06 நவம்பர் 2018

அகிலத்தின் அருட்கொடையாம்




பல்லவி:
அகிலத்தின் அருட்கொடையாம்
அது எங்கள் அண்ணல் நபியாம்
பாரிதை படைத்தவன்
பரிசளித்த பயகம்பராம்

அனுபல்லவி:
எங்கள் நபிகள் நாயகம்
அவர் புகழ் பாடும் வையகம்

சரணம் 1:
இன்னல்களை சகித்துக்கொண்டு
இறைச்செய்தி தந்தவராம்
இதயங்களில் ஒளியூட்ட
மறை கொணர்ந்த மன்னவராம்

எங்கெங்கும் இருக்கும் இறையை
சிலைக்குள்ளே அடைக்கும் நிலையை
அறிவூட்டி தடுத்தவர் அவராம்
அவரே  எங்கள் அஹமதராம்

உன் நண்பனை பார்க்கும் போது
சிறு புன்னகை உதிர்ப்பதைக் கூட
உயர் அறம் தான் என்றாரே..
நடக்கும் வழியில் கல்லை
கிடக்கும் கூரிய முள்ளை
எடுத்துக் களைவதும் தர்ம மென்றார்

அன்பினில் உலகம் நனைய
அறிவினில் சுடர்கள் எரிய
என்றும் வாழ்வினில் உழைத்தவராம்

சரணம் 2:
பேசிச் சென்ற  பேச்சிலெல்லாம்
பேருண்மை ஈந்தவராம்
வால்வீசி வந்த எதிரியர்க்கும்
ஏகனருள் வார்த்தவராம்

போரில் சிறைபிடித்த பகைவரில் கூட
பெற்ற கல்வி உற்றவ ரிருந்தால்
கற்றுத்தந்து அடைக விடுதலை
கொற்றவன் தூதர் உரைத்தவராம்

தன்மனைவிக்கு நல்லவன் யாரோ
உண்மையிலே நல்லவன் அவனே
என்றே பெருமான் நவின்றராம்
ஒருமூன்று நாளுக்குமேலே
எந்தச்சொந்த பந்தத்தினோடும்
சினம் கூடா தென்றவராம்

பூமியில் சாந்தி தழைக்க
பூத்து  அதுவே செழிக்க
அமைதி மார்க்கம் தந்தவராம்


-  வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


கருத்துகள் இல்லை: