30 ஜனவரி 2017

மகாத்மாவுடன் செல்ஃபி வேண்டாம்.


மகாத்மா
"நீ கூடாரம் அடித்திருக்கும்
இந்தியர்களின் நெஞ்சத்தில்
உன்னை அகற்றிவிட்டு
அவர்கள் இடம்பிடிக்க நினைக்கிறார்கள்".
"அதற்கு நான் பிடித்த
இராட்டினத்தை சுழற்றி
புகைப்பட போஸ் கொடுத்தால் போதுமா"
இது மகாத்மாவின் வினா.
கேள்வி கேட்காதே மகாத்மா
நீயும் தேசவிரோதியாகிவிடுவாய்
அதிலும் குறிப்பாக
பிரதான மந்திரியார் குறித்து
ஏதும் சொல்லிவிடாதே, அவ்வளவு தான்.
அரைக்கால் சட்டையிலிருந்து
முழுக்கால் சட்டைக்கு மாறிய கூட்டம்
உன் முன்னேயே "பாரத் மாதாகி ஜே" கோசம் போடும்.
உன்னையே உன் தடி கொண்டே சாடும்
வயசான நீ அதையெல்லாம் தாங்கிடுவாயா..?
நேற்றுகூட தாத்தா,
கடற்கரையில் காற்று வாங்க தடை உத்தரவாம்
காவிகள் பேரணிக்கோ
நகரெங்கிலும் சிவப்புக்கம்பளமாம்
அதனால் என் தாத்தனே...
நீ உள்ளுக்குள் அழுதாலும்
ரூபாய் நோட்டில் நீ சிரிப்பதை போலவே
உன் பொக்கை வாய்
வெள்ளந்தி புன்னகை காட்டிவிட்டு
கீழே எங்கும் வீழுந்துவிடாமல்
தட்டுத் தடுமாறி எங்காவது போய்விடு
பிறகு, மீண்டும் முஹம்மது இஸ்மாயில் பேரில்
கோட்சேக்கள் தயாராகிவிடுவார்கள்
பாவம் நீ எத்தனை முறை தான் சாவாய்!
ஆமாம் தாத்தா..
இறுதியாய் ஏதோ சொல்ல வருகிறாயே..
என்னது ..
என்னுடன் நீ
செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டுமா...
வேண்டாம் தாத்தா.. வேண்டாம்
ஏன்?
சமூக விரோத தலைவரோடு
போட்டோ எடுத்துக்கொண்டாய் என்று
தேசவிரோத சட்டம் ஏதாவது என்மேல் பாயும்.
அதிலும் நான் இஸ்லாமியன் வேறு!
அடடா.. இவ்வளவு நேரம் உன்னோடு பேசிவிட்டேனே
இனி  என் தேசபக்தியை நிரூபிக்க
நானும் ஒரு முறை சொல்ல வேண்டுமே
" பாரத் மாதா கி ஜே!"
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
30-1-2017

இன்று ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதியால் மகாத்மா காந்தி சுடப்பட்ட தினம்.

கருத்துகள் இல்லை: