06 ஜூலை 2017

அன்பிற்கு நன்றி நவிழ்வதும் தான் இயலுமோ? :


இந்த பொழுது சிறப்பானதாக சென்றது, வாழ்த்து மழையென பொழிந்தது. நேற்று இரவே என் தாய் தந்தையர் மனமார வாழ்த்தி துஆ செய்தனர், இரவு ஸ்கைப்பிலும் காலை வாட்ஸப்பிலுமாக மனைவியார் மனமுருக காதல் கசிந்து வாழ்த்தினார், என் மகனும், தங்கை மகளும் மழலைக்குரலில் பாடலாக பாடி வாழ்த்தனுப்பினர், என் மகள் தான் உரிமையோடு நான் பக்கத்தில் இல்லாத குறையால் பேச மறுத்தாள் ஆனாலும் அம்மா சொல்ல "ஹேப்பி பர்த் டே" ஒரே சொல்லில் சொல்லிவிட்டு சென்றாள் எல்லா பெண்பிள்ளைகளும் இப்படித்தான் போல. பொசசிவ்னஸ் ரொம்ப ஜாஸ்தி.
பிறந்த நாள் என்பதால் பிரியாணி சாப்பிட திட்டம் தான் ஆனால் எனக்கு தலப்பா கட்டு பிரியாணி வருமென நினைக்கவே இல்லை, திடீரென காலை 11.30க்கு போன் செய்த மெளலானா அண்ணன் மதியம் சாப்பிட வேண்டாம் என்றார் ஏன் அண்ணன்.. என்ன விசயம் எனக்கேட்க.. நான் இப்போது துபாய் கராமாவிலிருக்கும் தலப்பாகட்டு பிரியாணி ரெஸ்டாரெண்டில் இருக்கிறேன், இக்பால் சார் தங்களுக்கு பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இன்னும் சில நிமிடங்களில் நான் அஜ்மானில் இருப்பேன் என்றார், உடனே போன் செய்து " இதெல்லாம் ஏன் சார்.. எனக்கு, உங்கள் அன்பும் வழிகாட்டுதலும் இருக்கு அது போதும்" என்றேன் எப்போதும் போல அன்பை பொழிந்து மறுத்துவிட்டார்கள், சரியான நேரத்தில் வந்த மெளலானா அண்ணன் கையில் இரண்டு தலப்பாகட்டு பிரியாணி கூடவே மிளகுக்காரத்துடன் நல்ல மசாலா இட்டு பதத்துடன் பொறிதெடுத்த மட்டன் பொறியல். சிறப்பான ருசி, சீரக சம்பா பிரியாணி. வயிறும் மனமும் நிறைந்தது, பெருந்தகையை மனம் மொழி மெய்யால் வாழ்த்தினேன். அதுவும் நான் இந்நாளில் தனிமையில் சாப்பிட கூடாதென மெளலானா அண்ணனையும் அனுப்பி என் தனிமையை விரட்டி இந்நாளை இனிதாக்கியதை நினைத்து நெகிழ்ந்தேன். உண்மையில் இதுகாரும் எல்லா வருடத்திலும் பெருந்தகை இக்பால் சார் எனக்கு பிறந்த நாள் எனில் இரவே போன் செய்துவிடுவார்கள் அல்லது சரியாக அந்த 12 மணிக்கு குறுஞ்செய்தியாக வாழ்த்தனுப்பி மகிழ்விப்பார்கள். இம்முறை எல்லா வகையிலும் என் நெஞ்சம் நிறைய செய்த அப்பெருந்தகையாளரின் அன்பிற்கு முன்னால் சொற்களற்று நிற்கிறேன்.
எனது ஆசான் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் எனக்காக பேரன்புடன் அழகான கவிதையாத்து பாசமுடன் என்னை எங்கள் வீட்டில் பிறக்காத குழந்தை என்று விழித்து அழகு தமிழின் ஆழிய சங்கத்தமிழ் நூற்களின் பெயரால் என்னை மனமார வாழ்த்தினார்கள். இதுவும் எனது பாக்கியமே.
இவையல்லாது இப்போதுவரை என்னை அன்பொழுக
நெஞ்சார முகநூலிலும், வாட்சப் வழியேயும், குறுஞ்செய்திகாகவும் வாழ்த்திக்கொண்டிருக்கும் அன்பார்ந்த உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என் நல விரும்பிகளுக்கும் நான் என்ன கைமாறு செய்துவிடப் போகிறேன், நன்றி என்று சொற்களில் சொன்னால் அவை சொல்லில் அடங்கிவிடாது என்னிடம் உங்களுக்குத் தர எனது அன்பைத் தவிர பிறிதில்லை. அன்பைத்தவிர பிறிதில்லை, அன்பைத்தவிர பிறிதில்லை.
நாம் அன்பால் என்றும் இவ்வாறே பிணைந்திருப்போம் ஒருவருக்கொருவர் பிறரின் நலம் போற்றி இன்பம் காண்போம். வாழ்க வையகம். வாழ்க நன்னெஞ்சினர்.
அன்பிற்கு நன்றி நவிழ்வதும் தான் இயலுமோ?
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: