31 ஜூலை 2017

படுத்துக்கொண்டு உமிழ்பவர்கள்




சமூகம் எப்போதும் அப்படியே தான் இருக்கிறது, அது எப்போதும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாது என்பதை மீண்டும்.. மீண்டும் நிரூபித்திருக்கிறது. அதையே கடந்த நான்கைந்து நாட்களாக மறைந்த முன்னால் குரயரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் விசயத்திலும் கடமை தவறாமையை உறுதிபடுத்தி இருக்கிறது.

“சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது” அதையெல்லாம் பொருட்படுத்தாதீங்க.. “காய்க்கிற மரத்துக்கு தான் கல்லடிகள் விழும்” என்ற சொல்வழக்குகள் எல்லாம் கலாம் விசயத்திலும் உண்மையெனவேபடுகிறது. ஏனென்றால் கலாம் ஒரு அறிவுச்சூரியன்.. கலாம் கனிந்த கனிகள் சுமந்த அறிவு மரம்.

அந்தக்காலத்திலிருந்து இந்த காலம்வரை அறிவார்ந்த மேதைகளுக்கும், சாதாரண மனித குலாமுக்கும் கொஞ்சநஞ்ச இடைவெளியல்ல கிழக்குக்கும் மேற்குக்குமான இடைவெளியே இருந்திருக்கிறது. அந்த இடைவெளியால் தான் இன்று மாபெரும் அறிஞரை, மிக விசாலமான பார்வை கொண்ட மனித நேயரை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவரின் சிந்தனை விசாலத்திற்கு இவர்களால் வர இயலவில்லை ஒரு போதும் வர முடியாது அதே நேரம் இவர்களது சிந்தனைக்கும் அவரால் கீழிறங்கி எப்படி வரமுடியும், சமூகத்தையும், மதத்தையும் குறித்த அளவிடுகளின் புரிதலில் அவரும், கூப்பாடு போடும் இவர்களும் எதிரெதிர் துருவங்கள் அதனால் கலாமை இஸ்லாத்திற்கு முரணானவர் என்று கூப்பாடுபோடுகிறார்கள்.

இங்கே பிரச்சனையே ஒவ்வொருவரும் அவரவர் சித்தாந்தம் சார்ந்து அதற்குள் கலாம் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் இங்கே அவரை அவராக தனித்துவமிக்கவராக ஒருவரும் பார்க்க அவர்களால் முடியவில்லை. இவர்கள் நினைப்பது ஒரு காலமும் சாத்தியப்படாத ஒன்று. ஒருவர் இவர்கள் நினைப்பதைப் போல ஒரே நேரத்தில் எப்படி பல்வேறு அவதாரம் எடுக்க இயலும், எப்படி எல்லார் அபிலாசைகளையும் நிறைவு செய்யமுடியும்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியாவது போலகாம் ஆனால் மறைந்த அவரை தோண்டி எடுத்து அவரது உடம்பை சிதைப்பது போலவும் தங்கள் பற்களாலேயே குதறுவது போலவுமான செயலக்களில் பலர் மிக தரமிழந்து ஈடுபட்டுவருகின்றனர், கலாமை அசிங்கப்படுத்துவதும் அவர் ஒரு மோசமான பிறவி என்று நிரூபிப்பதிலும் இவர்களுக்குள்ள ஆர்வத்தை பார்த்தால் அவர்களது சொந்த குடும்ப விசயங்களில் கூட அவ்வளவு முனைப்பு காட்டமாட்டார்கள் போலும், இவர்கள் யாவரும் அவர்களது நிலைமையையோ அல்லது அறிவு நிலைமையையோ அறியாதவர்கள், பாவம் அவர்களின் நிலையையே, நம்பிக்கைகளே உயர்வென்று தங்களுக்கு தாங்களே சுயச்சான்றிதழ் அளித்துக்கொண்டவர்கள்.

போகட்டும், போகட்டும் இருக்கும் போதே இவர்களால் கலாம் விமர்சனத்தை சந்திக்காதவர் அல்ல, அவர் இருக்கும் போதும் இந்த விமர்சனவாதிகள் இருக்கத்தான் செய்தார்கள் இதுவரை இவ்விமர்சனவாதிகளால் இந்த சமூகத்திற்கு எந்த துரும்பையும் அசைக்க முடிந்திருக்கிறதா? ஆனாலும் கலாம் அவர்களின் ஒவ்வொரு படியிலும் ஏதாவதொரு விமர்சனத்தை செய்தே வந்தார்கள் இந்த வேலையற்ற வீணர்களின் செயல்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அறிந்திருந்த கலாம் ஒருபோதும் இவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டதே இல்லை, அவர் இவர்களது விமர்சன்ங்களுக்கு ஒரு நாளும் செவிசாய்த்த்தும் இல்லை, அவர் என்றும் இலக்கு நோக்கிப் பாயும் அம்பாகவே செயல்பட்டார் தேசத்தின் வளர்ச்சி குறித்தும், தேசத்தின் மனதவளத்தினை எப்படி ஆக்கப்பூர்வமாக மாற்றுவது குறித்தும் சிந்தித்து அவரது பயணத்தில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ஒருவேளை அவர் இவர்களிடம் மாட்டிக்கொண்டிருந்தால் இவர்களது குறுகிய வலையில் சிக்கி என்றோ அவரும் முடங்கிப்போனவர்களின் ஒருவராய் இருந்திருப்பார்,

குறிப்பிட்ட சில காலமாக தமிழகத்தில் பல மார்க்க சர்ச்சைகளை ஏற்படுத்தி புதுப்புது குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருந்தனரே அப்போது கலாம் இவர்களின் எந்த மார்க்க சர்ச்சைகளிலும் ஈடுபட்டாரா.. எது கூடும்.. எது கூடாது என்பது பற்றி என்றாவது ஒன்று பகர்ந்திருக்கிறாரா அத்தனை தரம் தாழ்ந்து அவர் ஒரு போதும் வரமாட்டார், இவர்களின் தரம் அவருக்கு நன்றாகவே தெரியும். இவர்களைப்பற்றியும் இவர்களின் கொள்கை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றியும் எந்த கருத்தும் சொல்லாமல் தனது ஆக்கப்பூர்வ செயலைமட்டுமே முன்னெடுத்த ஒருவரைப்பற்றி இவர்கள் தங்களது சித்தாந்த்த்தோடு இணைத்து இத்தனை மூர்க்கமாக வந்து பத்துவா கொடுப்பது ஏன் என்பது தான் என் கேள்வி.

தமிழக இஸ்லாமிய மக்களின் இன்றைய நிலை மிகப்பரிதாபத்திற்குறிய நிலை, அவர்கள் ஓர் சீரிய, அறிவார்ந்த மற்றும் பக்குவட்ட ஆன்மிகத்தலைமையின் கீழ் இவர்கள் இல்லை, அதனால் தான் இவர்களை யார் பெரும்பான்மையாக வழிநட்த்துகிறார்களோ அவர்களின் கருத்தியலை இவர்கள் வெளிக்காட்டுகிறார்கள் என்பதே உண்மை.

இஸ்லாத்தை குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் வெளிப்படையாக சொல்வதானால் உலகில் இஸ்லாமியர்களாலேயே பலவிதமாகவும், இஸ்லாமியர் அல்லாதவர்களால் வேறு வேறு விதமாகவும் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்ற அறிஞர்களின் கூற்றும் உண்டு இஸ்லாத்தின் எதார்த்த்த்தை, நபிகளார் கட்டமைக்க விரும்பிய அற்புத சாந்தி மார்க்கத்தை விளங்கிய பரந்த பார்வை கொண்டவர்கள் என்றால் மிக சொற்பமானவர்களே தேருவர்.

பொதுவாகவே அப்படி இருக்கையில் சித்தம் சிதைந்த இப்போதைய தமிழக இஸ்லாமியர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழக இஸ்லாமிய பெரும்பான்மை இளைஞர்களின் சிந்தனையில் வஹ்ஹாபிய பாசி படந்திருக்கிறது அவர்கள் எதையோ இஸ்லாம் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், இஸ்லாத்தை வேரறுக்கும் இறையியியல் கருத்துக்களை, ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இஸ்லாமியனை வெறியனாகவே இருக்க தூண்டுபவர்கள் இவர்கள் சொற்படி கலாம் இருந்திருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் அவ்வாறு அவர் இருந்திருந்தால் கூடுதலாக தாடி வைத்திருந்திருப்பார் அதே பேப்பர் போட்டுக்கொண்டு இராமேஸ்வரத்திலேயே ஊருக்கே தெரியாத சடக்குத்தன சராசரி இஸ்லாமியராக எங்கோ வானத்தில் இருப்பதாக நினைக்கும் சொர்க்கம் வேண்டி செத்திருப்பார். ஆனால் சமூகத்திற்கு அந்த சராசரி கலாமால் எந்த பயனும் விளைந்திருக்க வாய்ப்பே இல்லை ஒருவேளை அப்படி ஒரு கலாம் வராது போயிருந்தால் இவர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள். இருந்தும் ஒரு பக்கம் நின்று நமக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை, மேல்நிலையில் நம்மில் ஒருவரும் வரமுடியவில்லை என்று தரம்தாழ்ந்த அரசியல் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

கலாம் மிக சிறப்பான வாழ்வை வாழ்ந்து சென்றிருக்கிறார், இன்று அவரைப்பற்றி அவதூறு பேசும் மனிதர்களில் எத்தனை பேர் அவரது வாழ்வை ஆராய்ச்சி நோக்குடன் பார்த்திருக்கிறார்கள், அவர் எழுதிய பதினெட்டு புத்தங்களில் ஏதொன்றையுமாவது முழுமையாக உள்வாங்கி படித்திருக்கிறார்களா? நான்கூட அவற்றில் சிலவற்றினை படித்தவன் தான் ஆனால் குறைந்தபட்சம் அவரின் உலகப்புகழ்பெற்ற “அக்னிச் சிறகுகள்” புத்தகத்தையாவது இவர்கள் படித்திருக்கிறார்களா? அதில் அவர் இஸ்லாத்தினைக்குறித்து சொல்லப்பட்ட்தை பார்த்திருக்கிறார்களா? “எனது வானின் ஞானச்சுடர்கள்” என்ற நூலில் திருக்குரானின் மகிமையைப்பற்றியும், கலிபா உமர் கத்தாப் அவர்களின் ஆட்சியின் மேன்மை பற்றியும், பிரபல இஸ்லாமிய மேதைகள் இமாம்கள் பற்றியும் அவர் குறிப்பிட்ட்தை இவர்கள் அறிவார்களா? நபிகள் நாயகத்தின் மேன்மையைப் பற்றி இஸ்லாமிய ஆன்மீகவழிபற்றி அவர் வாழ்வு நெடுக பகிர்ந்தவற்றை ஏன் பார்க்காமல் பேசுகிறார்கள்

அவர் கோவில்களுக்குச் சென்றார், அவர் சாமியார்களை சந்தித்தார், அவர் பகவத்கீதையை படித்தார், அதனால் அவர் மோசமானவர், காபிர், நரகத்தின் கொள்ளிக்கட்டை என்கிறீர்கள், சொல்லிவிட்டு தொலையுங்கள் உங்களின் ஈன அறிவு அவ்வளவு தான்.

இஸ்லாத்தின் ஒப்பற்ற கலிபாவாக கருதப்படும் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோமாபுரி தேவாலயத்தை சுற்றிப்பார்த்த்தாக வரலாறு இல்லையா? நபிகள் நாயகத்தின் இளம்பிராய சிரியா பயணத்தில் நபித்துவத்தையே உறுதி செய்து முன்னறிவிப்பு செய்த “புகைரா” என்ற துறவி இஸ்லாமியரா இல்லை வேத வசனம் முதலில் இறங்க நடுங்கிய நாயகத்தை போர்த்திவிட்டு அன்னை கத்தீஜா அவர்கள் சென்று விளக்கம் கேட்டவர் “வரகத் இப்னு நவ்பல்” என்ற கிருத்துவ பாதிரியார் இல்லையா இஸ்லாத்தினை நிர்மானம் செய்த நபிகளார் இதை தனது மார்க்கம் என்று சொல்லாமல் இதுவரை வந்த தீர்க்கதரிசிகள் சொல்லிச்சென்றவற்றின் தொகுப்புச்சித்தாந்தம் என்று தானே சொன்னார்கள் ஞானமார்க்கத்தில் ஆழ்ந்தவர்களுக்கு இறைவனை தரிசிக்க, அந்த பேருண்மையில் லயிக்க மதப்போர்வை என்றும் தடையாய் இருந்த்தில்லை அவ்வாறு லயிக்கும் நேரத்தில் உண்மையின் காட்சியே வெளிப்படும் என்பதற்கு ஒப்பற்ற இந்திய பிரதேசத்தில் தோன்றிய ரிக், எஜூர், சாம, அதர்வண வேதங்கள், பவிஷ்ய புராணங்கள், கல்கியின் அவதார முன்னறிவிப்புகள் போன்றவற்றிலெல்லாம் நபிகளாரின் நபித்துவ முன்னறிவிப்பு சொல்லப்படுகிறதே.. சந்திரன் பிளந்ததை சேரமாள் பெருமாள் இங்குள்ள இந்து ஞானவான்களிடம் தானே இது என்ன அதிசயம் என்று கேட்க அவர்கள் நபிகளாரைப் பற்றிச் சொன்னார்கள். தொன்னூற்று நான்கு லட்சம் வடநாட்டு பிராமணர்கள் தங்களை இஸ்லாமியராக ஆக்கிக்கொள்ளும் மனமாற்றத்திற்கு ஆளானார்களே அதற்கு மேன்மைமிகு ஹர்ஜத் காஜா முயினுத்தீன் ஜிஸ்தி அவர்கள் நேரடியாக ஞானோபதேசம் செய்து தானே இருக்க வேண்டும். இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம் உங்களுக்கு தான் பிறமத தொடர்பு என்றாலே தகாத பாவமாயிற்றே.

உங்களுக்கு பேரா. காதர் மொகிதீன் கோவிலுக்கு சென்றாலும் கழுவி ஊத்துவீர்கள் கலாம் சென்றாலும் ஊத்துவீர்கள். காதர் மொகிதீன் ஏன் சென்றார்? அவரது நோக்கம் என்ன என்றெல்லாம் சிந்திக்க உங்களுக்கு நேரம் இல்லை. இந்து முஸ்லிம் ஒற்றுமை யாத்திரைக்காக சென்ற காதர் மொகிதீன் தனது முதுமையின் கால்வலி காரணமாக பூமியை கைகளால் ஊன்றி எழுந்தாலும் அவர் சங்கராச்சாரியார் காலில் விழுந்து கும்பிட்டார் என்று எழுதும் தினமலருடன் ஒத்து ஊதுவீர்கள்.

கலாம் பிரமுக் ஸ்வாமி மகராஜ் என்ற சாமியாரின் காலடியில் உட்கார்ந்திருப்பதாக இருக்கும் போட்டோ முதல்முறை அவர் சந்தித்த போது எடுத்த்து அது உங்களுக்கு போதும், அதற்கு பிறகு பலமுறை அவர் சந்தித்த பல சந்திப்புக்களும் அதில் கலந்துரையாடப்பட்ட விசயங்களும் உங்களுக்கு தேவையில்லை தான், ஏன் சாமியார்கள் அறிவு ஜீவிகளாக இருக்க்க்கூடாதா அந்த பிரமுக் ஸ்வாமி (2016-ல் மறைந்துவிட்டார்) கலாமை அழைத்து நாட்டின் வளர்ச்சி குறித்த பல ஆலோசனைகளை கொடுத்த பெரியவர் என்பதும் அவரது கலந்தாலோசனையில் இரண்டு வருட கடுமையான உழைப்பில் நான்கு அம்ச எதிர்கால இந்தியா குறித்த வரைவை தயாரித்தார் என்பது உங்களுக்கு தேவை இல்லை தான். நீங்கள் பத்வா கொடுக்க, பித்னா பசாது செய்ய ஏதேனும் கிடைத்தால் நீங்கள் சமாதானம் ஆகிவிடுவீர்கள்.

ஆனால், "சீன தேசம் சென்றேனும் சீர்கல்வி பெறுக" என்றும் "கல்வி என்பது காணமல் போன ஒட்டகம் அதை பெறுவதில் விழிப்பாய் இருங்கள்" என்றும் நபிகள் கோமான் ஸல்ல்ல்லாஹு அலைஹிவசல்லம் கூறி இருக்கிறார்களே, "கல்வி என்பது கொடூரமான சிங்கத்தின் தலையில் இருந்தாலு எடுத்துக்கொள்" என்று சொன்ன இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் போதனை பெற்ற மார்க்கத்தில் இவ்வளவு மக்குமண்டுகளா எனும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.

முடிவாக ஒரு இஸ்லாமியன் சாதுர்யனாக, எந்த ஒரு தனிமனித நெறிமுறைகளையும் மாற்றான் கண் கொண்டு பார்க்காதவனாக சகல தரப்பினரையும் அன்பு செலுத்துபவனாக இருப்பான் அதையே கலாம் செய்தார். அவர் செய்த்தில் ஆயிரத்தில் ஒரு சதவீத உழைப்பையாவது அவரை அடுத்துவந்த ஜனாதிபதிகள் கூட செய்ய முடியவில்லை, அப்படி இருக்கும் போது நான் கலாமை இமயத்தில் வைத்து துதிக்கிறேன்.

கலாம் என்ன செய்தார், அவரது சிந்தனை எவ்வாறு இருந்த்து, அவர் எந்த மாதிரியான தாக்கத்தை மாணவர்களுக்கு மத்தியில் விதைத்தார் ஏன் அவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, தவிர்க்க இயலாத தலைமையாக மக்கள் ஜனாதிபதியாக வலம்வந்தார் என்று சென்றால் அது மிக நீளும். இப்போதைக்கு ஒன்றே ஒன்று தான் கலாம் பிஜேபியால் முன்மொழியப்பட்டவர் தான் அது எல்லோரும் அறிந்த ஒன்று, அவருக்கு வாஜ்பாயிக்கும் தனிப்பட்ட நெருக்கம் இருந்த்து வாஜ்பாய் தன்னை ஜானாதிபதி வேட்பாளாராக அறிவிக்க இருக்கிறோம் ஏற்றுக்கொள்ளுங்கள் எனும் போது கூட உடனே ஏற்கவில்லை அவ்வாறு பிறகு ஏற்ற அவர் அதனை எவ்வாறு நேர்மறை காரணியாக பயன்படுத்திக்கொண்டார் என்பதை பொறுமையும், நிதானமும் அறிவாற்றலும் உள்ளவர்கள் சிந்தித்து விளங்கிக்கொள்வார்கள்.

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் போது சேற்றிலும் ஒரு செந்தாமரை மலரும் போது அதைபோற்றுதல் மட்டுமே அறிவார்ந்த பெருமக்களின் செயல். ஒரு அறிவு ஜீவியை நாட்டிற்காக வாழ்ந்த தலைமகனை இந்த சமூகம் புரிய மறுக்கும் அவலச்செயல் பார்த்துத்தான் இந்த பதிவே தவிர கலாம் ஜனாதிபதியாக இருக்கும் போதிலிருந்தும் அவருக்கு மணிமண்டபம் கட்டியது வரையிலான பிஜேபியின் நரித்தன அரசியல் குறித்து நான் இங்கே பேசவரவில்லை, அதில் எனக்கும் நிறைய முரண்பாடுகளும், வேறு கருத்துக்களும் உண்டு.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா


31-07-2017 2.05 am

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மதசார்ப்பற்ற நடு நிலையான
இன்றைய நிலையில் தேவையான
பதிவாக உள்ளது
(முக்கியமாக இறுதிப் பத்தியும் )
அதனால் தங்கள் அனுமதியை எதிர்பார்த்து
என் முக நூலில் பகிர்ந்துள்ளேன்
வாழ்த்துக்களுடன்...

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

தாராளமாக பதிவிடுங்கள் ரமணி ஐயா கருத்துரைக்கு நன்றியும், மகிழ்வும்.