21 அக்டோபர் 2019

பேரோவியக் குறுநகை

எத்தனை பேரோவியக் குறுநகை
கண்ணெதிரே அரங்கேறிய அதிசயம்
என்ன நினைத்திருக்கும் குழந்தை!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கவிதை என்பது...

உணர்வும் மொழியும் கூடி பிறக்கும் குழந்தை
எண்ணங்கள் வண்ணம் பெற்று 
ஆடிடும் மொழி வழி நடனம்
கவித்துவத்தோடு நாம் மொழியை சுவைக்க வேண்டி ஆக்கிடும் வித வித மொழிச் சமையல்
சலிப்பூட்டும் சொற்களை பொருளை புகுத்தாமல் அதை கவனமாக புதிய முறையில் பயன்படுத்தி, புதிய பொருள்ல்ல.. புதிய உலகிற்கே கொண்டு போவது போலிருந்தால் ரசனை மிகும்.
ஆதலால் வெறும் சொற்களை அடுக்குதலோ அல்லது கட்டாய பொருட் திணிப்போ கவிதைக்கு உடன்பாடானது அல்ல.
உணர்வை, துய்ப்பை, அனுபவத்தை மொழியின் வழியே சுவை கூட்டி சொல்லும் போது ஓரெழுத்து கூட அருங்கவியாகி நிற்கும்
எந்த சூழலில் கவிதை வெளிப்படுகிறதோ அவ்வாறே வெளிப்படுத்தும் போது இது மட்டும் தானெனும் கட்டுப்பட்ட பொருள் எல்லைக்குள் அடக்கிக்கொள்ளாது அது படிப்பவரின் அறிவுக்கேற்ப மனதினுள் விரியும்.
பெற்ற உணர்வை உற்றவாறே மொழிதல் கவிதை.
-ஜா.மு.
சென்ற ஆண்டில் இதே நாள் கவிதை குறித்த விவாதத்தில் நானிட்ட பின்னூட்டம்
முகநூல் இணைப்பு
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

17 அக்டோபர் 2019

நிலவிடம் நான் இதயமிழந்தவன்

நிஜக்கவிஞர்கள்
கொடுத்துவைத்தவர்கள்
சதா இறைவனின் சொல் கொண்டு
தீராத பிரம்பிப்பை 
எட்டுத்திக்கும் தித்திக்க 
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.


***
இசையிடம் மனதினை
ஒப்படைத்த பின்பே
வசமாகிறது பயணங்கள்.
தூரங்கள் தெரிவதெல்லாம்
இசை தீர்ந்த பிறகு தான்!


***
பெட்டியில் நீந்தும்
தங்கமீன்களெல்லாம்
பெயரளவில் தான்,
நிறத்தை தவிர்த்து
தங்கத்தின் குணங்கள் 
ஏதுமிலாதவை.


***
பாடல் பாடச்சொன்னால்
பால்நிலாவையே
கரைத்து புகட்டுகிறாய்,
நிலவிடம் நான்
இதயமிழந்தவன் என்பதை
யாருனக்குச் சொன்னது?



***
போட்டி போட்டு
பல்லக்கு தூக்குகிறார்கள்
மிகுந்த வாஞ்சையோடு
கடவுளுக்கொப்ப சிலாகிக்கவும் 
தயங்குவ தெல்லாமுமில்லை

தூக்கிவந்த வேகத்தில் கடலில்
போட்டு தாண்டவமாடிக் களித்து
மிதிக்கையில் தான் தெரிகிறது

அவர்கள் ஒருபோதும்
கடமையிலிருந்து
முற்றும் தவறுவதில்லை யென,

புரிந்தவன் எப்போதும்
கால்களால் நடக்கிறான்
அவனது பல்லக்கு சாய்வதேயில்லை.

***
இம்மாநிலமே உன் அரசாங்கம்
நாட்டின் ராஜாவே நீ தான்
இப்பேரண்மனையே உன் குடில் என்றாலும்
வாசல் படியிலேயே சோம்பல் முறித்து 
படுத்துக்கொள்கிறது தெருநாய்.

***
இத்தனை நாளாய்
உயிரூட்டி வளர்க்கிறேன்,
பூக்காமலா போய்விடும்?
வாழ்நாளிலோர் கவிதை!
.
16/10/2019 இரவு எழுதிய கவிதைகள்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 மே 2019

ஆனந்த தேன்மாரி

ஆத்மாவில் சுரக்கிறது
ஆனந்த தேன்மாரி

எல்லை யில்லா மகிழ்ச்சியின்
மரகதப் பெருவெளி
சொல்லிக்கொள்ளாது திறக்க,
நிறத்தோடு மாயும் நீராய்
திளைத்து லயிக்கிறது
பெற்றோர்தம் மனது.

வெய்யிலில் சோர்ந்திடும்
வரண்ட நிலச்செடி போல்
பொய்யில்லா பசி தாகத்தால்
நாள் முழுக்க வாடி வதங்கியும்...

பிள்ளைகள்,
துள்ளிக்கொண்டு
ஆசை பாஷைகள்
ஆயிரம் பேசி
அருளான காட்சிகளால்
நம்மை நனைக்கிறார்கள்

நிறைவு செய்த
முதல் நோன்பிற்கு பிறகும்,
மீண்டும் தொடர்
நோன்பு வைக்க.

இறைவா
நிறைவாய் நீ
அவர்களுக்கருள்!

செய்தி: மகனும், மகளும் இவ்வாண்டின் முதல் நோன்பை இறையருளால் நிறைவு செய்தனர். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு. எங்களுக்கும் தான்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
07-05-2019