21 ஜனவரி 2015

மதம் கடந்து தொடரும் ஈமானின் தொண்டுகள்



கத்தாரிலிருந்து ஊர் செல்லும் வழியில் துபை விமான நிலையத்தில் இறந்த கிருத்துவரின் உடலை ஊருக்கு எடுத்துச்சென்று உரியவர்களிடம் ஒப்படைத்தது துபை ஈமான் அமைப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டு ஊரைச்சார்ந்தவர் சகாய சிங்கம் லிபோன்ஸி. இவர் கத்தாரிலிருந்து துபைவழியே கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டிரான்சிட்டில் ஊர் செல்ல இருந்தவருக்கு துபாய் விமானநிலையத்தில் திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார், இறந்து போன சகாய சிங்கத்தின் உடலை எதிர்பார்த்து அவரது உறவினர்கள் மிகக்கவலையுடன் பரிதவித்து காத்திருக்க அவரின் உடலோ பிரேதக்கிடங்கில் கிடத்திவைக்கப்பட்ட நிலையிலேயேஇருந்தது, செய்தியறிந்தஅறிந்த துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளான செயலாளர் குத்தாலம் லியாகத் அலி மற்றும் துணைச்செயலாளர் முஹம்மது தாஹா உடலை உறவினர்களுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினர்.
இதனிடையே இறந்த சகாயசிங்கத்தினைப் பற்றிய தகவலை துபாய் காவல் துறை இந்திய தூதரகத்திற்கு முறைப்படி தெரிவிக்க இறந்த உடலின் பிரேதப்பரிசோதனைத் தகவலைப் பெற்றுக்கொண்டு துபாய் மற்றும் இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடன் ஈமான் அமைப்ப்பினர் அதற்குரிய ஆவண நடவடிக்கைகளை முடித்து ஈமானின் துணைச் செயலாளர் தாஹா அவர்கள் மூலம் இறந்த சகாயசிங்கத்தின் இறந்த உடலும், அவர் கத்தாரிலிருந்து கொண்டு வந்திருந்த பேக்கேஜ் உடைமைகளும் கேரள கோழிக்கோடு விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு இறுதிச் சடங்கினை முடித்துவிட்டு வந்த உறவினர்கள் உடலைக் கொண்டுச்சென்ற ஈமான் துணைச் செயலாளரிடம் “இன்று இந்த இறுதிச் சடங்கினைச் செய்ய எங்கள் கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேலுள்ளகுடும்பங்கள் வேலைக்கு கூட செல்லாமல் உடலை எதிர்பார்த்திருந்தோம்.எங்கள் உறவினரின் பிரேதத்தை உரிய நேரத்தில் கொண்டுவந்து எங்களுக்கு உதவிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
எனக் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை நெகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் துபை அரசாங்கம், துபாய் காவல்துறை மற்றும் இந்திய தூதரகம் என அனைத்து தரப்பினரின் வலுவான ஆதரவே எங்களின் இந்த ஏழைகளுக்கான மதம் கடந்த மனிதநேய உதவிக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தது. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் என இந்நிகழ்வு குறித்து பேசிய ஈமான் அமைப்பின் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி அவர்கள் பெருமிதம் தெரிவித்தார்.
துபாய் ஈமான் அமைப்பின் இது போன்ற தொடர்படியான தொண்டுகள் நிறைய பதிவதற்கும் பகிர்வதற்கும் இருந்தாலும் இதற்கு முந்தைய நிகழ்வாக துபாய் மருத்துவமனையில் ஐந்து மாதத்திற்கும் மேல் சுயநினைவிழந்து இருந்து பின் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலைத்தேறிய ஆதரவற்ற ஏழை நோயாளி பெரம்பலூர் துரைவீராசாமி என்பவரை அவரின் குடும்பத்துடன் சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: