06 ஆகஸ்ட் 2017

பெண் நபி கருத்தால் கவிஞர் எச்.ஜி.ரசூலை சர்ச்சை பொருளாக்காதீர்

இஸ்லாம் அப்படி உயர்ந்தது.. இப்படி சிறந்து என்று கூறும் யாரும் உள்ளார ஆராய்ந்து விளங்கி சொல்வது இல்லை, பொத்தாம் பொதுவாகத்தான் இந்த உயர்வு நவிற்சி செய்வதெல்லாம், ஆராய்ந்து சொல்பவர்கள் மிக சொற்பமே.

எதை எதையோ ஆராய்பவர்கள் பக்தியின் வட்டத்தில் சிக்கியபின்பு சிறுபிள்ளையாய் இருக்கும் போது கற்பிக்கப்பட்ட விசயங்களை என்னவென்று கூட ஆராய்வதில்லை, ஏன் என்று கூட சிந்திப்பதில்லை, எத்தனை எத்தனையோ இஸ்லாமிய ஞானிகள், மேதைகள் பல விசயங்களில் தெளிவாக ஞானம் அருளியிருக்க யாரும் அதை அருந்த தயாரில்லை, ஆயினும் எல்லாம் தெரிந்தது போல இரவுப்பகலாய் பேசிக்கழிப்பார்கள்.
அதே போலத்தான் நபிமார்கள், வலிமார்கள் வியசத்திலும் ஏதோ அவர்கள் குறித்த ஓர் அதீத கர்பனையில் மிதக்கிறார்கள் மட்டுமல்ல சைத்தான், ஜின், மலக்குகள்..... என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாம் சொல்லி இருக்கும் எதொன்றின் கருத்து குறித்தும் அவர்கள் அறிவை பெருக்கும் அல்லது ஆராயும் முயற்சியில் ஈடுபடவில்லை, அவ்வாறு ஈடுபட்டு மக்களுக்கு தெளிவை தந்திடும் அறிஞர்களை அவர்கள் நாடுவதும் இல்லை மாறாக இன்னும் திரைகளை போட்டு உண்யை மறைக்கும் கற்பனையை வளர்க்கும் புதிய இயக்கங்களும், சிந்தனைகளும் வளரத்தொடங்கிவிட்டது ஆக இவற்றில் சிக்கி சமுதாயம் இன்னும் அறிவீன நிலையில் வீழ்ந்து கிடக்கிறது.
இப்படியான நிலையில் மறைந்த கவிஞர் எச்.ஜி. ரசூலை பெண் நபிகள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய ஒரு கவிதையை மட்டும் சுட்டிக்காட்டி அவர் குறித்த வேறுவிதமான பிம்பத்தை கட்டமைக்கவும், அவரை தெரியாத நபர்களுக்கு அவர் குறித்த வேறு வித சிந்தனையை விதைக்கவும் செய்கிறார்கள். அறிவு சார் விளக்கமில்லாத சமூகத்தில் திடுமென சொல்லப்படும் இக்கருத்துக்களால் சலசலப்புகள் உண்டாகலாம் அதே நேரம் தவறான பிம்பமும் உருவாகி அவர் குறித்து வேறுவிதத்தில் கருத்து பரப்பப்படும் நிலை உருவாகும்.
கவிஞன் எப்போதும் கேள்வி கேட்பான், பதிலும் சொல்வான் அறிவை விதைப்பான். அதையே கவிஞர் ரசூல் செய்தார். அவர் கேள்வி கேட்டதாலேயே அவரை வெறு விதமாய் சித்தரித்தார்கள், உண்மையில் மக்கள் நபிமார்கள் குறித்த தெளிவை பெற்றிருந்தால் அவர் அந்த கேள்வியையே கேட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.
மக்கள் கொண்டுள்ள கற்பிதங்களை மக்களே உடைக்க விரும்பவில்லை. உடைத்தால் புனிதம் போய்விடும் அல்லது தெய்வ குற்றமாகிவிடும் நமக்கு ஏன் வேண்டாத சிந்தனை என்று அஞ்சுகிறார்கள்.
அறிவை உள்வாங்கிக்கொண்டால் இருள்விலகி அறிவொளி சூழ்ந்துகொள்ளும்.
இறைவன் பேதங்களற்றவன்.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா.

கருத்துகள் இல்லை: