10 ஜூலை 2017

கீழே இறக்கிவிட்டுவிடாதே

தொடர்ந்து கொண்டிருந்த
நெடுந்தூர வழிப்பயணத்தில்
அடர்வனத்தின் நடுவினிலே
திடீரென தனித்துவிட்டேன்.
தகவல் தொடர்பே சாத்தியப்படாத
அரவமற்ற பெருங்காட்டில்
எப்படி வழியறிந்து கடைத்தேறுவதென
விழிநீர் வற்றுமளவு அழுதுநின்ற போழுதில்
பவுர்ணமி நிலவை வானில் அனுப்பி வைத்தாய்
பெருநிலா கண்டநான்
திருவிழா மனம்பூண்டு
வழியேகுவதைக் கூட மறந்துபோனேன்
என்னை மறந்து சிரித்தேன்
இன்னும் மறந்து ரசித்தேன்
ஒளி உருண்டையை
கண்ணெல்லாம் ஏந்திக்கொண்டேன்
கண்ணில் புகுந்த ஒளி
உடலெங்கும் பரவியது
வானின்று நீண்ட கரம் ஒன்று பற்றிட
நிலவில் ஏறிக்கொண்ட நானும்
ஒளிரத்தொடங்கினேன்
பூவுலோர் பார்க்கும் நிலவாகத்தான்
ஆகிப்போனேன் நான்
இப்போது வானகத்தில் எனது உலா!
என் பிரார்த்தனையெல்லாம்
அழுத குழந்தையை தூக்கியணைத்து
பின் இறக்கிவிடுவது போல
இனி நீ கீழே இறக்கிவிட்டுவிடாதே
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
10-7-2017 11.19pm


கருத்துகள் இல்லை: