நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மீன் பிரியாணி, காலையிலிருந்து ஒரே சமையல் பிஸியில் நான்கு பேர் நானும் சென்று குழப்ப வேண்டாமெனும் நல்ல எண்ணத்தில் அங்கே செல்லவில்லை, அவ்வப்போது நிலைமைகளை ஆய்ந்து உணர்ந்ததோடு சரி, ஆனாலும் அகும் அந்த பிரியாணி எப்படி செய்வது என கற்க வேண்டுமென மற்றொரு நண்பர் எடுபிடியாக சம்மதிக்க, அவர்களின் கூட்டு முயற்சியில் ஒருவழியாக் 5 கிலோ மீன் பிரியாணியில் வெந்து பிரண்டு.. மனம் முரண்டு பிடிக்கும் அளவுக்கு மணம் பரப்பியது. எங்களின் பிளாட் நண்பருக்கு மாற்று வேலை ஒன்று உறுதியானதின் பொருட்டு அது.
பந்தியில் குந்திய அனைவருக்கும் நல்ல மீன் பிரியாணியோடு வெங்காய தயிர் பச்சடி மற்றும் முக்கியமாக அவர்கள் செய்த ஹைலைட் இஞ்சி – பச்சைமிளகாய் இரண்டையும் மிகச்சிறியதாக வெட்டி தயிரோடு பரிமாறியது தான். பிறகு ஸ்பிரைட் உற்றப்பட ஜில்லென எழுந்தோம். ம்ம்ம் செம சூப்பர்!
வந்த நண்பர்களோடு எல்லோரும் மலையாளத்தில் அவர்கள் கதையாடிக் கொண்டிருக்க நானும் மற்றவரும் அறையேகி தூங்கக்கூடாது என்னும் மன முடிவோடு ஓய்வில் மீண்டும் புக, மணி 3 ½ ஆனது, சரி ஒரு சாய் சாப்பிட்டால் தூக்கம் விலக மற்றவைகளை யோசிக்கலாம் என எண்ணி தேனீர் உண்டாக்க முயல்கையில் எங்களின் எல்லோருக்குமாக நீங்கள் உங்களின் பெருமுயற்சி கொண்டு அயற்சி விலகும் வகையில் ஒரு டீ கொடுப்பீராக! என பணிக்கப்பட சரி.. செய்வோமே என எல்லோருக்குமாக அன்போடு இனிப்பினை இட்டு கலக்கி கலக்கலாக ஒரு தேனீர் விருந்தளித்தேன்.
சூடோடு குடித்துக்கொண்டிருக்க நண்பர் ஒருவர் பக்கத்திலிருக்கும் பித்யா அருவிக்கு சென்று வரலாமா என கூற எல்லோரும் ஆமோதிக்க எங்களின் வாகனம் ஐந்து நபர்களை ஏற்றிக்கொண்டு சவாரிக்கு தயாரானது, பிதியா என்று பெயரை மட்டும் மொட்டையாக கேட்டதால் ஏதோ ஒரு அருவிக்கு நம்மை அழைத்துச்செல்லப்போகிறார்கள் இந்த வருடம் ஈத் பெருநாள் விடுமுறையில் எங்கும் போகாத குறை இதன் மூலமாவது தீர்ந்தால் சரி என்ற குஸியோடு இருபுறங்களிலும் இருப்பவைகளை பின்னோக்கி ஓட விடுவதாய், முன்னோக்கி எங்களின் நிசான் வேகமானது. ஃபுஜைராவிலிருந்து முரப்பா.. புருய்யீ.. என கொர்ஃபக்கான் வந்து சேர்ந்தது வாகனம்.
கொர்ஃபக்கான்..! சினேகிதர்கள் சகிதமாக வந்த பிரதேசமானாலும் என் இணைவியோடு உறவினர்கள் சகிதமாக இன்பச்சுற்றுலா வந்ததே என் மனமெங்கும் காட்சிகளாய் விரிந்தது. நீரில் கால் நனைத்த கடற்கரை, ஏறிய படகு, ஆடிய தொட்டில், கூடிய கூத்து.. வரிசையாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டே ஹோட்டலில் உண்ட சிற்றுண்டி.. என எல்லாம்!
தொடர் விடுமுறை நாட்களானதினால் எங்கும் கூட்டமென பீச், கார்பார்க்கிங் கிடைக்கவே கிடைக்காத பொருளென எல்லோரும் மெல்லமாய் ஊர்ந்தே தேடிக்கொண்டே செல்ல எங்கள் வாகனம் சற்றே எல்லோரையும் புறந்தள்ளி வேகமாய் வெட்டிக்கிளம்பியது, பித்யா நோக்கி. அது ஐந்நூறு வருட பழங்கால பள்ளிவாசலை கொண்ட ஓர் தளம்.
பிதியா-வின் பழங்கால பள்ளிவாசல் ( பிதியா, திப்பா பகுதி, ஃபுஜைரா மாகாணம், அமீரகம்)
போகும் வழியில் திரில்லான அனுபவம் அருமை, திடீரென பெரிய பள்ளத்தாக்கு.. பிறகு அதிலிருந்து மேல வரவேண்டும் அவ்வாறு வருகையில் எந்த வாகனம் எப்படி வருகிறதோ என பயமும் கூட.. (ஆனாலும் ஒரு சிறிய அருவிக்காக இத்தனை அழகாக சாலை அமைத்ததற்கு அரசிற்கு பாராட்டுக்கள் சொல்லத்தான் வேண்டும்) மீண்டும்.. மீண்டும் பள்ளத்தாக்குகளும், மலைமேடுகளும், காட்டருவிக்காக இட்ட பாலங்களும் என எல்லாவற்றையும் தாண்டி சென்றது துள்ளல் தான்!
பிறகு பிதியாவின் இலக்கின் இடம் அடைய, பிறகே நினைவு வந்தது இது 2005 லோ அல்லாது 2006 லோ நண்பர்களோடு வந்தது. பாக்கிஸ்தானி -யர்களின் பட்டாளங்கள் காரில் பாட்டுக்களை போட்டுக்கொண்டு குரூப்பாக அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடினர், பல அரபியர்கள், நம் நாட்டவர்கள் என பலரும் கார்களில் இறங்கியும், ஏறிக்கொண்டும், நின்றுகொண்டும் இருக்க, நாங்கள் அந்த செங்குத்தான மலையிலிருந்து கீழிறங்க ஆயத்தமானோம்.
வழியெங்கும் மலைக்க வைக்கும் மலைகள், மஞ்சள் வெயிலில் ஆகா எத்தனை அற்புதமான ஓவியமென பார்க்கும் விழி நிறைய. சரியான கேமெரா இல்லாதது தான் குறை, சரி மொபைலில் நிழற்படமென அவைகளை பிடியுங்கள் என்றால் அப்போது தான் என்னுடையதை சார்ஜ்ஜரில் இட்டுவைத்திருக்கிறேன், என்னுடையதில் கேமெரா சரியில்லை என கூற ஒருவரின் குறைவான சார்ஜ்ஜோடு கூடிய மொபைலில் வந்தவரை பிடிப்போம் என ஒப்பந்தம் செய்து ஒரு சில மட்டும் பதியப் பிடித்தோம்.
மேலிருந்து கீழ் நோக்கியும், மலையில் செங்குத்தான கரடுமுரடான அமைப்பினை பார்த்தும் ஏறவும் இறங்கவும் வேண்டுமெனில் மலைக்காத மனமும், நல்ல உடலும் வேண்டும் ஆகையால் நான் மாட்டேன் என்றார் ஒரு நண்பர் அவர் நாற்பதிற்கு மேல். பிறகு நாங்கள் நால்வரும் எண்ணித் துணிக கருமம் என்னும் வகையில் மலையிறங்கினோம். இறங்கும் நேரம் இரண்டு பாக்கிஸ்தானிகள் பேய்வேகத்தில் போட்டி போட்டுக்கொண்டு மலை ஏறியது ஆச்சர்யம் தான்!
காட்டாற்று கூலாங்கற்களில் நடந்தவாரே அருவிக்கு அருகில் சென்றோம், பொருங்கூட்டம் வேடிக்கை பார்க்க பல பேர் குளித்துக்கொண்டிருந்தனர், 4 வீல் டைரைவ் உள்ளவர்கள் சிலர் காட்டாறின் வழியாக குடும்பங்களையும் அழைத்து வந்தவண்ணம் இருந்தனர். எங்களவர் ஒருவர் தன் சார்ஜ் குறைந்த மொபைலுடன் படம் சுட மலையில் ஏறி குளிப்பவர்களை குறி வைத்தார். வந்தோம் குளித்தோமென்றில்லாமல் சில பாக்கிஸ்தானிகளும் ஏன், நம் மலையாளிகள் கூட அரைதென்னை உயரத்திலிருந்து குதித்தனர், ஏதோ ஆழம் இருப்பதானால் அவர்கள் பிழைக்கிறார்கள் எனினும் பாறைகளின் பாங்கு தெரியாது அவர்களின் விளையாட்டு வேதனையாகிவிடுமோ என்றே பயப்பட வைத்தது.
சரி வந்த பயனை அடைய குளிக்கலாம் என்று நண்பர்களை அழைத்தால் ஏற்பாடோடு வரவில்லை, சில ஸ்திரிகள் இருக்கிறார்களே என வர மறுக்க, குளிக்காது திரும்பினால் பயணம் பயனடையாது ஆகையால் வந்த ஸ்திரிகள் சென்றவுடன் ஆண்கள் மட்டுமே என உறுதிசெய்ய உடன் துகிலுறித்து நீர் புகுந்தேன்.
முதலில் அருவியிலிருந்து வரும் நீர் குளமென நிற்கும் பின் நீந்தி பாறை இடையில் புகுந்து செல்கையில் அருவி அடையலாம் அங்கே நல்ல ஆழம் கூட, அங்கே செல்கையில் உயரே இருந்து குதித்திடும் யாரும் நம் தலைமேல் விழுந்து விடக்கூடாதெனவே வேண்டிக்கொண்டே நீந்தி அருவியருகில் செல்ல அங்கும் நீர் வீழ்வதால் ஆழம் அருகிலும் ஐந்து பேர் இடைமறித்து குளித்துக்கொண்டிருக்க நான் முயலும் போது அவர்கள் நம் தமிழ் அன்பர்கள் என தெரியவர புன்னகைத்து வேண்ட ஒரு வழியாய் நானும் அருவியில் தலை நனைத்து மகிழ்ந்து குளித்து பிறகே கரை சேர்ந்தேன். தூரத்தில் பல குடும்பங்கள் வர உடன் ஈரத்தோடு அங்கிகளை அணிந்து புறப்பட்டோம் மீண்டும் மலையேற!
நன்றே நுரையீரல் சுருங்கி விரிய மூச்சு விடக் கூட சிந்தனை இல்லாது போகும் இன்றைய அவசரகதி உலகில் மலை யேறிய பின் நன்றாகவே மூச்சிளைக்க இதயத்துடன் நுரையீரல் வேகமாக சுருங்கி விரிந்து தன் முழுப்பணியாற்றியது!
பாலையில் ஓர் நீரருவி இருப்பது அரபியர்களுக்குத் தான் ஆச்சர்யம், ஆண்டவன் அருளால் நமக்கல்ல!
-ஜே.எம்.பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக