01 நவம்பர் 2025

சிராஜுல் மில்லத் என சீலம் அழைக்கும் சீலர்

அன்புத் தலைவரே

அருள்மிகும் சிங்கமே

சிராஜுல் மில்லத்தென

சீலம் அழைத்த சீலரே


உங்களைக் குறித்து

என் நினைவுகளை எழுத 

நிறைய எழுத்துக்கள் தேவை - ஆனால்

கொஞ்சம் தான் எழுதப்போகிறேன் 

இது என் உணர்வுகளின் கோர்வை!


உங்கள் குணாதிசயம் போலத்தான்

உங்களைப் பற்றி எழுதினாலும்

தமிழும் சாந்தமாகவே பிறக்கிறது

மணக்கும் சந்தனமாகச் சிறக்கிறது!


அமிழ்தாம் மறைகுர்ஆன்

தமிழ் தனில் தர்ஜுமா

கமழ்ந்திட எங்கெங்கும்

ஓதிடும் போழ்தினிலெல்லாம்

அகதோன் மகிழ்கிறான் - அப்துல்

சமதிற்கும் அருள்கிறான்.


ஏனெனில்,

இலட்சம் சிறப்புகள் 

பெற்றத் தமிழ் மொழி

இரட்சகன் பேசிய 

வேதவழியும் பெற,

தந்தையுடன் முழுச்சிந்தையுடன் 

வேதத்தமிழுக்கு செய்திட்ட

திருத்தொண்டு அது

இளம் வயதிலேயே 

இறைவனுக்காய் நீங்கள்

ஆற்றிய பெருந்தொண்டு.


தலைவர்....

பல்துறை சார்ந்த அறிவில்

மேதாவிசாலம் கொண்ட நூலகம்

மண்தரை மக்களை அணைப்பதில்

மாதாவிசாலம் கொண்ட வானகம்.


அவர்...

பாராளும் இறைவனின் 

பேராலயம் கழுவ

அரபு நாடாளும் அரசரின் 

விருந்தினரானார்.


தேவாலயத் தலைவர் 

போப்பாண்டவர் அழைத்து

ரோம் தலைநகர் வாடிகன் செல்ல 

எல்லோரும் அதிரச நல்லிணக்கம் 

அறுஞ்சுவை அருந்தினாரானார்.


சிராஜுல் மில்லத் பேசினால்...

சலசலக்கும் ஓடையும் கூட

சத்தம் நிறுத்தி சந்தம் கேட்கும்

சிலுசிலுக்கும் தென்றல் காற்றும்

உலவ மறந்து உரையைக் கேட்கும்


கொள்கையில்

சுட்டு வீசும் "சூரியனும்" 

கட்டுப்பட்டு தமிழ் சுவைக்கும்.


மக்கள் மனம் வென்ற "சந்திரனும்'

கன்றெனவாகி தமிழ்மடி சேரும்.


'அல்லி'க்கும் கூட அவர்

சொல்லின் மீது பிரியம் வரும்.


அழகிய குரல் நாதவினோதத்தில் 

உள்நுழைந்து வந்த போது தான்

தமிழே தன் குளிர்ச்சியை 

தானே சுவைத்து குளிர்ந்தது

கிளர்ச்சி அடைந்து மகிழ்ந்தது.


மேடைப்பேச்சின் மன்னவரவர்

இனிய சொற்கள் மூலமே

பெரிய சமரொன்றைப் புரிவார்

அவரின் சொல் மாறி

அபாபீல்கள் கால் சுமந்த 

சொற்'கல் மாரியாக

எதிரிகளின் இதயத்தில் விழும்

சிலிர்த்து வியக்கும் நிலம்.


அப்துல் சமது 

சொன்னால்..

சமுதாயம் தமது 

என்று ஏற்றது ஓர் காலம் - அது

சமது என்றால் சமுதாயம் என்ற 

அழகியநிலாக் காலம்.


இஸ்லாமிய சமூகத்தின் இணக்கமான 

கால் நூற்றாண்டுத் தலைமை அவர்

சமுதாயத்தை யார் வந்தும் சீண்டாது

வால் ஒடுக்கி அடக்கிவைத்த தலைவரவர்

நமக்குள்ளேயே நாள் முளைத்து வந்த

இயக்கங்களெல்லாம் கால் பதிக்காமல்

காத்திட்ட பெருஞ் சுவரவர் 

அப்துல் சமதவர்....


எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சிறப்பு

திமுகழகத்திற்கும் 

முஸ்லிம் லீக்கிற்கும் கிடைத்தது.

அது கலைஞர் கருணாநிதி

அறிஞர் அப்துல் சமது என்ற

பன்முக ஆளுமை 

தலைமையாய் கிடைத்தது.


திமுகவோடு கூட்டணி முறிந்தால்

முகவிற்கும் சமது சாஹிபிற்கும்

நடக்கும் பத்திரிகை

அறிக்கை அம்புகளுக்காக

தெறிக்கும் மேடைபேச்சால் நடக்கும் 

வேல் வீச்சுக்களை நாடே ரசித்திருக்கும்

எந்த சூழலிலும் அவர்தம்

தமிழ் இன்பம் கொடுக்கும்.


நிலம் உழுது பயிர்வளர்த்து உணவூட்டும்

உழவன் போல - உணர்வோடு

களம் கண்டு கட்சிவளர்க்கும் 

தொண்டன் மீது

எப்போதும் ஒப்பில்லா 

அன்பைப் பொழிவார் தலைவர்.

பாசத்தலைவரை பார்த்துப்பார்த்து

சீனியில் சிக்கிய எறும்பாவான் தொண்டன்.

மொய்க்கும் தொண்டர்களின் 

மனம் ஜெயித்தது

அவர் கரிஷ்மாவால் மட்டுமல்ல..

காட்டிய கரிசனத்தாலும் தான்.


ஆனால் அவரின் 

முகமலர் பார்க்காத

அகமலர் திறந்த

எழுச்சிப் பிறைக் கொடி 

இளைஞர் கூட்டம் எழுந்து வருகிறது 

அந்த இணையக்கூட்டம்

இணைந்தே தேடி இன்று

புதைந்த சரிதம் மீட்கின்றது.


சரித்திரம் பதிய சகுனம் பார்ப்பதா?

நிகழ்ந்ததைக்கூற நேரம் காலமா?

தியாகத்தை நினைக்க தேதி தேவையா?

இத்தனை நாள் வித்தகரது

முத்தான வரலாறு

எத்தாமல் போய்விட்டதே

என்று நித்தமும் தேடி

இணையத்தில் பகிர்கின்றார்

இன்பத்தைப் பகர்கின்றார்

இதயமெலாம் பசுமை படர்கிறது.


அது மட்டுமல்ல..

சிங்கத்தலைவரவர் 

சங்கத்தமிழ் முழக்கம்

எங்கு கிடைத்திட்டாலும்

யாரிடம் எந்த ஊரிலும் இருந்திட்டாலும்

பிறைக்கொடி பேரிளங்கூட்டமே

ஓடிச்சென்று 

சேகரம் செய்திடுவீர் 

நாடு நகரமெல்லாம் - 

இன்பத் தமிழ்

சாகரம் காணட்டும்

இணக்கத்தமிழை

இணையத்தில் ஏற்றிவைப்பீர்

வணக்கத்திற்குரியவன் உங்களை

எல்லார் இதயத்திலும் ஏற்றிவைப்பான்.


அன்புடன்,

ஜா.முஹையத்தீன் பாட்ஷா.


- ஜா.மு

23 அக்டோபர் 2025

தகைசால் தமிழர் காதர் மொகிதீன் அவர்களுக்கு வாழ்த்து



நன்றி மணிச்சுடர் நாளிதழ் 07-10-2025
- ஜா.மு

ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி

நான் படித்த கல்லூரி இது பற்றி

மனமெல்லாம் கள்ளூறி

நாளெல்லாம் எங்கள் நாவுரைப்பதை

நானும் இங்கே 

பகிர வந்திருக்கிறேன்

பதிக்க வந்திருக்கிறேன்.

 

ஆர் டி பி,

அவர் தான் எங்களின்  கம்பீர 

டி பி களுக்கு பின்னால் இருப்பவர்.

 

அவருக்கு எங்கள் முதல் நன்றி,

எங்கள் பெருமிதம் 

சாத்தியமே இல்லை அவர் இன்றி.

 

கல்வி என்பது சமுதாயத்தில்

ஒருபால் சார்பாய் இருந்ததை

அண்ணல் நபிமணியின்

கண்ணல் மொழிப்பிரகாரம்

ஆண்பால் பெண்பால் என

இருபாலருக்கும் பொதுவென

இப்பிரதேசத்தில் சாத்தியப்படுத்தி

சாதனை செய்தது ஆர்டிபி

 

தூரத்தின் முதுகில்

பயணம் அனுப்பிப் 

படிக்க வைக்க வேண்டுமே

என்றே தள்ளி வைக்கப்பட்ட 

எங்களின் மேற்படிப்படிப்பை 

அதாவது இப்பகுதி 

பெண்களின் மேற்படிப்பைப்

பக்கத்தில் கொண்டு வந்து 

பட்டம் கொடுத்தது ஆர்டிபி.

 

ராஜகிரியிலிருந்து புறப்பட்டு

அமீரகத்தில் பணியாற்றி

தமிழ் உணவகமாய் 

பலரின் பசியாற்றி

பொருள் சேர்த்தவரால்

எங்கள் இருள் நீக்கிவைத்தது ஆர்டிபி

வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது ஆர்டிபி.

 

ஆம் பாபத்தைப் போக்கி வைக்கும் 

பாபநாசத்தில் உண்மையாகவே

அறியாமைப் பாவத்தைத் துடைத்தெறிந்தது

அறிவுக்கோட்டையாம் ஆர்டிபி யாவருக்கும்

பரிவுக் கோட்டையாம் ஆர்டிபி.

 

 அதனால் இன்று 

வாழ்வைப் புரிந்தோம்

வாழ்வில் உயர்ந்தோம்

எந்நாளும் எங்கள் 

ஆழ்மன நன்றி ஆர்டிபி.

வாழ்நாள் நன்றி ஆர்டிபி.

 

-மேனாள் மாணவி முவாஃபிகா

14-07-2025

 



01 ஆகஸ்ட் 2024

ஒவ்வொரு நாட்களுமே

ஒவ்வொரு நாட்களுமே.. சுப்பர் சிங்கர் பரீதா



ஒவ்வொரு நாட்களுமே விடிகிறதே

நபிநாதர் மஹமூதர் ஒளியாலே

ஒவ்வொரு நாட்களுமே நிறைகிறதே

இறைத்தூதர்  ஹாமீமின் நெறியாளே

 

அஹதோன் நபியை தந்தான் தன் நூரில் -

அவனே யாவும் அமைத்தான் நபி நூரில்

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

-1-

நன்றி உள்ள உள்ளத்தில்

நாயகத்தின் நேசம் வரும்

வாழ்வளித்த வள்ளல் பேரில்

எல்லை இல்லா பாசம் வரும்

 

பாலை நிலம் மீதில் வந்த

பால் வார்க்கும் தாயம்மா

நிதம் ஊறும் ஜம்ஜம் போலே

நாதன் தந்த கொடையம்மா

 

கல்லாலும் சொல்லாலெல்லாம்

காயங்கள் செய்தவரை

எந்நாளும் சபித்திடாத

பொன்னான நல்மனதார்

 

வாழ்க்கை முழுதும் போராடி

வாழவைத்த முன்னோடி

 

வாழ்தல் அர்த்தம் பெற

வள்ளல் திசையில் சென்றால்

இந்த பிறப்பே சிறப்பாகும்

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

-2-

வாழ்த்துக்கவிதை வாசிப்போம்

வாழ்வில் என்றும் நேசிப்போம்

நபியின் நேசம் என்ற ஒன்றை

மஹ்சர் வரைக்கும் யாசிப்போம்

 

லட்சம் தூதர் வந்தாரே

லட்சியரை பகர்ந்திடத்தான்

ரட்சகனே மெச்சும் திருவை

நினைத்து நெகிழ்ந்து நீ பாடு

 

யார் தான் இங்கு பிறந்தாரம்மா

புவிமீதில் நபிபோலே

பார் தான் அது பார்க்கவுமில்லை

பண்பாளர் நபிபோலே

 

இறைவனவன் துணையோடும்

இகத்தை மாற்றும் முனைப்போடும்

ஏந்தல் எழுந்து வந்தார்

தீனை தினம் உரைத்தார்

ஏதும் சமரசம் செய்யாது

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

 

ஒவ்வொரு நாட்களுமே விடிகிறதே

நபிநாதர் மஹமூதர் ஒளியாலே

ஒவ்வொரு நாட்களுமே நிறைகிறதே

இறைத்தூதர்  ஹாமீமின் நெறியாளே

 

அஹதோன் நபியை தந்தான் தன் நூரில் -

அவனே யாவும் அமைத்தான் நபி நூரில்

 

மனிதா மனிதா நீ உணர்ந்துவிடு

நபி அருமை அதை அறிந்தே  நீ வெற்றி பெறு

 

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01-08-2024