04 நவம்பர் 2011

அஃதின்றி..!


மானிடா!

திண்ணமாக கூறு - உன்

எண்ணப்படி ஏதும் உண்டா

பின் எப்படி எல்லாம் உன்னால்..?


எல்லாமும், எல்லாமுமான உன்

எசமானனால் தான் என்றால்.., -எதன்

சலனமும் கூட அந்த

பேருண்மையின் பேராற்றலின்

சமிக்கையில் தான் என்றால்..,

உன்னால் தான் என்பதை நீ மற!


நீ என்ற ஒன்றே இல்லை என்றான பின் - அஃதின்றி

உன் சிந்தனை என்று தனித்த ஒன்றுண்டா..?,

உனதென்ற செயல்கள் தான் சாத்தியமா..?


பின் என்ன விந்தையடா

உன் வாதத்தில் ஏதும் நியாயம் உண்டோ…?

நீயே சொல்!


வ்வாறு இனி சிந்திக்காதே

சதா உன் சரணத்தை

அவனில் ஜனன மடைய செய்!


அனைத்திலும் உன் அரசனின்

ஆளுமை எனில் - உன்

அற்ப உடல் அணுத்துகள்கள்

அதற்கு விதிவிலக்காமோ?


உன் மனதை கனம் கூட

நீ வழி நடத்தாதே - அந்த‌

சாத்தானின் சந்நிதியிலிருந்து

நாற்றமெடுத்த பல பேய்கள்

சீற்றமடைந்தாட மனமதில்

மேடை கொடாதே!


பரிபூரணத்தின் பாதுகாப்பில்…,

தாய்மடி அரவணைப்பில்..

தஞ்சமென்று இருக்கும் நீ

கொஞ்சமும் சஞ்சலமில்லாது உறங்கு!


நீ மட்டுமே நிம்மதிக்குரியவன்

ஆதலில் நன்றே உறங்கு!


ஏகத்தில் தேகம் நிறைத்த

மானின் அடிமையே - அதன்

மோகத்தில் உனை இழந்தால்

தாகத்தில் நீ இருந்தால்

மேகத்துள் மழை நீர் போல்

உன்னில் நீ அறியாததெல்லாம் வெளியாகும்!


-ஜே.எம்.பாட்ஷா


நான் 2002-ல் துபை சென்ற புதிதில் மதிப்பிற்குரிய அண்ணன் வழுத்தூர்மெளலானா அவர்கள் சகோதர சமயத்து அன்பர்களோடு துபை தேரா-வில்தங்கியிருந்த அறை தான் எனக்கான நிம்மதித் தளம்! அலுவல் விட்டு வந்ததும்அங்கே இரவு எட்டரை அல்லது ஒன்பதுக்கு மணிக்கு சென்று பின் பதினொன்றுவாகில் தான் திரும்புவேன்.. அந்த சமயத்து நாட்களில் 3-09-2002 அன்று இரவுஅவரின் அறையில் திடீரென நான் எழுதியது.


(குறிப்பு; நீ மட்டுமே நிம்மதிக்குரியவன் என்று மேலே குறிப்பிடுவதில் நீ என்பது இறை இருப்பை உணர்ந்தவர்களை குறிக்கும்)

2 கருத்துகள்:

Kousalya Raj சொன்னது…

//மேகத்துள் மழை நீர் போல்

உன்னில் நீ அறியாததெல்லாம் வெளியாகும்!//

மிக அருமையான ஒரு கவிதை படித்த திருப்தி ! வாழ்த்துக்கள்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

@Kousalya, தங்களின் கருத்துரைக்கும்..புரிதலுக்கும் நன்றி..!