04 ஆகஸ்ட் 2017

தேவதூதனின் ஆட்சி

இந்தப் பிரதேசத்தில்
மகிமைமிகு தேவதூதனின்
ஆட்சி வந்தால்
நாட்டையே சொர்க்கமாக்கி
காட்டுவார் என்றார்கள்.
தேவதூதனும்
ஐம்பத்தாறு இன்ச் மார்போடும்
விதவித உயர்ரக
தேவ ஆடையலங்காரத்தொடும்
ஆஜானுபாகுவான
அதீத பலத்தோடும் ஆளவந்தார்
ஆனால்..
மக்களோ அவஸ்தையிலாயினர்
ஆங்காங்கே தேவதூதனின்
அடியாட்களே சிலரை குறிவைத்தும்
தேவதூதனின் அரசே
மக்களுக்கு வரிவைத்தும்
மற்றவர்களுக்கெல்லாம்
பலவிதங்களில் பொறிவைத்தும்
தாக்கி உயிர் பறித்தனர்.
தேவதூதன் தேவவாகனத்தில்
வானில் பறந்து கொண்டே
அவரோடு வீற்றிருக்கும்
தேவதோழர்களிடம்..
பார்த்தீரா!
எம் கொற்றத்தின் பெருமைதனையென
தெய்வீக புன்னகை பூத்துச் சிரித்தார்
பின் கடைசியாக
கீழிறங்கும் வேளையில்
ஓர் மேடை மீதேறி
இதை நான் ஒருபோதும்
சகிப்பதில்லை என்று பேசி இறங்கினார்.
ஆனாலும்,
தேவதோழர்கள்
மக்களின் திசை நோக்கி
நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார்கள்!
வஞ்சிக்கப்பட்டோரின்
உறவுக்காரன் ஒருவன்
அவர்களிடமே வந்து
பார்த்தீர்களா
நம் தேவதூதனின் மகிமையை என்றான்
அந்த குரலற்றவர்கள்
வேறுவழியின்றி
ஆமாம்,
நம் தேவதூதனின் கருணை
நம்மை காக்கவல்லது என்று
கண்ணீர் கசிய பதட்டத்தோடு கூறினர்,
அப்போதாவது
தாங்கள் உயிர் கொஞ்சம் பிழைக்கலாமென்று!
இப்படியன நிலையில்
நம் தேவதூதனின் ஆட்சியில்
சொர்க்கத்திற்கல்ல்லவா
வாக்குறுதி தந்தீர் என்று
அங்கே ஒருவன் கேட்டான்.
ஆமாம் உங்களை
நிரந்தரமாக மகிழ்விக்கும்
சொர்க்கபுரிக்கான
தீவிர ஏற்பாட்டிலன்றோ
நம் தேவ தூதர் இருக்கிறார்
என்று பதில் வந்தது.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: