10 ஜூலை 2017

கீழே இறக்கிவிட்டுவிடாதே

தொடர்ந்து கொண்டிருந்த
நெடுந்தூர வழிப்பயணத்தில்
அடர்வனத்தின் நடுவினிலே
திடீரென தனித்துவிட்டேன்.
தகவல் தொடர்பே சாத்தியப்படாத
அரவமற்ற பெருங்காட்டில்
எப்படி வழியறிந்து கடைத்தேறுவதென
விழிநீர் வற்றுமளவு அழுதுநின்ற போழுதில்
பவுர்ணமி நிலவை வானில் அனுப்பி வைத்தாய்
பெருநிலா கண்டநான்
திருவிழா மனம்பூண்டு
வழியேகுவதைக் கூட மறந்துபோனேன்
என்னை மறந்து சிரித்தேன்
இன்னும் மறந்து ரசித்தேன்
ஒளி உருண்டையை
கண்ணெல்லாம் ஏந்திக்கொண்டேன்
கண்ணில் புகுந்த ஒளி
உடலெங்கும் பரவியது
வானின்று நீண்ட கரம் ஒன்று பற்றிட
நிலவில் ஏறிக்கொண்ட நானும்
ஒளிரத்தொடங்கினேன்
பூவுலோர் பார்க்கும் நிலவாகத்தான்
ஆகிப்போனேன் நான்
இப்போது வானகத்தில் எனது உலா!
என் பிரார்த்தனையெல்லாம்
அழுத குழந்தையை தூக்கியணைத்து
பின் இறக்கிவிடுவது போல
இனி நீ கீழே இறக்கிவிட்டுவிடாதே
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
10-7-2017 11.19pm


07 ஜூலை 2017

காப்பியக்கோ விருந்து..



முன்பு புரவலர் விருந்து கொடுத்தார் இன்றோ புலவரவர் விருந்தளித்தார். 

நெஞ்சம் நிறைந்து அழைத்த விருந்துக்கு சென்றோம், சுவைமிகுந்த உணவாலும், அன்பின் அதீத உபசரிப்பாலும் வயிறும், மனமும் நிறைந்து வந்தோம்.


ஆமாம் அறிஞர் பெருந்தகை இக்பால் சார் சொன்னது போல காப்பியக்கோ அவர்களது விருந்தோம்பல் எங்களை திக்குமுக்காட செய்து விட்டது. 

உண்மையில் பெருந்தகை இக்பால் சார் வேண்டியது என்னவோ ஒரு சிறிய அளவிலான தேனீர் விருந்தே ஆனால் காப்பியக்கோ அவர்கள் அதை ஏற்கவில்லை, நான் சொன்னாலும் எங்கள் வீட்டு பெண்மணிகள் அதை ஏற்கமாட்டார்கள், நீங்கள் எல்லோரும் இல்லம் வர வேண்டும் எங்கள் இலங்கை உணவை உள்ளம் மகிழ சாப்பிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். 

அதன்படி இரவு விருந்திற்காய் துபாயில் இருக்கும் காப்பியக்கோ அவர்களின் மூத்தமகனார் வீட்டிற்கு சென்றோம், உள்ளார்ந்த வரவேற்பு, எல்லோரும் கூடி வர வேற்றனர். அவர்களின் முகத்தில் தான் எத்தனை ஆனந்தம், எத்தனை மகிழ்ச்சி.

வீடே இரம்மியமான சூழல், மழலை மணம் நிறைந்திருந்தது, வீட்டின் அலங்காரமும் அன்பின் தோரணங்களும் காப்பியக்கோவின் கவிதை மனதை இன்னும் கவித்துவப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பேரப்பிள்ளைகள் சூழ காப்பியக்கோ மகிழ்ந்திருப்பதை காண மனமெல்லாம் நிறைவு, இன்னும் இன்னும் இன்னும் அவர்கள் இதே மகிழ்வுடன் இருந்து சிறப்புடன் வாழவும் இச்சமூகத்திற்கு நல்ல பல ஆக்கங்கள் தரவும் மனதால் வேண்டிக்கொண்டோம்.

சென்றவுடன் பழரசம் பறிமாறப்பட்ட்து, சில உரையாடல்களுக்கு பிறகு சூப்பில் ஆரம்பித்து வித விதமான இலங்கை உணவு வகைகள், இறைச்சி வகைகளும், மீன் உணவும், மரக்கறிஉணவுமென எதிலும் குறையில்லை உணவுப்பதார்த்தங்களை சிறப்போடு சமைத்த்து மட்டுமல்ல அத்தனை அழகுற ஸ்டார் ஹோட்டல்கள் தோற்க்கும் அளவுக்கு அழகூட்டி வைத்திருந்தனர் எல்லாமிருக்க காப்பியக்கோவும், அவரது இணையரும் இனிக்க.. இனிக்க எடுத்து வைத்தனர். காப்பியக்கோவின் மூத்த மகனார் சிறுபிள்ளையென ஒடி ஓடி சென்று எல்லாவற்றையும் குதூகளத்துடன் எடுத்துவந்து பாசமுடன் பறிமாறினார். இளைய மகனாரும் இணைந்து உபசரித்தார்.

எல்லாம் சிறப்பாக இருந்தாலும் விருந்தில் அந்த இரால் பிரியாணியை அடிச்சுக்கவே முடியாது, பிரமாதம். ஃபீப் வருவல், சிக்கன் ப்ரை எல்லாம் அவ்வளவு பதம். பைன் ஆப்பிளை காரம் கொடுத்து சமைத்து வைத்தது புதுமை இப்படி சொல்லிக்கொண்டே போகலா…….ம். அவ்வளவு வெரைட்டி. கடைசியில் விருந்து முடிந்த்து என்றால் டெசர்ட் சாப்பிடாமல் எப்படி விருந்து முடியும் என்றார் காப்பியக்கோ.. பிற்கு ஃப்ரஸ் ஃப்ரூட் சலாடும் ஐஸ்கிரீமும் வந்தது அத்தோடு பனை கரிப்பட்டி வெள்ளப்பாகு, தயிர் அடடே! அற்புதம் என அதிலும் நிறைய வெரைட்டி. அல்ஹம்துலில்லாஹ். போதும் வாப்பா என சொல்ல பெரிய மகன் எங்கள் இலங்கை வழக்கப்படி சுக்கு காப்பி தான் கடைசி ப்னீசிங் அதனால் அதை மறுக்கவே மறுக்காதீர்கள் என்றார். அதுவும் சுடச்சுட வர சாப்பிட்டு முடித்தோம், ஆனாலும் இன்னும் சாப்பாட்டின் ருசி நாவிலும் நெஞ்சிலும் ருசிக்கத்தான் செய்கிறது. மறக்க முடியாத விருந்து.

இனிய விருந்து முடிந்தாலும் எங்கள் அன்புள்ளத்தின் அளவலாவல் தொடரக்கூடியது. மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம், வாசல் வரை வந்து காப்பியக்கோவும் அவரது இல்லத்தினரும் எங்களை வழியனுப்பினர். 

தமிழ் எங்களை இணைத்தது நம் அன்னைத்தமிழ் புதிய இலக்கியத்தை அதுவும் அழிவுறாப்புகழ் இஸ்லாமிய இலக்கியத்தை விரைவில் அது தனக்குள் கைகொள்ளும். அது வளர்ந்து வருகிறது இதுவரை தமிழிலக்கியம் பெறாத ஓர் அழகோவியம் உருப்பெருகிறது அதை தீட்டும் ஓவியர் காப்பியக்கோ இவ்வரிய இலக்கியம் வளர்ப்பவர் அறிவியல் அறிஞர்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
06-07-2017

06 ஜூலை 2017

தமிழ் ஆசிரியரின் அமிழ்தான வாழ்த்து


எனது தமிழாசான் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் எனது இப்பிறந்த நாளுக்கு யாத்த வாழ்த்துக்கவிதை

தம்பி முஹைதீன் பாட்சாவுக்கு
இனியவை நாற்பது
நாங்கள் பெறாத பிள்ளைக்கு வரும் பிறந்தநாள்
எங்கள் பிறந்த நாள்களிலும்
இனித்து இனிப்பது.
ஞானிகள் ஆசான்கள்
நயம் மிக்க
நாவலர்கள் ஊட்டிய
அறிவுப்பால்
அருந்திய பிள்ளை!
இல்லத்தை,
உள்ளதைச்
சொல்லும் உள்ளத்தை,
தடுமாறிய பள்ளத்தை,
ஏற்கவியலா கள்ளத்தை
எழுதிக்காட்டிய
இனியவை நாற்பது
ஓர் இலக்கிய
வெல்லம்!
நாற்பது என்பது
நடுவுக்கும் குறைவு,
தமிழ்மகனே நீ
ஐந்திணை ஜம்பதாய்,
ஐந்திணை எழுபதாய்
திணைமாலை
நூற்றைம்பதாய்
அகநானூறாய்
நற்குணங்குடியாய்
நல் அருட்பாவாய்
வாழ்கவே!
பெருமான் மொழிபோல்
பெருகி மிளிர்கவே!


அன்பிற்கு நன்றி நவிழ்வதும் தான் இயலுமோ? :


இந்த பொழுது சிறப்பானதாக சென்றது, வாழ்த்து மழையென பொழிந்தது. நேற்று இரவே என் தாய் தந்தையர் மனமார வாழ்த்தி துஆ செய்தனர், இரவு ஸ்கைப்பிலும் காலை வாட்ஸப்பிலுமாக மனைவியார் மனமுருக காதல் கசிந்து வாழ்த்தினார், என் மகனும், தங்கை மகளும் மழலைக்குரலில் பாடலாக பாடி வாழ்த்தனுப்பினர், என் மகள் தான் உரிமையோடு நான் பக்கத்தில் இல்லாத குறையால் பேச மறுத்தாள் ஆனாலும் அம்மா சொல்ல "ஹேப்பி பர்த் டே" ஒரே சொல்லில் சொல்லிவிட்டு சென்றாள் எல்லா பெண்பிள்ளைகளும் இப்படித்தான் போல. பொசசிவ்னஸ் ரொம்ப ஜாஸ்தி.
பிறந்த நாள் என்பதால் பிரியாணி சாப்பிட திட்டம் தான் ஆனால் எனக்கு தலப்பா கட்டு பிரியாணி வருமென நினைக்கவே இல்லை, திடீரென காலை 11.30க்கு போன் செய்த மெளலானா அண்ணன் மதியம் சாப்பிட வேண்டாம் என்றார் ஏன் அண்ணன்.. என்ன விசயம் எனக்கேட்க.. நான் இப்போது துபாய் கராமாவிலிருக்கும் தலப்பாகட்டு பிரியாணி ரெஸ்டாரெண்டில் இருக்கிறேன், இக்பால் சார் தங்களுக்கு பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இன்னும் சில நிமிடங்களில் நான் அஜ்மானில் இருப்பேன் என்றார், உடனே போன் செய்து " இதெல்லாம் ஏன் சார்.. எனக்கு, உங்கள் அன்பும் வழிகாட்டுதலும் இருக்கு அது போதும்" என்றேன் எப்போதும் போல அன்பை பொழிந்து மறுத்துவிட்டார்கள், சரியான நேரத்தில் வந்த மெளலானா அண்ணன் கையில் இரண்டு தலப்பாகட்டு பிரியாணி கூடவே மிளகுக்காரத்துடன் நல்ல மசாலா இட்டு பதத்துடன் பொறிதெடுத்த மட்டன் பொறியல். சிறப்பான ருசி, சீரக சம்பா பிரியாணி. வயிறும் மனமும் நிறைந்தது, பெருந்தகையை மனம் மொழி மெய்யால் வாழ்த்தினேன். அதுவும் நான் இந்நாளில் தனிமையில் சாப்பிட கூடாதென மெளலானா அண்ணனையும் அனுப்பி என் தனிமையை விரட்டி இந்நாளை இனிதாக்கியதை நினைத்து நெகிழ்ந்தேன். உண்மையில் இதுகாரும் எல்லா வருடத்திலும் பெருந்தகை இக்பால் சார் எனக்கு பிறந்த நாள் எனில் இரவே போன் செய்துவிடுவார்கள் அல்லது சரியாக அந்த 12 மணிக்கு குறுஞ்செய்தியாக வாழ்த்தனுப்பி மகிழ்விப்பார்கள். இம்முறை எல்லா வகையிலும் என் நெஞ்சம் நிறைய செய்த அப்பெருந்தகையாளரின் அன்பிற்கு முன்னால் சொற்களற்று நிற்கிறேன்.
எனது ஆசான் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் எனக்காக பேரன்புடன் அழகான கவிதையாத்து பாசமுடன் என்னை எங்கள் வீட்டில் பிறக்காத குழந்தை என்று விழித்து அழகு தமிழின் ஆழிய சங்கத்தமிழ் நூற்களின் பெயரால் என்னை மனமார வாழ்த்தினார்கள். இதுவும் எனது பாக்கியமே.
இவையல்லாது இப்போதுவரை என்னை அன்பொழுக
நெஞ்சார முகநூலிலும், வாட்சப் வழியேயும், குறுஞ்செய்திகாகவும் வாழ்த்திக்கொண்டிருக்கும் அன்பார்ந்த உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என் நல விரும்பிகளுக்கும் நான் என்ன கைமாறு செய்துவிடப் போகிறேன், நன்றி என்று சொற்களில் சொன்னால் அவை சொல்லில் அடங்கிவிடாது என்னிடம் உங்களுக்குத் தர எனது அன்பைத் தவிர பிறிதில்லை. அன்பைத்தவிர பிறிதில்லை, அன்பைத்தவிர பிறிதில்லை.
நாம் அன்பால் என்றும் இவ்வாறே பிணைந்திருப்போம் ஒருவருக்கொருவர் பிறரின் நலம் போற்றி இன்பம் காண்போம். வாழ்க வையகம். வாழ்க நன்னெஞ்சினர்.
அன்பிற்கு நன்றி நவிழ்வதும் தான் இயலுமோ?
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா