இந்த சம்பவம் அரபு பாலையில் அன்றைய நஜ்தில், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நடந்தது.
பாலைவனப்பகுதியில் பயணம் செய்த இறைஞானி
ஒருவர் தொழுகை நேரம் வந்ததால் தொழத் தொடங்கினார்... அந்தப்பகுதி சரித்திரப்புகழ்
கருப்பழகி மஹ்தியின் மகள் லைலாவின் மீது தீரா காதல் கொண்ட மஜ்னு சஞ்சாரம் செய்யும்
பகுதி, அங்கு தான் மஜ்னு என்ற பைத்தியம்
சுற்றித்திரியும்.. அந்த இறைஞானி இப்போது தொழுது கொண்டிருக்கிறார், மஜ்னு உணர்வற்ற பைத்தியமாக
எப்போதும் போல் லைலாவை நினைத்தே கவிகளாய் புலம்பி.. புலம்பி..
இங்கும் அங்குமாக அலைகிறான்.. அவ்வாறு அலைகையில் தொழும் இறைஞானி பக்கமும் முன்னும், பின்னும், வலதும் இடதும் கூட
சிந்தனையின்றி அவன் வர நேர்ந்தது. தொழுது கொண்டிருந்த இறைஞானிக்கோ மஜ்னுவின் இந்த செயல் தொழுகைக்கு இடையூறை செய்தது.. அவரால் தாங்க
முடியவில்லை மிகுந்த கோபமுற்ற அவர்.. தொழுகையை முடித்ததும் "யே பைத்தியமே
உனக்கு தெரியவில்லையா.. நான் தொழுகிறேன் என" என்றார்!
மஜ்னு… சிரித்தான்!, இது
அந்த இறை ஞானிக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியது.., மேலும்
சொற்கள் பறந்தது...! இதற்கெல்லாம் நீண்ட சிரிப்பு சிரித்து முடித்துவிட்டு மஜ்னு பதில் சொன்னான்,
இறைநேசரைப் பார்த்து.... "நானோ ஒரு சாதாரண லைலா என்ற பெண்ணின் மீது
காதலில் விழுந்து அலைகிறேன் எனக்கு அவளைத் தவிர வேறேதும் தெரியவில்லை, நீங்களோ சர்வத்தின் மூலமான
எல்லாவற்றிற்கும் மேலான இறைவனை தொழுததாக சொன்னீர்கள்.. அப்படி நீங்கள் உண்மையிலேயே
அவனை மட்டும் நினைத்து தொழுகையில் இருந்திருந்தால்
அவனைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு தெரிந்திருக்காது.. நான் அங்கும் இங்கும்
அலைந்தது உங்களை இடையூறு செய்திருக்காது.. நீங்கள் தொழுவது கூட தெரியாமல் நான் அலைந்து கொண்டிருந்தேன்..
நீங்கள் தொழுது கொண்டிருக்கிறீர்கள் ஆனால் சிந்தனை அலைந்து கொண்டிருக்கிறது” என்றானாம்! இறைஞானி
தன்னை முழுவதும் செப்பனிட்டுக்கொள்ள தன் இறை நேசத்தை முழுமையாக்கிக்கொள்ள இந்த
சம்பவம் காரணமானதாய் பதிவுகள் பகர்கின்றது.
எப்படி மஜ்னூனுக்கு லைலாவை தவிர வேறு
எதுவும் தெரியாதோ அப்படித்தான் இக்கட்டூரை பேசும் இஸ்லாமிய
சூஃபிகளான மஸ்தான்கள் என அறியப்படுபவர்களுக்கும் இறைவனை யன்றி வேறெதுவும் தெரியாது.
மஸ்த் என்ற போதை சதா நேரமும் இவ்ர்களை ஆட்கொண்டிருந்ததனால் இவர்கள் மஸ்தான்கள்
எனப்பட்டார்கள். இந்த மஸ்த் ஏதோ செயற்கையான போதைப்பொருளை கொண்டு வந்ததல்ல, வருவதல்ல.. செயற்கையான போதைப்பொருட்கள் இந்த
போதையை தரவும் முடியாது, இது
இயற்க்கையில் இயற்கையாக இயற்கையின் கர்த்தாவின் மீது வரும் மஸ்த்
ஆகும். இது அறிவை மயக்கும் போதையல்ல அறிவால் அறிவாகவே இருக்கும் போதை, இந்த போதை இறை போதை.. எந்த
போதையும் தெளிந்துவிடும் ஆனால் மஸ்தான்களின் இறை போதை என்றும் தெளியாது ஆகவேவும்
இவர்கள் மஸ்தான்கள் எனப்பட்டார்கள். ‘மஜ்னூன் லைலாவை காதலித்து
போதையானான்’ ஆனால் ‘மஸ்தான்கள் லாயிலாஹ இல்லல்லாஹு வை காதலித்து போதையானார்கள்’.. இவர்கள்
கொண்ட காதல் போதையை சதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியாது இது எதையும் தாண்டி
புனிதமானது.
உலகெங்கும் வாழும் இறைநேசர்களின் கொள்கையாம் தூய அத்வைதமான எல்லாம் ஒன்றென்ற சூஃபியிஸ கொள்கையே இம்மஸ்தான்களின் கொள்கையும் ஆகும். அந்த ஒன்றையே நேசித்து.. அந்த ஒன்றையே யாசித்து
தங்களின் வாழ்வை வாழ்ந்தவர்கள்..! வாழும் நாட்களில் அவர்களின் கண்கள்
திறந்திருக்கும் ஆனாலும் அவர்களின் பார்வையிலெல்லாம் படந்திருந்தது பரமனின்
திருக்காட்சியே! செவித்துளைகளின் மூலம் அவர்கள் கேட்டதெல்லாம் அவர்களின்
சிந்தனையின் சிம்மாசனமாய் அடந்திருந்த செம்பொருள் இறையே. மூக்காலும்
முகர்ந்ததெல்லாம் இறை நுகர்வே தவிர வேறில்லை. அங்கனம் ‘லஹூ மாஃபிஸ்ஸமா வாத்தி
வமாஃபில் அர்ழ்’ ( வானங்களிலும்
பூமியிலும் அவனைத் (அதை) தவிர வேறொன்று இல்லை ) என்ற இறைவசனத்திற்கேற்ப இறையே பிரதானமாக சிந்தையெல்லாம் நிறப்பி
புறப்பொருளை ஏதும் காணாது புறப்பொருளின் அகப்பொருளையே எப்போதும் பார்த்து பரவசம்
கண்டு நின்றவர்கள் தான் மஸ்தான்கள்.
அதனாலேயே இவர்கள்
என்றும் உடலின் புற அழகு குறித்து கவலைப்பட்டது கிடையாது.., இது பற்றி மனிதர்களின்
விமர்சனங்களையும் சட்டை செய்பவர்களாய் இவர்கள் இருந்ததில்லை. உணவு குறித்தோ..
உடைகுறித்தோ.. உறையுள் குறித்தோ.. இவர்கள் நம்மை போன்று கணக்கீடுகள்
செய்வதறிதாதவர்கள். ஆதலாலேயே இவர்கள் மஸ்தான்கள் எனப்பட்டனர். மஸ்தான்கள்
எல்லோரும் இறைவனின் அகமியத்தை உணர்ந்த இறைஞானிகள். ஆனால் எல்லா இறைஞானிகளும் மஸ்தான்களாக இல்லை, இறைஞானியாக மஸ்தானாய் இருக்கவேண்டும் என்ற சரத்தும்
இல்லை. நாம் முன்னரே குறிப்பிட்டது போல் எந்த ஒரு மஸ்தான்களும் தாம் மஸ்தானாய்
ஆகவேண்டும் என நினைத்து ஆவதில்லை மாறாக அவர்களது இறைபோதை அவர்களை அவர்களையும்
அறியாது தன்னிலை மறக்கச் செய்ததனால் ஆனதே ஆகும்.
மேற்கூறப்பட்ட
நிலையில் மஸ்தான்களாக நம் தமிழ் தரணியில் உலவி மண்ணில் புனிதப் பார்வையை தந்து ஞானமெனும் இறையருட் போர்வையால் மாந்தரை
அணைத்து எல்லோருக்கும் அறிவுக்கண் திறக்கவும், ஆத்ம நிம்மதி கிடைத்திடவும்
பாடுபட்டு உலகின் எதார்த்தத்தை எடுத்துக்கூறி ஒவ்வொருவரும் நித்திய ஜீவன் பெற
தங்களது வாழ்வையே அற்பணித்த இறையருட் செல்வர்களாகிய மஸ்தான்கள் தமிழகத்தின் பரவலான
எல்லா ஊர்களிலும் தங்கள் பூத உடலை மறைத்து வாழ்கின்றனர், அவர்களில் பிரசித்திப்
பெற்றவர்களில் பிரதானமானவர்களான.. தமிழ்ச்சித்தர்களில் ஒருவராகவும் கூறப்படுகின்ற
குணங்குடி மஸ்தான் சாஹிப் அவர்களும், காரைக்காலில் அடக்கமாகியுள்ள மஸ்தான் சாஹிப்
அவர்களும் இன்ன பிற மஸ்தான்களும் மக்கள் நன்றே அறிந்தவர்கள்.
அந்த வரிசையில் தான்
எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் பல காலம் முன்பு வாழ்ந்து தனது பலமான
இறைக்காதலால் ஆத்ம ஞான பெருஞ்சக்தியடைந்த மாமேதை, தன்னிலை இழந்தே பல ஊர் உலகங்கள்
சுற்றி உலவிய இறையின் பெருநேசர், சில தருணங்களில் அவர்களில் உடலங்களே பல பாகங்களாக
ஆங்காங்கே கிடத்தப்பட்டு இருக்குமாம் அந்த அளவுக்கு இறை காதலின் மஜ்தூபுடைய உச்ச
நிலையில் இருந்த இறை ரகசியத்தின் பெருநெருப்பை சுமந்து வாழ்ந்த அதிசயப்பிறவி
மாட்சிமை பொருந்திய மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் அடக்கமாகி இருக்கிறார்கள்.
அவர்களின் அற்புதங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பல நூற்றாண்டுகளாக அண்டி வருபவர்கள்
அனுபவித்து வருவதாகும்.
வழுத்தூர் வாசிகள்
தஙக்ளின் எந்த ஒரு சுக துக்கமாக இருந்தாலும் இவர்களின் சந்நிதியில் வந்து வஸீலாவாக
ஆக்கி இறையருளை வேண்டுவது மரபு. திருமணத்தில் மாப்பிள்ளை ஊர்வலங்கள் இங்கே
நிறுத்தப்பட்டு இவர்களின் வஸிலாவை தேடி இறைவனிடம் பிரார்த்திப்பதும், பயணங்கள்
செல்லும் யாராக இருந்தாலும் இவர்களின் சந்நிதி வந்து அதை இறை சிறப்பாக்கி அருள
வேண்டுவதும் புராதனமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆகும். என் தந்தைவழிப்
பாட்டனார் மர்ஹூம் முஹையத்தீன் பாட்ஷா (பாவாஜி பாய்) அவர்கள் மெய்ஞான தேட்டமுள்ள
மனிதர் என்றும் அவ்வகமியங்களை உணர்ந்ததாலும் தேடல் மிகுந்த வாழ்வு வாழ்ந்ததாலும்
மலேசியாவிலிருந்து ஊர் வந்து இருந்தால் ஒவ்வொரு நாள் மஃரிபிற்கு பிறகும் புனித
மக்பரா சென்று சற்றே தியானித்து வரும் வழக்கம் கொண்டிருந்தார்கள் எனவும் வீட்டில்
சொல்லக்கேட்டிருக்கிறேன்.
மேற்கூறப்பட்ட எங்கள் வழுத்தூரில் அடங்கியிருக்கும் மஹானின் நினைவு நாள் இன்று (30-06-2012) கொண்டாடப்பட்டது. திரளான மக்கள் அணியணியாய் கலந்து கொள்ள சீரும் சிறப்புமாக இருந்ததாக கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக இருந்ததாகவும் எப்போதும் போல் எல்லா சமூகத்தினரும் மதமாச்சரிங்களுக்கு அப்பாற்பட்டு மகான் அவர்களின் ஆசியை பெற நாடி வந்திருந்ததையும் ஊர்மக்களுக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும் வழங்கப்படும் அன்ன தானம் இன்று மிகவும் பரக்கத்தாகவும், நன்றாகவும் அமைந்ததாக தகவல் பெற்றேன்.
மேற்கூறப்பட்ட எங்கள் வழுத்தூரில் அடங்கியிருக்கும் மஹானின் நினைவு நாள் இன்று (30-06-2012) கொண்டாடப்பட்டது. திரளான மக்கள் அணியணியாய் கலந்து கொள்ள சீரும் சிறப்புமாக இருந்ததாக கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக இருந்ததாகவும் எப்போதும் போல் எல்லா சமூகத்தினரும் மதமாச்சரிங்களுக்கு அப்பாற்பட்டு மகான் அவர்களின் ஆசியை பெற நாடி வந்திருந்ததையும் ஊர்மக்களுக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும் வழங்கப்படும் அன்ன தானம் இன்று மிகவும் பரக்கத்தாகவும், நன்றாகவும் அமைந்ததாக தகவல் பெற்றேன்.
கடந்த பதினைந்து வருடஙகளாக தர்ஹா பராமரிப்பு மற்றும் ஒவ்வொரு மாலையிலும்
தர்ஹா மற்றும் அதன் சுற்றமுள்ள வீதி விளக்குகளை ஏற்றுவது பின் காலையில் சுப்ஹு
தொழுதுவிட்டு அணைப்பது, காலம் தவறாது சுத்தம் செய்வது, விழாக்கான ஏற்பாடு செய்வது,
அன்னதான வசூல் போன்றவற்றை நிர்வகிப்பது என எல்லாவற்றையும் பார்த்துவரும் ஜனாப். பீர்பாய்.
ஜைனுல் ஆபிதீன் அவர்களின் பங்கு இவ்விழா வேளையில் மிகவும் நன்றியுடன் நினைத்து போற்றத்தக்கது,
இவருடன் கை கோர்த்து பங்காற்றும் ஜனாப். அஹமது சித்தீக் அவர்கள் மற்றும் ஹந்தூரிக்கு
களப்பணியாற்றிய ஜனாப். கமால் அண்ணன், ஜனாப். ச.மு. அஸ்ரப் அலி, சென்ற ஆண்டுவரை ஊரில் இருந்த போது இதற்காக
விருப்பமுடன் பணியாற்றிய ஜனாப்.எஃப்.சுலைமான் உள்ளிட்ட குழுவினரையும், முன்பு
இதற்காக சிறப்பாக பணி செய்து மறக்கமுடியாத நினைவுகளை நம்மளவில் விட்டுச்சென்ற
எல்லோராலும் ‘சிக்கந்தர் வாசகசாலை ராஜ் முஹம்மது பாய்’ என அறியப்பட்ட துருவத்தார்
ராஜ் முஹம்மது அவர்களையும், இவருக்கும் முன்னோடிகளான
மர்ஹூம்.வெள்ளம்ஜி. முஹம்மது ஹனீப், ‘பெரியபாவா’ அப்துல் காதர் (ஜனாப்.அஹமது
சித்தீக் அவர்களின் தந்தையார்) மர்ஹூம். ஜனாப்.க.இ.ப.முஹம்மது இஸ்மாயில்
இவர்களையும் காலம் காலமாக களப்பணியாற்றி இவ்விழா சிறக்க பணியாற்றி திரைக்கு
பின்னால் உழைக்கும் நன்மக்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் இக்கட்டூரை நெகிழ்ந்து மனமுவந்து வாழ்த்தி மகிழ்கின்றது, இவர்களையும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நேசர்களையும் வல்ல அல்லாஹ் அவனது
தூதரின் பொருட்டாலும், இவ்வுயர் நேசர் வள்ளல் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்
அவர்களின் பொருட்டாலும் பொருந்தி அருள்வானாக! ஆமீன்.
أَلَا إِنَّ
أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அல்லாஹ்வின் நேசர்களான மெய்நிலை கண்ட மகாத்மாக்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
அல்லாஹ்வின் நேசர்களான மெய்நிலை கண்ட மகாத்மாக்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
(அல்-குர்ஆன்)
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
4 கருத்துகள்:
//‘மஸ்தான்கள் லாயிலாஹ இல்லல்லாஹு வை காதலித்து போதையானார்கள்’..//
மஸ்தான்களெனும் இறைக்காதலர்கள் பற்றிய நல்ல விளக்கமான ஆக்கம்.பாராட்டுக்கள் சகோதரரே....!
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புத்தம்பி,
மிக நல்ல பதிவு.
இதுபோல் செய்திகளைத் தொடர்ந்து எழுதுக.
வாழ்த்துக்களுடன்,
அத்தாவுல்லா.
கண்ணன்றி காண்பவனை காதன்றி கேட்பவனை எண்ணி லடங்கானை எப்பொழுதும் யான் புகழ்வேன்
Janab Mohaideen Batcha Saheb, Assalamu Alaikum,
Your article on the Sufi saints and masthans made very interesting reading. Circulate more articles like this to all of us.
The incident of Majnu and the Sufi saint is an eye opener to all of us.
Happy to note that the annual Urs festival of Masthan Sahib Dargah in Vazhuthur was attended by large number of Muslims. My salams to Janab Zainunabideen sahib, Ahmed Siddique sahib, S. M. Ashraf Ali shib, F. Sulaiman sahib, who take care of the Dargah very well every day.
Pray for us at the Dargah every day.
Vassalam.
Syed Muthahar Saqaf, Chief Reporter / Senior Assistant Editor, The Hindu, Tiruchi. 98424 46629.
கருத்துரையிடுக