கீழ்கண்ட கவிதை தஞ்சை மாவட்டம் வழுத்தூர் சாலைத் தெருவில் செளக்கத்துல் இஸ்லாம் பாலிய முஸ்லிம் சங்கம் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே முன்பு இருந்த "சிக்கந்தர் படிப்பகம்" பற்றியதாகும், சிறப்பாக இயங்கி வந்த அந்நூல்கம் பின்னாளில் நலிவடைந்த நிலையில் இருந்த காரணத்தால் அதை மீட்டெடுக்க வேண்டி 1996-97-ல் மறைந்த சாலைத்தெரு துருவத்தார் ராஜ் முஹம்மது அவர்கள் மகத்தான களப்பணியை மேற்கொண்டார். அதில் பலரும் சிறப்பாக பங்கெடுத்தனர். (அதைப்பற்றிய பதிவு ஒன்றை கண்டிப்பாக எழுத வேண்டுமென என் மனம் நாட்டம் கொண்டுள்ளது) அத்தருணத்தில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கவிதை பெரிய தாளில் (Chat paper) எழுதி தொங்க விடப்பட்டு அது சில ஆண்டுகள் வரை அங்கேயே நிலைத்திருந்தது. அதை பதிவு செய்யவே இங்கே இடுகையாக்கினேன்.
இளஞ்சிங்கங்களே!
சமுதாய அங்கங்களே!!
சிக்கந்தர் படிப்பகம்
சிந்தனை சிறகுகளின் சிம்மாசனம்,
அறிவின் ஆலயம்,
நாளிதழ், வார இதழ் , மாத இதழெல்லாம்
பீடுநடை போட்டுவரும் நூலகம்.
வந்தாரை வாழவைக்கும்
வழுத்தூரில் வகையின்றி நம்
படிப்பகமும் வாடலாமோ?!
நம் முன்னோர்
செதுக்கி வைத்த சிற்பமல்லவா - அது
சிறப்பிழந்து போகலாமோ?
மலர் பொய்கையாய் இருந்த போது
மகிழ்ச்சிக் கனாக் கண்டு
தாதுண்ண வரும் வண்டுகள் போல்
தேடி வந்த தகைசால் பெரியீர்!
தார்பாலையாய் நூலகமும்
தரம்மாற தலையசைக்கலாமோ?
ஆயிரம் நூல்கள் இருந்ததே
பாயிரம் பாடத்தான் ஆளில்லை!
ஆன்மீகம், அறிவியல், அரசியல்
பால்நிகர் வரலாறு, இலக்கிய படைப்புக்கள்
எதில் குறை?
பொழிவு பெற வேண்டுமானால்
பொருள் தாரீர்! - இன்றேல்
பொன்னகை நிகர் செயல் தாரீர்!! - இன்றேல்
பொதிகை தென்றல் நிகர் சொல் தாரீர்!!!
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
என் நோட்டு புத்தகத்தில் அன்று எழுதி வைத்திருந்த அந்த வரிகள் உங்கள் பார்வைக்கு.
1 கருத்து:
இலக்கியவாதிகளின்
இறக்கைகளுக்கு
ஓய்விடம்..
கருத்துரையிடுக