16 செப்டம்பர் 2011

பேறாக ஆக்கிக் கொண்டார்!


காப்பியக்கோ. டாக்டர் ஜின்னாஹ் ஷர்ஃபுத்தீன் (இலங்கை)


கண்ணல் நபியின் மேலே

காவியம் ஒன்று கண்டேன்!

அட்டைப் பக்கத்திலோ

ஆசிரியர்ப் பெயர் பார்த்தேன்,

எனக்கோ பரவசம்! உடன்

தெளிந்தேன்..தெரிந்தேன்!

கவியாற்றல் இருக்கும்

புவியாற்றல் போல் இவர்வசம்.


ஏனெனில்,

ஜின்னாஹ்ஷர்புத்தீன் இவர் பெயர்,

பூவுலகப்புகழ் பூமான்நபி காவியமாம்

புர்தாஷரீப் யாத்த இமாம் பூசரியின் புனிதப்பெயர்


ஈழ நாடோ புலவர் தாயகம்,

இதயம் மகிழ்ந்து ஆசிர்வதித்தார்

கவியெழுத கண்ணல் நபி நாயகம்!


புலவர் மணியார் இவர் தந்தை,

புலவர் பணியில் இவர்..!

என்ன விந்தை?


காவியம் படைக்க..!

எழவேண்டும் வீரிய கற்பனை சித்தம்

விழவேண்டும் எழுத்து வித்தக முத்தம்

எழுவதை எல்லாம் எழுதிவிடவும்,

விழுவதை எல்லாம் விரித்து விடவும்,

முடியாது.. முடியாது.. காவியத்திற்கு உதவாது!


ஈங்கோ..! அமிழ்தாய் தமிழ்த்தாய்

முண்டி.. அண்டி..வந்து அணிசேர்த்து

பணிசிறக்க வைத்திருக்கிறாள்!


இதில்,

இலங்கைத் தமிழ் உளங்களை ஆள,

முழங்குகிறது நபிகளாரை காவியம்.

புலங்காகிதம் மெய்யுணர்கிறது!


தலைவர் நபிமேல் கொண்ட அன்புச்சிந்தையால்,

விரித்து தந்துள்ளார் உயர்ச்ஞானச் சந்தை! - நபி

புகழ்பாடும் இப்பாவலனால் சிறப்புற்றார் இவர் தாய்த்தந்தை!


கலாநிதி எனப்பெயர் பெற்ற - கவி

நிலாபதி ஜின்னாஹ், - நிழல்

இலாபதி நபிகள் நாயகரைஇவ்

விழாபதி யாக்கி காவியம் தந்தார் வாழி!


ஐந்து காவியங்கள் முடித்து,

ஆறாவதாக காவியம் எழுதியதோ

யாராக இருக்கவியலும் - அதிலும்

தேராக பவணிவரும் வார்த்தைகளால்

ஈராக வந்தவரைப் புகழ்ந்து - கவி

ஆறாக அன்பொழுக எழுதி,

பேறாக ஆக்கிக்கொண்டார்.

பாவலர் ஜின்னாஹ் வாழி!


மாறாக சிந்திப்போரும் - மதிக்

கூறாக.. படிக்க வேண்டுகிறேன்

நபி மகிமை உணர்வீர்.


இருதய அறுவையே இதற்காகத்தானோ

அதற்குப்பிறகே அமைந்தது இந்நூல்!

பிறக்கவேண்டும் காவியம் என,

மீண்டும் இவரை புதிதாய் பிறக்கவைத்து

திறக்க நாடினானோ இதயத்தை!


அன்று!

வாதப்பொழுதில்,

அனைத்திற்குமான மருந்தாய் சமைத்தார்

புர்தாவை இமாம் பூசரி!

இன்றோ!

மருத்துவ ஓய்வில் - தனக்கு

மருந்தாய் காவியம் ஆக்கினார்

பொருத்தமான இவர் தமிழ்க்கேசரி!


பூக்கள் என பாக்கள் ஆக,

ஈக்கள் என இறகு வீசி நிற்கிறோம்-இது

தூக்கலான தமிழ் சமையல்

ஆக்கித் தந்தார் சூப்பரோ சூப்பர்,

நீக்கல் என ஒன்றுமில்லை

ருசி உணர! வருவாய்..

உலகே! தமிழ் உலகே!


எழுபது நாட்களில் எற்றமுடை இந்நூலை,

தருவது என்பது படுசிரமம்!

ஆனாலும் விரும்பியதே பரப்பிரமம்!


புதுமை செய்திகள் பூத்துக்குளுங்க -அருமை

பதுமையாய் வந்து குளுமையோங்

மணம் குளிரச்செய்திருக்கிறது இந்நாளில் இது.


புதிய புதிய செய்திகள்

பதிய இந்நூல் நிற்கிறது - மனதில்

பூமானின் பேரன்பு ஈமானோடு வளர்கிறது.


வற்றாத சொல்வளம் கொற்றவன் அளித்துள்ளான்

பற்றாது யாவரையும் இந்நூல் விடாது,

பற்றிவிடும்.. மனக்கூண்டில்

தொற்றிவிடும், வெற்றிபெரும் இக்கவி கோப்பு!


கவிதை இன்பம் எனச்சொல்லுவார்களே..

அன்பர்காள்! உணர்க, காவியமிதைக் கண்டு!

உணர்வீர்! நுகர்வோர்க்கு தே கற்கண்டு!!


திருநபி காவியம்!

மணம் வீசி..மணம்வீசி மதினாவை சென்றடையும் - நபி

குணம்பேசி.. குணம்பேசி.. மதி நாவில் தேன்சொறியும் - இதை

தினம் தேடிப்படிப்போர்க்கு அஞ்ஞானக் கூன் நிமிரும்!


இன்றோ!

நபிகளாரும் உவக்கின்றார் நற்றமிழிசை ருசிக்கின்றார்,

நாயனவன் ரசிக்கின்றான் அமரர்களுடன் - இதை

நயமுடனே வாசிக்கின்றான் அவன்!


காவியம் தந்தவா வாழி!

கவிஞர் உன்தாய் ஆய்ஷா அம்மாள் வாழி!

கேட்டிருந்தோர் இச்சபையில் வீற்றிருப்போர் யாவரும் வாழி!


நன்றி !


வாழ்த்துடன்,

வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா.



2006 என நினைக்கிறேன், அவ்வமயம் துபாயில் கலாநிதி டாக்டர் ஜின்னாஹ் சர்ஃபுத்தீன் அவர்கள் தங்களின் நபிகள் நாயகத்தின் மீதான காவிய நூல் ‘திருநபி காவியம்’ வெளியீட்டு விழாவிற்கு அழைப்பின் பேரில் சென்றிருந்த சமயம் அதற்காக வாழ்த்துக் கவியாய் படிக்க வேண்டுமென பேரவாவில் எழுதிச்சென்ற கவியிது, அந்த நேரத்தில் சில சூழல் காரணமாக உடன் திரும்ப வேண்டியதாயிற்று, ஆகையால் இதை சபை ஏற்றமுடியாது போனது. இது இன்று உங்கள் முன்!

கருத்துகள் இல்லை: