27 நவம்பர் 2011

இனி இவன் மனிதன் அல்ல!



அவன் இப்போது

முதுமையின் அந்திம நேரத்தில்..,


பலமும் முறுக்கும்

ஆணவமும் திமிரும் அற்று

அடக்கப்பட்ட புலன்களுக்குள்

மனமும் உணர்வும் அடங்காமல்

கிடப்பவன் அவன் தான்..!


கனவிலும் கூட

இப்படியெல்லாம் ஒரு நிலையை

நினைத்து பார்த்திருக்கவும்

அவனால் முடிந்திருக்குமோ..!


புலன்களின் பலகினங்களில்

இப்படியெல்லாம் விதவித அவஸ்தைகளா..?


காலம் பூராவும் அவன் செய்த

புண்ணியங்களின் பலன்கள் எங்கே..?

அவன் செய்த வாதங்களின்

அறிவுத்திறமைகளெல்லாம் எங்கே..?

பேயாய் அலைந்து இராப்பகலாய்

மற்றவனை ஏய்த்தும் வீழ்த்தியும்

அவன் கண்ட செல்வங்களெங்கே..?


சுற்றி சுற்றி வந்த

அவனின் உறவுகள் தான்

இன்று ஏதும் உதவ முடியுமா..


கோபம் .. தாபம்…

விருப்பு.. வெறுப்பு..

கொள்கை.. கோட்பாடு..

புகழ்.. பெருமை..ஆடம்பரம்.. அது.. இது என்ற

எல்லா மண்ணும் மண்ணான

வேளையிது அவனுக்கு!



எல்லாம் இருந்தும்

எல்லாம் அற்றவனாய்

இங்கே அவன் தான்..!


எலும்பும் தசையும் கொண்ட

அவனின் உடல்கூட்டிற்கு வயதாகிவிட்டது

எழும்பிடும் உணர்வுகளுக்கு தான் வயதாகுமா..


வேர்களான அவனின் நரம்புகளையும்

சாறுகளான அவனின் இரத்த ஓட்டத்தினையும்

காலம் கெடுத்திருக்கலாம்..,

மனதிற்கு முதிர்வொன்றும் இல்லையே..,

என்ன செய்யவான் அவன்!


ஆரம்பம் கொண்ட உடல்

முடிவெய்தத்தான் வேண்டும்

ஆரும் இவ்வோட்டத்திற்கெதிராய்

ஏதும் செய்திடல் இயலாது


பருவங்கள் பறந்து இளமை கண்டவன்

முதுமை கழியும் நேரம் - அவனின்

மாற்றங்கள் காணா உயிர் உடலோடு

உடனிருக்க வகையழிந்தால்

என்ன சொல்ல அந்த நேரப்போராட்டத்தை..!


அவன்..

உடல் விடை கொடுக்காது..

உயிர் நிலைக்க முடியாது

பலகீனம் சூழ்ந்த கருவி

பலமாய் எப்படி இயங்கும்

தேய்ந்து.. தேய்ந்து.. தேய்ந்து தேககூடுபோனதால்

ஒய்ந்து அடங்கிடுமே இது நாள் இயக்கமெல்லாம்…!


கண்கள் திறந்திருக்க..

காதுகள் கேட்டிருக்க..

சுவாசம் சுழன்றிருக்க..

உணர்வும், சிந்தனையும்,

புலன்களை இயக்க இயலா நிலையில் இன்று அவன்..

சக்தி இழந்த வெறும் சக்கை…


என்ன செய்ய…

என்ன சொல்ல..

மனித பலகீனம்.. அவனும் விதி விளக்கல்ல!

ஏதும் இயலாது.. முடியாது.. அவனால்..!


பலகீனம்.. பலகீனம்.. பலகீனம்!

பலகீனத்தின் தாக்கம் உடலெங்கும் விரவ

கொஞ்சம் கொஞ்சமாய் சாவு கவ்வ

எல்லாம் செத்தப்பின் சடலம் ஆகிவிட்டான்..!

இனி இவன் மனிதன் அல்ல!


-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: