29 ஏப்ரல் 2019

வியாபாரம்

சில சந்திப்புக்கள்
சில சந்தர்ப்பங்கள்
சில மேஜைகள்
சில வியாபாரங்கள்
கெடுத்துவிடுத்துத் தான் விடுகிறது

நம் எதார்த்தத்தை! 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5-5-17

விதித்தது

கதிரில் விளைந்ததெல்லாம்
குதிருக்குள் செல்லாது
வெள்ளாமை ஆனதெல்லாம்
வீடுவரை வந்திடாது
காகம் குருவி கொத்தியதும் கொரித்ததும் போக
வாரி அள்ளும் போது சிந்தியது போக
மூட்டை கட்டும் போது கொட்டியது போக மீதம் தான் நமக்காகும்
கணக்கு போட்ட படியெல்லாம்
கண்டிப்பாய் வாழவே முடியாது
எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும்
எப்படி பிணங்கியது என ஓர்த்தாலும்
வாழ்வே நகராது
வாழவே முடியாது
கூடுதலோ குறைதலோ
கிடைத்ததற்கு சுக்கூர் சொல்வாய்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5-5-17

18 பிப்ரவரி 2019

எனது உள்ளத்தரசியின் தாயார் நினைவு தினம்

அன்புள்ள தாயே
எங்கே தான் நீயே...

உன் முகம் பார்க்காது
தினமும் எழ வைத்தாயே
ஏங்கிடும் நினைவுகளால்
நிதமும் அழவைத்தாயே!

எனக்கு விடிகிறதென்றால்
சூரியனாய் நீ தான் இருந்தாய்
உன் வெளிச்சம் தானே
எல்லாம் விளக்கியது தாயே!

எனக்கு இரவென்றால்
நிலவென நீ தான் இருந்தாய்
எனக்கான ஆறுதல் வடிகால்
நீயாய் இருந்தாய் தாயே!

எனக்கு என்ன தெரியும்
உன்னை தெரியும்
உன்னை தான் தெரியும்
உன்னை மட்டும் தான் தெரியும் தாயே!

நீ என்ற உலகில் தான்
நான் வாழ்ந்திருந்தேன்
நினைத்திராது அந்த உலகமே
திடீரென அதிருமெனறால்
எங்கே போவேன் தாயே!

எந்னை நீ
பெற்று விட்ட பிறகும்
நானே பிள்ளைகள்
பெற்றுவிட்ட பிறகும்
பக்கத்தில் நீ இருந்ததால்
உன் பேரன்பின் கருவறையில்
கதகதப்பாக இருப்பதாகத்தான் உணர்ந்திருந்தேன்!

அந்தக் கருவறை சுவாசம்
காலமெல்லாம் கிடைக்குமென்று
நினைத்திருக்கையில்,
காலம் இப்படியொரு
அகால கொடுந்தீயைப் பற்றவைத்து
கொடுமையாய் உனைப்பிரித்ததே தாயே!

பிரிவின் தீயும்
நினைவின் தீயும்
தினம் தினம் எறிய
திரும்பிட மாட்டாய் எனினும்
திரும்பத்திரும்ப அழைக்கிறேன்
உன் பிரியப் பிள்ளை!

தாயே!
ஆசையோடு அணைத்தெனக்கு
அன்பின் இதழ் குவித்து
ஒரு முத்தமாவது தந்து செல்லேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


இன்று எனது உள்ளத்தரசியின் தாயார் நினைவு தினம், அவர்களுக்கு இறைவன் பெருங்கிருபை செய்வானாக! இறைத்தூதர் அருளாசியினால் நிறை சாந்தி நிலவுவதாக.

06 நவம்பர் 2018

அகிலத்தின் அருட்கொடையாம்




பல்லவி:
அகிலத்தின் அருட்கொடையாம்
அது எங்கள் அண்ணல் நபியாம்
பாரிதை படைத்தவன்
பரிசளித்த பயகம்பராம்

அனுபல்லவி:
எங்கள் நபிகள் நாயகம்
அவர் புகழ் பாடும் வையகம்

சரணம் 1:
இன்னல்களை சகித்துக்கொண்டு
இறைச்செய்தி தந்தவராம்
இதயங்களில் ஒளியூட்ட
மறை கொணர்ந்த மன்னவராம்

எங்கெங்கும் இருக்கும் இறையை
சிலைக்குள்ளே அடைக்கும் நிலையை
அறிவூட்டி தடுத்தவர் அவராம்
அவரே  எங்கள் அஹமதராம்

உன் நண்பனை பார்க்கும் போது
சிறு புன்னகை உதிர்ப்பதைக் கூட
உயர் அறம் தான் என்றாரே..
நடக்கும் வழியில் கல்லை
கிடக்கும் கூரிய முள்ளை
எடுத்துக் களைவதும் தர்ம மென்றார்

அன்பினில் உலகம் நனைய
அறிவினில் சுடர்கள் எரிய
என்றும் வாழ்வினில் உழைத்தவராம்

சரணம் 2:
பேசிச் சென்ற  பேச்சிலெல்லாம்
பேருண்மை ஈந்தவராம்
வால்வீசி வந்த எதிரியர்க்கும்
ஏகனருள் வார்த்தவராம்

போரில் சிறைபிடித்த பகைவரில் கூட
பெற்ற கல்வி உற்றவ ரிருந்தால்
கற்றுத்தந்து அடைக விடுதலை
கொற்றவன் தூதர் உரைத்தவராம்

தன்மனைவிக்கு நல்லவன் யாரோ
உண்மையிலே நல்லவன் அவனே
என்றே பெருமான் நவின்றராம்
ஒருமூன்று நாளுக்குமேலே
எந்தச்சொந்த பந்தத்தினோடும்
சினம் கூடா தென்றவராம்

பூமியில் சாந்தி தழைக்க
பூத்து  அதுவே செழிக்க
அமைதி மார்க்கம் தந்தவராம்


-  வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா