14 செப்டம்பர் 2014

பேராசிரியர் கண்ட வண்ணக்கனவு நனவானது!

சமுதாயத்தின் சரித்திர நாயகர் யாரென கண்டறிந்து அவருக்கு விருதளித்திட வேண்டுமென எந்தச் சார்புமற்ற ஒரு அறிஞரோ அல்லது குழுவோ ஆய்வு நடத்தி முடிவை வெளியிட போகுமென்றால் அதற்கு முன்னதாகவே நாம் சொல்லிவிடலாம் அதற்கு முற்றும் முழுவதும் தகுதியான சீலர் நம் பேராசிரியப்பெருந்தகை என்ற நம் நெஞ்சத்தில் நிலைத்த தலைவரே என. பேராசிரியர் அவர்களின் சிந்தனைகளும், உழைப்பும், சாதித்த சாதனைகளும் அவர்களை மிக அருகில் இருந்து நுணுக்கமாக பார்ப்பவருக்கு மட்டுமே புரியும்.



தலைவர் பேராசிரியர் அவர்கள் சாதித்த சாதனைகளை நாம் பட்டியலிட்டால் இதுவரை தமிழக வரலாற்றில் யாரும் செய்திடாத செயல்களை செய்துகாட்டி பெருமை சேர்த்தவர் அவர்களே தான் என்ற உண்மை புலனாகும். பேராசிரியர் அவர்கள் சமூகத்தின் சரித்திர நாயகர். அவர் புதிரான பொக்கிசம், துல்லியமான சமூகக்கலை வல்லுனர்.. அவர் காயிதே மில்லத் மன்ஜிலை கனவுகண்டார்.. காயிதே மில்லத்தின் கல்பும், ரூஹும் குளிரும் வண்ணம் அதை கண்முன்னே எழுப்பி நிலைநிறுத்தி.. சமுதாய இயக்கத்திற்கென ஒரு தகைசால் அலுவலகம் அமைத்து தாய்ச்சபை நெஞ்சங்களின் எண்ணங்களை மெய்ப்பித்து மகிழ்ச்சியில் நீந்தவைத்தார்.

சந்தனத்தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் அவர்களின் எண்ணத்தில் உதித்து நாளிதழென உயிர்பெற்று மணிச்சுடரென பெயர்பெற்று இருபத்தியெட்டாண்டு காலமாக வரும் பத்திரிக்கையாம் நம் சமுதாய நாளிதழை சிராஜுல் மில்லதிற்கு பிறகு தாம் நடத்தும் பொறுப்பேற்ற பிறகு அதை மேம்படுத்திட, தொய்வின்றி நடத்திட பல சொல்லொண்ணா சிரமங்களை.. துயரஙக்ளை சகித்து பத்திரிக்கை தொடர்ந்து வர எல்லா முயற்சிகளையும் எடுத்து அதை முன்பை விட பட்டித் தொட்டியெல்லாம் சென்று சேர்த்து உலகிற்கு நமது நாளிதழை எடுத்துக்காட்டி வெற்றிகண்டு சிராஜுல் மில்லத் அவர்களின் ஆன்மாவை குளிர்வித்தார் பேராசிரியர் என்றால் அது மிகையே இல்லை.

ஆனாலும், பேராசிரியரின் மனம் இன்னும் எதையோ நாடி நிறைவடையாமல் இருந்தது.. விஞ்ஞானம் வளர்ந்த இந்நாட்களில் எல்லோரும் எப்படி எப்படியான தொழிற்நுட்பத்தினையோ பயன்படுத்தி ஒன்றுமற்ற விசங்களை எல்லாம் பெரிதாக சொல்லி ஏதேதோ செய்கிறார்களே நாம் நம் சமூகத்திற்கான நாளேட்டை.. நம் சமூகத்திற்கான இயக்கத்தின் வரலாற்றை.. இன்னும் நாம் பதிப்பிக்க வேண்டியவைகளை நவீன தொழிற்நுட்பத்தில் செய்தால் எவ்வளவு விரைவாக.. அழகாக.. இன்னும் எளிதாக இருக்கும் என கனவு கண்டார். பணம்.. பொருளாதாரம் போன்றவை அவரது நெஞ்சில் ஏக்கத்தினை உண்டுபண்ணிற்று. கண்களில் கண்ணீர் கசிந்துருகின… இறைவன் ஒருநாள் இதற்கும் வழிவகுப்பான் அன்று நம் கனவு நனவாகும் என்றிருந்தார் நம் பேராசிரியர். இதையெல்லாம் தாங்கள் சென்று வரும் தருணங்களில் மிக நுணுக்கமாக கண்டு மனதில் தேக்கி வைத்திருந்தனர் அமீரக காயிதெ மில்லத் பேரவையின் நிர்வாகிகள்.



சென்ற ஆண்டிற்கு முன்பு நமது அன்பிற்குரிய மில்லத் இஸ்மாயில்அவர்கள் துபை வந்திருந்தார்.. வந்தவர், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் (தாய்ச்சபையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும், காயிதே மில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் லியாகத் அலி அவர்களும், செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்களும் மற்றும் பொருளாளர் கீழக்கரை ஹமீது ரஹ்மானும் கூடி அமர்ந்திருந்த அவையில்… “நம் மணிச்சுடர் நாளேட்டிற்காக அதை செவ்வனே நடத்துவதற்காக, இருக்கும் சில அசவுகரியங்களை களைவதற்காக  சந்தா சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டே என்னை இயக்கத் தலைமையும், தலைவரும் என்னை அனுப்பி இருக்கிறார்கள் இது தான் நான் வந்ததின் நோக்கம்” என்றார்.

“நம் சமுதாய நாளேட்டிற்கு சந்தா வாங்க வந்திருக்கிறீர்களா.. சந்தா எத்தனை மக்கள் கொடுப்பார்கள்.. அப்படியே கொடுத்தாலும் இந்த ஆண்டு கொடுப்பார்கள் அடுத்த ஆண்டு கொடுத்தவரே மீண்டும் சந்தா கொடுப்பார் என என்ன நிச்சயம்? இப்போது நமது நாளேடு மிக பழைய இயந்திரத்தில் அல்லவா வருகிறது, நாம் புதிதாக ஒரு நவீன வண்ண அச்சு இயந்திரத்தையே வாங்கிவிட்டல் நன்றாக இருக்குமே, அப்படி வாங்கினால் நமது மணிச்சுடரையும், பிறைமேடையையும் நாம் அதிலே அச்சடித்துக் கொள்ளலாம் மேலும் மற்ற வெளி அச்சு வேலைகளையும் பெற்று நாமே செய்து கொடுத்து சற்றே நிரந்தர நிதியாதரத்திற்கும் வழிவகை செய்யலாமே.. அதனால் நாம் இதுகாரும் எதிர்கொண்டிருக்கும் நிதிச்சுமை சற்றே குறையும் அல்லவா.!” என்று குத்தாலம் லியாகத் அலி அண்ணன் மில்லத் இஸ்மாயிலிடம் சொல்ல.. இஸ்மாயில் அவர்கள் “அதற்கெல்லாம் அதிக பொருட்செலவாகுமே” என தனது ஏக்கத்தினை வெளிப்படுத்தினார் “அப்படியானால் ஒன்று செய்யலாமே.. அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பாக அதன் பாதித் தொகையை நாங்கள் எங்கள் பங்காக அளிக்கிறோம், மீதத்தொகையை மற்றவர்கள் மூலம் ஏற்பாடு செய்யலாம் இது தான் சரியாகபடுகிறது” என்றார் அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி அண்ணன் அவர்கள், இந்த யோசனையை அங்குள்ள அனைவரும் ஆமோதிக்க அப்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்த பேராசிரியர் பெருந்தகைக்கு உடனே தொலைபேசி அழைப்பு விடுத்து இது தொடர்பாக தெரியப்படுத்த.. மனதில் மகிழ்ச்சி நிறைந்து பேராசிரியர் வரவேற்றார்கள், அவ்வாறே செய்வோம் என நெகிழ்ந்து போனார்கள். 



அதன்படி அமீரக காயிதேமில்லத் பேரவை தனது பங்காக வண்ண அச்சு இயந்திரத்திற்கு ஆன பெருந்தொகையில் பாதியை ஏற்று அளித்தது, மீதத் தொகை இறைவனருளால் பலரும் அளிக்க அதுவும் சேர்ந்தது, இன்று அப்பொருள் வளம் சமூகவளத்தை சீராக்கும் கருவியாய் செம்மைபடுத்தும் கருவியாய் சமுதாய இதழின் வண்ண அச்சு இயந்திரம் வகையாய் வாங்கப்பட்டு மிளிர்கிறது. இது நாளை தன் பணியை இனிதே துவக்க இருக்கிறது. பேராசிரியர் கண்ட கனவு வண்ணமயமாய் நிறைவேறியிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். நமது அன்புத்தலைவரின் கனவு நனவான இவ்வேளையில் சமுதாயப்பணியை தொடங்க இருக்கும் புதிய இயந்திரத்திற்கு “பேராசிரியப்பெருந்தகைக்கான அமீரக காயிதேமில்லத் பேரவையின் பேரன்புப் பரிசு” என பெயரிட்டால் அமீரக காயிதே மில்லத் பேரவையின் அங்கத்தவர்கள் இன்னும் பாக்கியமாக கருதுவார்கள் என்பதை இங்கே இக்கட்டூரை பதிவு செய்கிறது. 



புதிய இயந்திரம் பணியை துவக்க இருக்கும் இவ்வேளையில் நமது தாய்ச்சபைக்கும் சமுதாய நாளிதழான மணிச்சுடருக்குமாக சேர்த்து செயல்பட்ட சென்னை வாலஸ் கார்டனின் அலுவலகத்தினை நினைத்துப்பார்க்கிறேன்.. மணிச்சுடர் துவங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இவ்விதழுக்காக உழைத்த எல்லா ஊழியர்களையும் குறிப்பாக சமீபத்தில் இயற்கையெய்திய தெய்வத்திரு.ரத்தினசிங் அவர்களையும் நன்றியோடு நினைவுகூறுவது சாலப்பொறுத்தம். அவர்களின் உழைப்பு என்றும் வீண் போகாது. அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நிறைவான கூலி நிச்சயம் உண்டு. அவர்கள் சங்கையானவர்கள் என்பதில் ஐயமில்லை.


சற்று முன்புவரை மணிச்சுடர் விடயமாக பலருக்கும் பேச நேர்ந்தது அவ்வகையில் எனது சிரிய தந்தை சவூதியில் இருக்கும் எம்.ஜே.பசீர் அஹமது அவர்களிடம் பேசும் போது அன்றைய தனது இளமைக்காலத்தில் வந்த மர்ஹூம் ஏ.கே. ரிபாயி அவர்களை ஆசிரியராக கொண்டு வந்த உரிமைக்குரல் பற்றியும், அதை மக்கள் படிக்க போட்டிப்போட்டுக்கொண்டு இருந்த நிலைமையையும் பிறகு நாவலர் யூசுப் ஸாஹிப் அவர்களால் நடத்தப்பட்ட மறுமலர்ச்சி பத்திரிக்கை ஏற்படுத்திய அசாத்தியமான புரட்சி பற்றியும், அஞ்சலகத்திற்கு மறுமலர்ச்சி பத்திரிக்கை வரும் போது ஊழியர்கள் மூட்டையாக கட்டி கொண்டு வந்து பட்டுவாடா செய்யும்படியான நிலைமை இருந்தது பற்றியும் பகிர்ந்து கொண்டவர் அது போல நமது மணிச்சுடரையும் மக்களை ஈர்க்கும் வண்ணம் இன்றை காலத்திற்கு ஏற்றார்போல கொண்டு சென்றிட வேண்டும் என்றும், மணிச்சுடர் நாளேட்டிற்காக ஒரு நிதியாதாரத்தை நிரந்தரப்படுத்த ஒரு திட்டம் வேண்டும் என்றும் தனது அவாவை வெளிப்படுத்தினார். இது தான் எல்லாருடைய அவாவும் கூட அதற்கு நமது இயக்க சகோதரர்களும், நண்பர்களும் எல்லா ஜமாஅத்தின் உதவியோடு தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் மணிச் சுடர்வீசிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். சந்தா சேர்த்திட வேண்டும். நிதிதிரட்டிட வேண்டும். இன்ஷா அல்லாஹ். 


வல்லவன் அல்லாஹ்வின் அருளோடும், எல்லா நல்லான்மாக்களின் துஆக்களோடும், ஆனந்த பெருமிதத்தோடும் நாளை நடக்க இருக்கும் வண்ண அச்சு இயந்திர துவக்க விழா மற்றும் ரமலான் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்விற்கும் அமீரக காயிதேமில்லத் பேரவை தனது மனமார்ந்த வாழ்த்தினை மற்றும் மட்டற்ற மகிழ்ச்சியினை தெரியப்படுத்திக் புலங்காகிதம் கொள்கிறது.


நம் சமுதாயத்திற்கு... 
வருங்காலம் வளமாகட்டும்! செழித்தோங்கட்டும்!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ சொன்னது…

மதிப்பிற்குரிய தாய்ச்சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக பெருமக்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நலம்! நலமறிய ஆவல்!! நிற்க!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

கடந்த நான்கு நாட்களாக தாய்ச்சபையின் இணையதளத்தை திறந்து பார்க்க முடியவில்லை.

"HTTP Error 404.0 - Not Found The resource you are looking for has been removed, had its name changed, or is temporarily unavailable" என்று செய்தி வருகின்றது.

தயவுசெய்து சரிபார்க்கவும்.

நன்றி

--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
தற்போதைய சாதாரண உறுப்பினர் (# 550/13),
முன்னாள் அமைப்புக் குழு உறுப்பினர்,
காயிதே மில்லத் பேரவை, குவைத்

அலைபேசி / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம்: (+965) 66 64 14 34 / 97 87 24 82
முகநூல் (Facebook): http://www.facebook.com/khaleelbaaqavee
இணையதளங்கள்: www.k-tic.com / www.mypno.com / www.ulamaa-pno.blogspot.com /www.muslimleaguetn.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live