23 அக்டோபர் 2025
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி
நான் படித்த கல்லூரி இது பற்றி
மனமெல்லாம் கள்ளூறி
நாளெல்லாம் எங்கள் நாவுரைப்பதை
நானும் இங்கே
பகிர வந்திருக்கிறேன்
பதிக்க வந்திருக்கிறேன்.
ஆர் டி பி,
அவர் தான் எங்களின் கம்பீர
டி பி களுக்கு பின்னால் இருப்பவர்.
அவருக்கு எங்கள் முதல் நன்றி,
எங்கள் பெருமிதம்
சாத்தியமே இல்லை அவர் இன்றி.
கல்வி என்பது சமுதாயத்தில்
ஒருபால் சார்பாய் இருந்ததை
அண்ணல் நபிமணியின்
கண்ணல் மொழிப்பிரகாரம்
ஆண்பால் பெண்பால் என
இருபாலருக்கும் பொதுவென
இப்பிரதேசத்தில் சாத்தியப்படுத்தி
சாதனை செய்தது ஆர்டிபி.
தூரத்தின் முதுகில்
பயணம் அனுப்பிப்
படிக்க வைக்க வேண்டுமே
என்றே தள்ளி வைக்கப்பட்ட
எங்களின் மேற்படிப்படிப்பை
அதாவது இப்பகுதி
பெண்களின் மேற்படிப்பைப்
பக்கத்தில் கொண்டு வந்து
பட்டம் கொடுத்தது ஆர்டிபி.
ராஜகிரியிலிருந்து புறப்பட்டு
அமீரகத்தில் பணியாற்றி
தமிழ் உணவகமாய்
பலரின் பசியாற்றி
பொருள் சேர்த்தவரால்
எங்கள் இருள் நீக்கிவைத்தது ஆர்டிபி
வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது ஆர்டிபி.
ஆம் பாபத்தைப் போக்கி வைக்கும்
பாபநாசத்தில் உண்மையாகவே
அறியாமைப் பாவத்தைத் துடைத்தெறிந்தது
அறிவுக்கோட்டையாம் ஆர்டிபி யாவருக்கும்
பரிவுக் கோட்டையாம் ஆர்டிபி.
அதனால் இன்று
வாழ்வைப் புரிந்தோம்
வாழ்வில் உயர்ந்தோம்
எந்நாளும் எங்கள்
ஆழ்மன நன்றி ஆர்டிபி.
வாழ்நாள் நன்றி ஆர்டிபி.
-மேனாள் மாணவி முவாஃபிகா
14-07-2025