28 ஜனவரி 2017

சங்கை நபி இசைக்கோர்வை - மலேசியாவிலிருந்து விமர்சனமும் வாழ்த்தும்

மலேசியாவிலிருந்து நமது "சங்கை நபி" ﷺ இசைக்கோர்வைக்கு அன்பின் பாராட்டு. உண்மையிலேயே மகிழ்கிறேன்.
அன்பு சகோதரர் Amz Harun அவர்கள் மிக நுணுக்கமாக பாடல்களை கேட்டிருக்கிறார். இந்த அன்பின் கருத்துரை, வாழ்த்து மேலும் எனக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. பிரியமான சகோதரர் அவர்களுக்கு எனது அன்பும், நன்றிகளும் உரித்தாகுக. இதோ அவரது கருத்துக்கள்.
*****ஏதோ ஒரு ஆல்பம் வெளியிட்டால் போதும் என்றில்லாமல்
ஆன்மீக ஞான சங்கதியை சொல்ல வேண்டும் என்று மிகவும் கவனமாக ஆழமான வார்த்தைகளில் ஞானத்தை சரம் தொடுத்து "சங்கை நபி" சூஃபி பாடல்கள் தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார் வழுத்தூர் மண்ணின் மைந்தர் கவிஞர் முஹையதீன் பாட்ஷா அவர்கள்.மிக நீண்ட நாட்களுக்குப் பின் இஸ்லாமிய பாடகர் அபுல் பரக்கத் அவர்களின் கம்பீர குரலும் சேக் மசூத் அஹ்மது அவர்களிம் இசையில் பாரம்பரிய இசை வாத்தியங்களும் நம்மை வசியம் செய்து மெய் மறக்க செய்கிறது.இது காது மட்டும் கொடுத்து கேட்க வேண்டிய பாடல்கள் அல்லவே அல்ல.
கல்பில் நிறுத்தி லயிக்க வேண்டிய பாடல்கள்
என்றால் அது மிகையில்லை.
கவிஞர் J Mohaideen Batcha அவர்கள் எனக்கு முகநூல் நண்பர்.அவர் ஊருக்கும் எனது ஊருக்கும் ஒரு சொல் தான் வித்தியாசம். அவர் வழுத்தூர்.நான் வழுதூர்.அந்த ஒற்றுமை தான் எங்களை ரசனையில் ஒன்று சேர்த்திருக்கிறது போலும்.இப்பாடலை தனிமையில் கேட்டு ரசித்த போது அவருடைய ஆன்மீக அறிவையும் அன்னைத் தமிழில் அவரின் புலமையையும் கேட்டு கேட்டு வியந்தேன்.


அப்பாடல்கள் பற்றிய அடியேனின் சிறிய விமர்சனம் இதோ....
முதல் பாடல்...
அகிலங்களை படைத்து பரிபாலிக்கின்ற எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் கருணையை போற்றி புகழ்ந்து
துவங்குகின்றது இப்படி...
"எங்கும் நிறைந்தாளுகின்ற ரஹீமே" பாடலில் அல்லாஹ்வின் பேரருளை பாடும் கவிஞர்
"இருட்டினில் சென்றேன் ஒளியென வந்தாய்
தனிமையில் நின்றேன் துணையெனத் தந்தாய்
எழுதிட முனைந்தேன் சொல்லென பிறந்தாய்
படித்திட நினைத்தேன் பொருளென விரிந்தாய்
மகிழ்ச்சியில் திளைத்தேன் இன்பமாய் இனித்தாய்
வருத்ததில் ஆழ்ந்தேன் நெருக்கமாய் இணைந்தாய்" என்று
எதிலும் அவனை கண்டு சிலிர்க்கின்றார்.
அடுத்து... "சஞ்சீவியே" பாடல்.
கவ்துல் அஹ்லம் முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் சிறப்புக்களை புகழ்ந்து பாடுகிறார்."துவைதம் எல்லாம் தொலைந்து போக
அத்வைதம் அணைந்து நிற்க
சக்தனின் சக்திதனிலே
முக்தி நிலை சித்தி பெற
சைதண்ய சங்கமத்தில்
செய்யிதே சேர்த்தருள்வீர்" என்று குரு நிலையில் வைத்து
மோட்சம் தேடும் சிஷ்யனாக உறுகுகிறார் கவிஞர்.
தொடரும் பாடல்...
"சலவாத்தை அனுதினமும் ஓதியே புகழ்ந்திடுவோம்
அல்லாஹ்வின் அருள் உண்டு .அண்ணலாரின் ஆசியுண்டு" எனும் பாடல் ஸலவாத்தின் சிறப்பை கூறுகிறது.
"காதலராம் ஆதம் நபி கண்ணீர் ஹவ்வாவை கைப்பிடிக்க முதல் மஹராக தந்த சிகரமதை
சிறப்புடனே பகிர்ந்திடுவோம்" .
இரண்டாவது சரணத்தில்..
"போராட்ட வாழ்க்கையது அழகு
தேரோட்டம் ஆகிடவே இறைவன்
பாராட்டும் நபி மீது
சீராட்டை சாற்றிடுவோம்
கண்ணீர் மழையில் கன்னம் நனைந்தால்
உள்ளக் குமுறலில் உயிரே சிதைந்தால் நல்ல நேரம் பிறக்க வேண்டி நாயகரை போற்றிடுவோம்". ஆஹா...ஸலவாத்தின் மகிமையை என்ன ஒரு அழகு தமிழில் அடுக்கி இருக்கிறார் கவிஞர்.
அடுத்து...நாகூர் ஆண்டவர்கள் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களை பாடுகிறது காதிர் வலி கஞ்சவாய் நாகூரி எனும் பாடல்.
"பயகம்பர் வீட்டுப் பிள்ளை
பயம் போக்கும் வாசமுல்லை
ஹஸ்ஸன் குத்தூஸ் பரிசளித்த
மாசில்லாத ஞானக் கிள்ளை"
என்று தொடரும் பாடலில்
"தமிழகம் தேடிக்கொண்ட
"தலைவனின் பாக்கியமே
அமிழ்தூரி நாவினிக்கும் மெய்ஞான வாக்கியமே"
எனும் அழகு தமிழில் வர்ணிக்கிறார் பாடலாசிரியர்.
தொடர்ந்து
அஹ்லுல் பைத்தை மறந்து நாம் வாழ்வதா..?
அநியாயம் இல்லையா" எனும் பாடலில்
"அன்னையவர் கதிஜாவின் வாழ்க்கை எல்லாம் தியாகமம்மா
ஆருயிராம் ஃபாத்திமாவின் ஆயுளெல்லாம் சோகமம்மா
ஆட்சி செய்ய விடவில்லையே மாட்சிமிக்க அலி தன்னையே
சூழ்ச்சி செய்து விஷம் கொடுத்தார் ஆட்சிக்காக
ஹஸன் அவர்க்கும்"
என்று நபியின் குடும்பத்தினரின் தியாகத்தை கேக்கும் போது நெஞ்சம் விம்முகின்றது.
அடுத்த பாடல்...
"பெரும் காதல் உணர்வோடு நபியை
பேரருளாக தந்தானே புவியில்" பாடலில்
ஆதத்தின் சாரம் அவன் சமைக்கும் முன்பே
அஹமதின் நாதம் அவன் ஆக்கி வைத்தான்" என்று அண்ணலம் பெருமானார் ரசூலே கரீம் அவர்கள் நூராக நபி ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களுக்கு காட்சி தந்ததை வர்ணிக்கும் அழகோ அழகு.
தொடரும் பாடல்..
"பொன்சிரிப்பு பூமகனே
கேளடா கண்ணே" பாடலில்
அனுபவிக்கும் யாவையுமே ஆய்ந்து பார் கண்ணே
அதில் ஆன்மீக விளக்கங்கள் கிடைத்திடும் கண்ணே
தவ்ஹீதின் தெளிவில் நீ லயித்திடு கண்ணே
என்றும் லவ்கீக வாழ்விலும் நீ ஜெயித்திடு கண்ணே"
என்று ஒரு பிள்ளைக்கு து வாழ்வையும் மறுமையும் வாழ்வையும் போதிக்கின்றார் கவிஞர்.
அடுத்த பாடல்
"ரபியுல் அவ்வல் மாதம் இது" பாடலில்
" மாதங்கள் அனைத்தின் சிரிப்பிது
வேதங்கள் அனைத்தின் பிறப்பிது
மானுட இனத்தின் சிறப்பிது
மகிமைகள் அனைத்தின் திறப்பிது" என்று அந்த மாதத்திற்கு அழகு தமிழில் மகுடம் சூட்டுகிறார் கவிஞர்.
அடுத்து "உயிரைத் திரட்டி பாடலோடு"
மொத்தம் ஒன்பது பாடல்கள்
இந்த "சங்கை நபி" ஆன்மீக சூஃபி பாடல்களின் தொகுப்பில் நிறைந்திருக்கின்றன.ஒவ்வொரு பாடலிலும்
கவிஞர் J.முஹைதீன் பாட்ஷா அவர்களின் பரந்த சிந்தனைகள் சிறந்து வெளிப்பட்டிருக்கின்றது.

https://www.facebook.com/jmbatcha/posts/10208241939395370?pnref=story

(குறிப்பு- என் பாடல் விமர்சனத்தில் பாடல்களின் வரிசை வேறுபட்டிருக்கின்றது)
வாழ்த்துக்களுடன் A.M.Z.ஹாரூன்


கருத்துகள் இல்லை: