30 ஆகஸ்ட் 2011

ஈகைத் திருநாள் நற்செய்தி!



ஈகைத் திருநாளை கொண்டாடும் தீன்நெறிச்செல்வர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இனிய ரமலான்:

இத்தனை நாட்களாய் பசித்திருந்து விழித்திருந்து தனித்திருந்து தொழுதிருந்து மறை விரித்திருந்து, ஜக்காத்தும், சதக்காவும் நிறைவாய் கொடுத்திருந்து, மனமும், மெய்யும் உண்மை மகிழ்வினில் அமிழ்ந்ததாய் தவக்கோலம் தரிக்கச் செய்து தனக்கே உரிய அற்புத பேரின்பத்தை அல்லாஹ்வின் அருளை சொறிந்து சென்றிருக்கிறது இனிய ரமலான்.

மெய்யாகவே ரமலானின் தனிச்சிறப்பும் உயர்வும் எந்த மாதத்திற்கும் இல்லை அது போல் எந்த மாதமும் தராத பேரின்பத்தையும், மனமகிழ்வையும், அமைதியையும், குணநலப் பேணல்களையும், நற்செயல்களையும் மற்றும் தூய சிந்தனைகளையும் தந்து கனிவும் இனிமையும் கலந்து நம்மை சுகந்தமாய் அது சூழ்ந்திருந்தது.

அந்த ரமலானில் அல்லாஹ்வும், அண்ணல் நபிபெருமானார் (ஸல்..) அவர்களும் சொன்னபடி அதனை மகிமைபடுத்தி அதனால் மகிமை அடைந்திருக்கிறோம். நம் உள்ளங்கள் மட்டட்ற்ற மகிழ்வின் திகைப்பிலும், நிறைவான திருப்தியிலும் இருக்கிறது. ஆனாலும் நம்மால் இயன்ற அளவு ரமலானின் புனிதச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தியும் இந்த காலகட்டத்தில் இருக்கும் கலாச்சார மாற்றத்தாலும், நவீன ஊடக தீயசக்திகளாலும், பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவிக்கிடக்கும் தீமைகளினாலும் இன்னும் பல சூழல்களாலும் மனிதனுக்கே உரிய பலகீனத்தாலும் நம்மில் பல தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவைகளை எல்லாம் பொருட்படுத்தாது.. எங்கள் இறைவா! கருணையாளனே! உன் அளப்பறிய கருணையினால் எங்கள் அனைவரின் செயல்பாடுகளையும் அங்கீகரித்து எங்களுக்கு உன் அருளின் முழுமையையும், உன் அருட்தூதர் (ஸல்..) -ன் பேரன்பையும் அள்ளித்தருவாயாக! எங்களுக்கு உன்னையன்றியோ அல்லது உன் வாசலையன்றியோ பிறிதொரு தளம் கிடையாது ஆகையால் எங்களை கிருபைக்கண்கொண்டுப்பார் நாயனே! என்று அவனின் அருளுக்காய் இறைஞ்சுவோமாக!

நன்றிக்கடன்:

இந்த மகிழ்ச்சி நிறைந்த இவ்வேளையில் நமக்கு இந்த உயர்வான மார்க்கத்தை அளித்த பேரிறைக்கு நன்றி செலுத்தும் அதே வேளை அந்த பேரிறையின் பெருங்கிருபையாய் இந்த பூவுலகில் வந்துதித்து தங்களுக்கு நிகரான பேரறிவாளர் யாரும் இலராய் தரணியில் தோன்றி அழகான மார்க்கத்தை நம் போன்றவர்களுக்கு வகுத்து அதை நிலைபெறச் செய்ய மனிதகுல வரலாற்றில் எந்த தீர்க்கதரிசியும் (நபியும்) பெறாத அவ்வளவு இடுக்கண்களையும், துன்பங்களையும் நமக்காக பெற்று பிறகு அதில் வெற்றியும் கண்டு நீங்களும் நானும் பின்பற்றும் அழகு மார்க்கம் அளித்த பெருமானார் நாயகம் (ஸல்..) த்தை நாம் உளமாற நாயகமே உங்களுக்கு எங்களின் மீது எவ்வளவு கனிவு, பாசம், அன்பு.. நீங்களே மனித சமுதாயத்தில் எல்லோரைவிடவும் எங்களின் மீது மெய்யன்பு செலுத்தியவர்கள்! எங்களுக்காய், எங்கள் நல்வாழ்வுக்காய், எங்களின் ஆத்ம நலனுக்காய் எங்களின் இம்மை, மறுமைக்காய் தாங்கள் எவ்வாரெல்லாம் சிரமப்பட்டீர்கள், எவ்வாறெல்லாம் தியாக வாழ்வு வாழ்ந்தீர்கள் என்று அவர்களை நாம் நன்றிப் பெருக்கோடு நெக்குருகி மனமார போற்றிட வேண்டும்,

மேலும் நம் பெருமானார் அவர்களை பெற்றெடுத்த அன்னை ஆமினா (ரலி) தந்தை அப்துல்லாஹ் (ரலி) வளத்தெடுத்த பாட்டனார் அப்துல் முத்தலீப், பால்கொடுத்த அன்னை ஹலீமா(ரலி) மிகப்பெரும் பலமாக இருந்த சிரிய தந்தையார் ஆருயிர் அபூதாலிப் அவர்கள், நிகரில்லா முறையில் நபிகள் நாயகம்(ஸல்..) த்திற்கு மனத்தெம்பூட்டி மிகப்பெரும் பக்க துணையாய் இருந்த அருமை மனைவியார் அன்னை ஹத்தீஜா நாச்சியார் (ரலி), அருமை மகளார் அன்னை ஃபாத்திமா நாச்சியார்(ரலி), மருமகனார் அலி (ரலி), பேரர்களான தியாக சீலர்கள் இமாம் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) மற்றும் அனைத்து திருக்குடும்பத்தினர்கள், அன்னவர்களின் அருமை தோழர்களான அபூபக்கர் ஸித்தீக் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), மற்றும் அஷ்ரத்துல் முபஷ்ஷராக்கள், முதல் அன்றைய பயங்கர சூழலில் முதலில் நபிகள் நாயகம்(ஸல்..) த்திற்காக இஸ்லாமிய பரப்புரைக்கு தனது இல்லம் வழங்கிய அருமை அர்க்கம் (ரலி), இஸ்லாத்தினை ஏற்று நமது நாயகதிற்கு உறுதுணையாக நின்றதற்காகவே மிகமோசமாக துன்புறுத்தப்பட்டு உயிர் துறந்த அனைத்து ஆண், பெண் தியாக சீலர்கள், பிற்காலத்தில் போரிட்டு வீரத் தியாகம் செய்த மேன்மக்கள், வழி வழியாக இந்த இஸ்லாத்தினை நம்வரை கொண்டு சேர்த்த உத்தம பெரியார்கள் என அல்லாஹ்வின் அருள் சூழ்ந்த அத்தனை மேலான ஆன்மாக்களுக்கும் நாம் அனைவரும் மிக..மிக.. அளவின்றி சொல்ல முடியாத அளவு வார்த்தையில்லாத அளவு கடமை பட்டிருப்பதால் அவர்களையும் அன்பொழுக நன்றியோடு நாம் நினைத்து பார்ப்போமாக! இவைகளெல்லாம் குறைந்தபட்ச நன்றி உணர்வாவது இருப்பவர்கள் செய்யது ஆகும்.

இறைஞ்சுதல்:

இந்த பெருநாளில் நாம் எல்லோரும் அருள் நபிநாதர் எண்ணப்படி பரந்த மனதுடன், விரிந்த சிந்தனையுடன், நான் நினைத்தது தான் இஸ்லாம் என்ற குறுகிய வட்டத்துள் சிந்திக்காது அதன் அகமியங்களை உணர்ந்திடவும், ஆன்ற அறிவினை பெற்று மகிழ்வெய்திடவும் முயல்வோமாக! இஸ்லாத்தின் பெருமேதைகளை மதித்து அவர்களின் தத்துவ முத்துக்களை போற்றி அவைகளை நம் வாழ்வு மேம்பட பயன்படுத்தி சிறப்புறுவோமாக!

சமுதாய ஒற்றுமையுடன் சீறிய முறையில் நட்புணர்வுடன் அனைத்து மக்களோடும் அன்பும், பாசமும், நேசமும் பாராட்டி அண்ணல் நபிகள் நாதரின் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைக்கு வலு சேர்ப்ப்போமாக!

நம் வாழ்வில் மகிழ்ச்சி என்றென்றும் சூழட்டுமாக! நம் அனைவரின் வாழ்வு இன்னும்.. இன்னும் மேம்பட்டு அமைதியான பெருவாழ்வை நாம் வாழ்வோமாக! நாம் வாழ்வதோடு மட்டுமின்றி நம்மால் முடிந்தவரை பிறரையும் மகிழச்செய்யும் அனைத்து முயற்சிகளையும் நாம் செய்வோமாக! பிறர் வாழ நாம் சந்தோசப்படும் உயரிய பண்பு நம்மில் தழைத்தோங்குமாக! நமது இந்தியத் திருநாடும், இவ்வைகயகமும் அமைதியுடன், செழிப்புடன் திகழட்டுமாக! இந்நன்னாளில் வல்ல இறைவன் இவ்வனைத்திற்கும் அவனது அருள் தூதரின் பொருட்டாலும் மற்ற அவனின் நேசர்களின் பொருட்டாலும் இதை நமக்கு என்றும் குறைவின்றி அருள்வானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அன்புடன்,

ஜா.முஹையத்தீன் பாட்ஷா (ராஜா முஹம்மத்)

ஃபுஜைராவிலிருந்து (அமீரகம்)

1 கருத்து:

ரெவெரி சொன்னது…

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்...
ரெவெரி