29 ஜூலை 2017

வெளிநாட்டு மாப்பிள்ளை



ஆண்டுக்கணக்கில் சம்மந்தம் பேசி
மாதக்கணக்கில் திருமண ஏற்பாடுகள் செய்து
நாட்கணக்கில் தாம்பத்யம் நடத்தி
மணிக்கணக்கில் மனைவியை அழவைத்துச்செல்கிறான்
வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
வினாடிகள் தோறும் தோன்றி மறைகிறது
ஏக்கத்தின் மின்னல் கோடுகள்.
*
அலைபேசி எடுத்தால் - அவள்
சோக கீதம் இசைக்கிறாள்
கண்ணீர் வழிய – இவன்
ஆழுகையில் ஆலாபனை பாடுகிறான்
*
எல்லோரும் கூடித்தானே
எங்களை இணை என்றீர்கள்
எங்கனம் இணைவதாம்
இடையில் மூவாயிரம் மைல்கற்கள்
*
இப்போது எனை அவள் நினைக்கவும்
அவளை நான் நினைக்குமாக கழிகிறதே
ஒருவரின் கண்ணீர் ஒருவர் ருசித்து
நனவில் நாங்கள் நனைவது எப்போழ்தாம்?
*
திருமணம் என்பது
இருமனங்கள் கூடவா இல்லை
இருமனமும் அழுது புலம்பி 
அனுதினமும் ஒருவரையொருவர் தேடவா?
*
ஒருமனம் அங்கேயும்
மறுமனம் எங்கேயுமாய்
வேள்வித் தீ எரிய
ஏன் இந்த திருமணம் என்ற
ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றன..
ஆயினும் சமூகம் பதில் என்ன சொல்லும்
*
பணமெனும் தாள்கள் நிரப்பி
அதையணைத்து நான் படுத்துறங்க - என்
பருவத்து ஆசைகள் நீங்குமா எங்கள்
துருவத்து வேட்கைகள் தான் அடங்குமா
இங்கே இருக்கும் எதுவும் என்னவள்
புருவத்தின் ஜாடைக்கும் கூட ஈடாகுமா?
*
ஆமாம், புலம்புகிறேன்
நான் வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
நம் பெரும்பாலான இளைஞர்களின் / வீட்டு பெண்பிள்ளைகளின் வாழ்வியலை நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன், மனதில் தோன்றியதை இப்போது வடித்தேன்.
x

கருத்துகள் இல்லை: