21 ஆகஸ்ட் 2012

துபாய் ஈதும்.. பேரிச்சை பழுக்கும் வெம்மையும்!



எந்த ஈத் பெருநாளிலிலும் இல்லாத அளவு துபாயில் வெம்மையும் புழுக்கமும் வதக்கி எடுத்துவிட்டது…ஈத் பெருநாளுக்காக துபாய்க்கு புஜைராவிலிருந்து மைத்துனர் ரிஜ்வான் அவர்களுடன் (ஆகஸ்ட் 19, 2012) அதிகாலை 2.45க்கு புறப்பட்டு சரியாக 4 மணி வாகில் வந்தாலும் பார்க்கிங்கிற்காக படாத பாடுபட்டு ஒருவழியாய் கிடைத்தது பரஹா பெல்ஹூல் ஹாஸ்பிட்டல் அருகில். காரை விட்டு கதவை திறந்தவுடன் தான் தெரிந்தது நாங்கள் இதுவரை புஜைராவில் தெரிந்திருக்காத புழுக்கமும்.. வெம்மையும்.. அதுவும் அதிகாலை மணி 4 – க்கெல்லாம். சரியென வேர்வை வழிய துடைத்துக்கொண்டே வழுத்தூர் ரூம் அடைந்தும் அடையாது கீழிறங்கி உப்புமாவையும்.. சமோசா வகைராக்களையும் பசிக்காக உள்ளே அழுத்திவிட்டு தேனீர் குடிப்பதற்குள்ளாகவே அல்-ஃபுத்தைம் பள்ளியிலிருந்து தொழுகை அழைப்பு ஓசை வர அதிகாலை சுப்ஹு தொழுகைக்கு விரைந்து ஒருவழியாய் பலர் வழியை மறித்து தொழுது கொண்டிருந்தாலும் மாடியில் இடம் கிடைக்க தொழுது முடித்து பிறகு சற்றே குறு நாழிகை இடைவெளிக்கு பின் ஈத்கா விரைந்தால் இதுவரை இல்லாத அளவு அமீரக வரலாற்றில் முதன் முறையாக இந்த ஈத் என சொல்லும் அளவிற்கு புத்தாடை அணிந்து அணியணியாய் வந்த எல்லோரையும் வேர்வைக்கடலில் நீந்தவிட்டிருந்தது காலநிலை! குளித்து புத்தாடை பூண்ட புத்துணர்ச்சியெல்லாம் காலைவேலையின் இறுக்கத்திலும்.. வேர்வையிலும்… எங்கோ ஓடித்தான் போனது. இந்த பெருநாளுக்கு பெரும்பாலும் யாரும் சாப்பிட்டு வரமாட்டார்கள் நாங்கள் ஊரு விட்டு ஊரு வந்ததால் சற்றே சிற்றுண்டி சாப்பிட்டோம், ஆனால் பலரும் ஈத்கா வருவதற்கு முன் காலை உணவு சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை  மூன்றே பேரித்தம் பழம் மட்டும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்களின் வழிமுறையில் சாப்பிட்டு சாப்பிட்டிருக்கலாம்... இத்தனை நாளின் நோன்பின் அயற்ச்சியும் கூட, ஆக பெரும்பான்மையோர் மிக பலகீனமாக உணர்ந்ததாய் தெரிவித்தனர். அந்த நேரம் பார்த்து குத்பா பே........ருரையும் நேரம் பிடிக்கக்கூடியதாய் அமைந்திருந்தது அனைவருக்கும் குத்பா ஓதியது.

பொதுவாக எல்லா பெருநாட்களிலும் தொழுகை முடிந்தும் கூட நீண்ட நேரம் நண்பர்களின் முகமன் விசாரிப்புகளும், ஆரத்தழுவுதல்களும் குழு குழுவாய் நிறைந்திருக்கும் ஆனால் இந்தப் பெருநாளில் விட்டால் போதுமெனத்தான் பெரும்பாலும் இருப்பிடம் நோக்கி நடையைகட்டியதை பார்க்க முடிந்தது.. ஏனெனில் அவ்வளவு இறுக்கம்… வெம்மை… வேர்வை கசகசப்பு! ரூமிற்கு வந்து ஏசியில் கொஞ்சம் ஆசுவாசப்பட்டவுடன் தான் நிம்மதியான மூச்சே வந்தது. பேரிச்சைப்பழம் பழுக்கும் நேரத்தில் பெருநாள் கொண்டாட வேண்டியிருந்ததால் ‘நம்மை வெம்மை கொண்டாடிவிட்டது' பேரிச்சை பழுக்கும் முன் 'பேரிச்சையுடன்' எங்களை பழுக்க செய்துவிட்டது

எது எப்படியோ இறைவன் எல்லோருக்கும் நிறை நலம் வழங்கி சிறப்பான வாழ்வை இந்த ஈத் பெருநாள் பொருட்டால் வழங்கட்டும். இந்த சிறப்பான நோன்பை நமக்கு கற்றுத்தந்து இறைக்கட்டளையை இனிதே நமெக்கெல்லாம் வழங்கி நம்மை மிகச்சிறப்பான அனுபவத்திற்கு இட்டுச்சென்ற வார்த்தைகளால் வடிக்கமுடியாத புகழுக்குறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நாம் என்றும் நினைத்து நன்றி செலுத்த கடமைபட்டவர்கள். அந்த நிறைதூதர் ஸல்லல்லாஹு அலைகிவசல்லம் அவர்களுக்கு என்றும் சுப சோபனம் உண்டாவதாக! ஆமீன்.





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: