப் பின்பற்றுவோரிடமும் பார்க்க முடியாது.

ஏனென்றால் எந்த மதத்திலும் அவர்களின் வேதநூல் வெறும் அச்சில் தான் இருக்கிறது ஆனால் இஸ்லாமிய சமூகத்திடம் மட்டுமே திருக்குரான் உலகெங்கும் மாணவப்பருவத்திலேயே மனதால் மனப்பாடம் இடப்பட்டு அது உலெகெங்கும் வாழும் “ஹாபிழ்” என்று அழைக்கப்படும் திருக்குரானை மனனம் செய்தவர்களால் நிரம்பி இருக்கிறது. இந்த சிறப்பு உலகில் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்றார். வகுப்பில் எல்லோரும் இந்த அரிய தகவலை அறிந்து வியந்தோம்.

இப்படி இஸ்லாமிய செய்திகள் மட்டுமல்ல மதங்கடந்து எதில் நல்ல விசயங்கள் இருந்தாலும் படிப்பினைகள் இருந்தாலும் அதையெல்லாம் பரிமாறி பகிர்ந்து அதிலுள்ளா உண்மையை எடுத்துக்கூறி மாணவ சமூகத்திற்கு கொண்டு சேர்த்து ஒரு எடுத்துக்காட்டு ஆசிரியராக திகழ்ந்த பெருமை எங்கள் தமிழாசிரியர் ஐயா திருநாவுக்கரசு அவர்களைச் சாரும்.

ஐயா அவர்கள் வழுத்தூர் பாலிய முஸ்லிம் சங்கத்தின் மேனிலைப் பள்ளியில் பணியாற்றிய போதும் சரி, சிங்கப்பூர் நன்யாங் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றிய போதும் சரி மாணவர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து இன்றுவரை படித்த மாணவர்கள்கள், படிக்க ஆசைப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் எல்லாச்சமூக சான்றோர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் அன்பு திருநாவுக்கரசு Thiru Arasu ஐயா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

ஐயா குறித்து எழுத பேச ஆயிரம் உண்டு. தனிப்பட்ட முறையில் என்னை நேசித்து அன்பு செய்யும் நறுமணமிக்க நெஞ்சம் அவர்களுடையது.

ஐயா நீங்கள் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு பல்லாண்டென நீடூழி நோய் நொடியின்றி குடும்பம் செழிக்க வாழ வேண்டும் என மனமார்ந்து வேண்டுகிறேன்.

பேரன்புடன்
ஜா.மு.
12-06-2022

நிழற்படத்தில் ஐயா தங்கள் அன்பு பெயர்த்தியுடன்.

கருத்துகள் இல்லை: