02 மே 2011

மாயமாகி..


எங்கே போய் சொல்லுவேன்…
யாரிடம் போய் முறையிடுவேன்…
நான் ரசித்து..ரசித்து எழுதிய கவிதைகளை
தொலைத்து நிற்கிறேன்.


அரங்கேற்றிவிடலாம் என ஆசையாய்
என் கோப்புகளை புரட்டிப் பார்க்க
அது கிடைக்காமல் போகவே
ஓசையில்லாத அழுகையும்..
மன வெருட்சியும் கூடிக்கொண்டன..!


என் இதயத்திலிருந்த
பாசைதெரியாத அந்த உணர்வுகளை
அந்த நேரத்து பேனாவுக்குத்தான்
இயற்கை ஆணையிட அது எழுதியது
எங்கே தேடுவேன் -அந்த
அர்த்தமுள்ள சுவாசிப்புகளை..!

யாருக்குமே தெரியாமல்
நான் சமைத்து வைத்த
உயிரில் இனிக்கும்
இனிப்புப் படையல்கள் அவை.

பிரிவுகள் தந்த
பாடல்களில்
இரவுகளை ஆக்கிரமித்த
என் இதயம் வருடிய
வரிகள் தான் அவை.

படித்துப் படித்து நானே மயங்கினேன் - ஆனால்
கொஞ்சம் அந்த அம்மண தேகத்திற்கு
கொஞ்சும் அழகு சேர்க்க
சற்று சட்டைப்போட்டு
வெளியே அனுப்பலாம் என்றிருந்தேன்.

என்ன செய்ய..அதற்குள்
எங்கோ யாரோ ஏதோ செய்தார்கள்..
அறியவில்லை..

அன்றைய என்னை
அதில் தானே இறக்கி வைத்தேன்.. -இனி
காணாத அந்த நான்
அதிலும் தொலைந்தேனோ..

அந்த கவிக்குடுவையில்
நான் அடைத்து வைத்தது
என்னை தேடிய
என் அவளின் அழுகை,
என்னோடு என் மகனின் சிரிப்பு..
அவர்கள் எல்லாரிலும் கலந்த என் இதயம்..!
இன்னும் எத்தனை எத்தனையோ…!

ஏங்கி இருக்கும் எனக்கு -அது
எப்போது கிடைத்தாலும்
எல்லையற்ற மகிழ்வுதான்..!
அடங்காத துள்ளல் தான்..!

எங்கே போய் சொல்லுவேன்…
யாரிடம் போய் முறையிடுவேன்…
நான் ரசித்து..ரசித்து எழுதிய கவிதைகளை
தொலைத்து நிற்கிறேன்.






என்றும் அன்புடன்,
ஜே.எம்.பாட்ஷா


கருத்துகள் இல்லை: