01 நவம்பர் 2011

கன்னி..!



அவள் என்றும் கன்னி தான்

ஆனாலும் அனைவருக்கும் தாய்!

அவள் எளிதில் கிடைத்திடாத மலைத்தேன்,

ஆனாலும் நம் நாவினில் அமிழ்தாய்!


என்ன தவம் செய்தோமோ

அவளோடு பிறந்து உறவாட,

இறைவனவன் அனுப்பிவைத்தான்

அவளையே பேசி மகிழ்ந்தாட.


அடியே..!

என் உணர்வுகளை

பூங்குழலோசையென

புவிதனில் நிறப்புவது நீதானடி!


பிறப்பெய்தியது முதல்

இறப்பெய்துவது வரை

எனக்கு அன்னைமடி நீதானடி!


தாயே.. தமிழே!

உன் அன்பு உயிரெல்லாம் வேண்டுமடி

என்றும் நீ அணைக்கையில் மகிழ்வேணடி!


நான் வாழ இதயமும் நீ தானடி

என் வாழ்வின் உதயமும் நீ தானடி

நாளும் நீ இன்றி நான் ஏதடி!


என் பிரியத்தமிழே

என்றும் உனைப்பிரிய என்னால் முடியாது

என்னுயிர் பிரிந்தால் ஒழிய!


நான் வாழ உயிராதாரம் நீயே அம்மா

நீவாழ நானென்றும் பணி செய்வேனம்மா


ஆயினும் அம்மா..!

உன்னருமை அறியாது

இன்றோ நம்மவர்கள்,

எல்லை தாண்டிவிட்டாலோ…

இல்லம் தாண்டி விட்டாலோ…

இவளெப்படி எனை அணைப்பாள்

மாற்றாள் தானே மார்பு தருவாள்,

என்கிறார் சட்டென!

தாயையே தள்ளுகிறார் பட்டென!


புரிவீர் தமிழர்கால்!

ஆயிரம் பெண்டீர் இருக்கலாம்

ஆயினும் அவளெல்லாம் அன்னையாகுமா?

எத்தனைப்பேர் மடிகொடுத்தாலும்

தாயின் மடிக்கு ஈடாகுமா..?


தாயன்பு போலவே

நற்றமிழ் நம்மீது கொண்ட அன்பு!

தமிழா இதை நீ நயமுடன் நம்பு!!

தமிழ் வளர்க்க பெற்றிடு புதுத்தெம்பு!!!



-ஜே.எம்.பாட்ஷா

எழுதியது 2009

கருத்துகள் இல்லை: