அலுவலகம் எல்லாம் முடிந்த மாலை அது, கொஞ்சம் பசியும்.. சோர்வும் சேர்ந்து இருந்தது, நண்பர் பிரபீஷ் வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தார்.. வரவேண்டுமானால் வாருங்கள் என அழைக்க நான் எப்போது திரும்புவீர்கள் என கேள்வி தொடுத்தேன், ஏனெனில் அலுவலகம் முடித்தவுடன் அடுத்த அலுவல் சில மணித்தியாலங்கள் மனையோருடன் தொலைபேசியிலும்.. காணொளியிலுமாக என்பது தான் நான் சுற்றிக்கொண்டிருக்கும் வட்டப்பாதை. ஒரிரண்டு மணியில் இல்லம் ஏகிவிடுவது சாத்தியமே என பதிலுரைக்க கல்பா புறப்பட்டோம்..
அந்தி சாயும் நேரம்.. அழகான ஒரு தீவு.. கடலுக்கு பக்கத்தில் மிகப்பெரும் சதுப்பு நில அமைப்பு.. தீவிலிருந்து பார்க்க நீர்நிலை நெடுகிலும் மத்தியில் எலுமிச்சை மரம் போன்ற வகை மரங்கள்.. இடையே குருவி.. பறவைகள்.. தவிர எங்கும் நிலவும் இயற்கை அமைதி.. நல்ல அருமையான சூழல், எந்த வகை மன இறுக்கமும் இங்கே தலைகாட்டாது ஓட்டம் பிடித்து விடும்.. அவ்வளவு நிம்மதியான சூழல்! இங்கிருந்து பார்க்கையில் தூரத்து தொடர் மலைகளுக்கு இடையே மறையும் சூரியன் பார்ப்பதற்கு மிக அழகு ஓவியமாக ரசிக்க வைத்தது.
( சார்ஜாவின் எல்லைப்புறங்களில் ஆரம்பிக்கும் தொடர்மலைகள் கிழக்கு அமீரகம் முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கும்)
நான் மட்டும் வந்தது சரியா என யோசிக்கிறேன், இடம் அவ்வளவு அழகு!
ஆஹா! அது என்ன முதலை.. என சற்றே வியக்க கண்ணில் பட்ட அதை நோக்கிய பின் தான் வியப்பின் முடிச்சு அவிழ்ந்தது, ஏரி போன்ற கடல் வழி நீர் நிலையாதலில் இரவு நேரங்களில் நீர் மட்டம் உயரும் போல.. எங்கும் சதுப்பாகவே ஓரங்களெல்லாம், மேலும் கரையோரங்களில் சுண்ணாம்புப்போன்ற சதுப்பு நில பாறைகள் உண்டு அவைகளை நீர் அரித்து.. அரித்து பார்பதற்கு சற்றே திகிலூட்டும் முதலை வடிவத்தில் அரிக்கப்பட்ட சுண்ணாம்புக்கள் சதுப்புப்பாறை!
கிட்டேயே போய் உறுதி செய்கிறேன் இது முதலை அல்லவே என..!
நண்பர் பிரபீஷும், எங்கள் வாகனமும்
மேலும் கீழுமாய் மடங்கி ஒடுங்கி கிளைத்த கரையோர மரம், ஒழுங்கா போட்டோ எடுங்க என்ற படி..
கரையோர சுண்ணாம்பு சதுப்பு மண்.. இவைகளில் ஏதோ பலவகைப்பூச்சிகள் துளையிட்டு துளையிட்டு குடும்பம் நடத்துகின்றது. ஈசல் போன்று இருக்கிறது உற்று பார்த்தால் தான் அதன் பெரும் படை தெரிகிறது.
இங்கும் இரவில் நீர் நிறையும்..
இருட்டிக்கொண்டு போகிறதே இப்போது போய் விட்டு மீண்டும் வரலாமா.. இல்லை நாம் கொஞ்ச தூரம் சென்று விட்டு வருவோம்..
அதோ பாருங்கள் கொஞ்சமும் பயமில்லாமல் யாருமற்ற ஏரியில் ஒரு அரபி இளைஞர் மட்டும் படகில் மிதக்கிறார்.. உண்மையில் முதலை இருக்குமா உள்ளே?
மறையும் சூரியனால் ஏரிக்கரை சிவந்தது!
இருட்டிய மாலை எங்கே போகிறாய்.. படகு சவாரி போதும் திரும்பி வா..!
இங்கே இருந்து கிளம்பிடலாம்!
அப்படியே எதிர் முனையிலிருக்கும் கடற்கரைக்கு காரை விடு எனச் சொல்லி அங்கே சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை நீலக்கடல் மட்டுமே.. அலை இருந்தது.. அரபிக்கடலில் அலை அவ்வளவு இருக்காது ஆயினும் இங்கே ஓரளவு இருந்தது. கொஞ்சம் பயம் தான் இதுவெல்லாம் நமக்கு தேவையா என மனதிலிருந்து ஒரு குரல், கொஞ்சம் சும்மா இருவேன்.. நான்!
அங்கே இறங்கி கடற்கரையிலிருந்து கடல் நோக்கி நடக்கையில் ஏதுமற்ற நீல வெளி மட்டுமே, நாங்கள் முன்னேற.. முன்னேற ஏதோ நெற்றியில் வானம் இடிப்பது போன்ற ஓர் உணர்வு.. திரைப்பட பாடல் காட்சியில் வரும் புகைப்போல ஓர் சூழல்.. மேகத்துக்குள் பயணம்.. வானத்தில் நாம் ஏறிவிட்டோமா.. ! போதும், ஓகே நாம் காருக்குள் ஏறுவோம்.. என வர .. வரும் வழியில் மீன் பிடித்து கொண்டு கரைக்கு வரும் சிலக்காட்சிகள்!
கடலே சென்று வருகிறோம்! என நாங்கள் திரும்ப.. தனியே.. தன்னந்தனியே ஒரு ஆள் மட்டும் உடற்பயிற்சி செய்தும் நீந்தியும்.. ஓகே.. ஓகே.. கீப் இட் அப் என்று சொல்லி நாங்கள் நாடு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் சதுப்பு நிலக்கரையோரம் நரிகளின் நடமாட்டம் அங்கும் இங்குமாக கண்ணில் பட்டது.
(இது புஜைராவிலிருந்து மிக அருகில் உள்ளது. சார்ஜா ஆளுகைக்கு உட்பட்டது. எங்கள் வாகனம் சார்ஜா பல்கலைகலகத்தின் கல்பா கிளையருகில்)
எல்லா படங்களும் மொபைலில் அங்கே எடுத்தவை தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக