எத்தனை ரசனை அந்த இறைவனுக்கு,
இத்தனை அழகாக இயற்கையை படைத்திருக்கிறான்!
எந்த கவிஞனுமே இயற்கையினை
இவ்வளவு அழகுடன் பாடியதில்லை இதுவரை,
வெந்ததும் வேகாததுமாய் தவிர!
ஓசை யில்லாமல் கீற்றின் காதுகளில்
பாசை கற்றுக்கொடுக்கும் காலில்லா காற்று!
முயற்சி செய்.. முயற்சி செய்... என
மனதிற்கு மதிகூறும் கடல் அலை!
நிம்மதியின் நிஜமென
பார்த்தாலே மனதில் அமைதிமேவ
வான சம்மதத்துடன் மிதக்கும் நிலவு!
அடிக்கிற கைதான் அணைக்கும்
வெயிலும் நானே வெளிச்சமும் நானே
என்றோதும் சூரியன்!
அன்பையும் கூட
வேறு வடிவில் படைத்திருக்கிறேன்
பருகிப்பார் என்பது போல
பசுமை மாறாக் காடுகள்!
வெடித்துத்தான் உயர்ந்தேன்
என்போல் மனதில் உறுதி பூண்
என்று சொல்லும் உயர் மலைகள்!
நதியாய் ஊர்ந்து சென்றாயினும்
உலகம் வளர்ப்போம் எனக்கூறும் நீர் அருவிகள்!
இன்பமே எங்கள் ஆகாரம்
மனிதா! எங்களைப் போல,
மனதில் கனமின்றி பாடிப்பறவென
கூச்சலிட்டு உணர்த்தும் பறவைகள்!
வேகம் மிக.. வலிமை மிக..
போராடித்தான் வாழ்வு நடத்த வேண்டும்
அஞ்சினால் வாழ்வேது எனக் கூறும்
வனத்தை ஆளும் அசைவர்கள்!
இங்ஙனம் நீளும் பட்டியல் ஓர் முடிவிலி..!
எல்லாவற்றிலும் எல்லையில்லா
அவன் ரசனை குதித்தெழும்..!
ஆயிரம் அர்த்தங்களுடன் நின்று
படிப்பினைப் பகர்ந்திடும்..!
சிந்தித்தாலோ அவனின் அற்புதங்கள்
முளையின் மூலை முடுக்கெல்லாம் விரவும்!
அத்தனை ரசனையும் அவனுக்கு மட்டுமே சொந்தம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக