27 அக்டோபர் 2018

மகன் நளீர் குறித்து எழுதிய 4 கவிதைகள்

பேரன் நளீரை கொஞ்சிடும் என் தந்தை


சீர்மிகு சிரிப்பினில் பூக்களும் தோற்றிடும் - உன்
சில்லெனும் பார்வையில் பாலையும் பூத்திடும்
சிங்கார பார்வையில் பலஞாயிறு உதித்திடும் - உன்
சின்னக்குறும்புகளால் உலகங்கள் உயிர்பெறும்

நாட்டியம் தோற்றிட நடந்திடுவாய்
வாத்தியம் தோற்றிட பேசிடுவாய்
ஆஹா! உன் அற்புத மழலையால்
ஆயிரம் தேனின்பம் எங்கள் காதினில் குடிபுகும்.

ஆஹா! நீ ஆடிப் பாடி விளையாடுகையில்
ஆனந்தமாய் சிரித்தாடுகையில் வீடெல்லாம் ஒளிமிகும்.

உன் வாயினில் வழிந்தொடும் எச்சில்களில்
தேனினும் விஞ்சிய தித்திப்பு தேங்கிக் கிடக்குதடா

என்ன மொழி பேசுகிறாய் என் மகனே
எண்ணத்தை அள்ளுகிறாய் சொல் மகனே
எங்களுக்கெல்லாம் தெரியாத இன்ப மொழி
இறைவனே கற்பித்தானோ என் கண்மணியே

கவிதைகள் பல எழுதி நான் போற்றுவேன்
காலமெல்லாம் உன்னை நான் வாழ்த்துவேன்
நல்லவனே நளீரே வாழ்க! வாழ்கவே!!

புண்ணியம் செய்தோமடா கண்ணே
உன்னைப் போல் புதல்வனைப் பெற்றிடவே
கண்ணியம் பலப்பலப் நீ பெற்று
விண்ணையும் விஞ்சும் புகழ்பெறுவாய்
என்னையும் உன் தாய் மற்றும் உற்றாரையும்
மகிழ்வில் ஆழ்த்தி சிறப்புறுவாய்

000

புத்தம் புதிதாய் எங்கள் குலத்தில்
பூத்த மரிக்கொழுந்து - நீ
சித்தம் யாவிலும் சிறப்பாய் நிற்கும்
சிரிக்கும் தவக்கொழுந்து


சரித்திரம் ஒன்றை சிறப்பாய் படைக்க
வந்த திருக் கொழுந்து-பல
சாகசம் யாவையும் நிகழ்த்த விருக்கும்
இறையின் அருட் கொழுந்து

அரபு நாட்டில் விளைந்த தங்கமே
அப்துல் கலாமின் கனவே
என்னவள் மணிவயிற்றின் முத்தே
தந்தாய் தந்தை என்றொரு பாக்கியம்

 000

நெஞ்சம் மகிழ்ந்து போனேனடா - நான்
நெக்குறுகி நின்றேனடா

 எத்தனை முறை முத்தம் கொடுத்தாலும்
முற்றுப்பெறவில்லை மோகம்
எத்தனை எத்தனையோ பூக்கள் பார்த்திருக்கிறேன்
எந்த பூவும் ஆகுமோ உன் சிரிப்பூ
எதை எதையோ பார்த்திருக்கிறேன்
அவைகளெல்லாம் தர்வில்லை அழுகை
எத்தனை எத்தனையோ நினைவுகள்
தரவில்லை உன் போல் பூரிப்பு
எத்தனை எத்தனையோ நிலைமைகளை கடந்திருக்கிறேன்
எதுவும் தரவில்லை உன் போல் தவிப்பு
எத்தனை எத்தனையோ மேதைகளை அறிந்திருக்கிறேன்
அவர் தரவில்லை உன் போல் சிலிர்ப்பு
எத்தனை எத்த்னையோ அனுபவங்கள் தினம் தினம்
எவையும் தரவில்லை உன்போல் படிப்பு
எத்தனை எத்தனை பட்டங்களும் தராதடா நீ தந்த மதிப்பு

 000

இந்த வினாடியின் நிகழ்வு குறித்து
அடுத்த வினாடி நினைப்பதில்லை
அடித்தலையும் கண்டித்தலையும்
உண்மையாக வே மறந்து விடுகின்றான்
அவன் இருப்பை மறந்தவன்
அகந்தை இல்லாதவன்
அடுத்த கனம் குறித்த கவலை இல்லாதவன்
இந்த நொடி பூரணமாய் வாழ்பவன்
எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பவன்
மிகப்பெரிய பேராசானாய் திகழ்பவன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மகன் சிறு வயதாய் இருந்த போது எழுதியது

கருத்துகள் இல்லை: