21 நவம்பர் 2011

நெஞ்சமெல்லாம் நீயே அம்மா!




உன் இமைகளில் என்னை ஏந்தி
எண்ணத்தால் எப்போதும் சூழ்ந்து
என்னை வளர்த்த பொழுதுகளில்..
நானே நாணும் அளவுக்கு
என்னை பிரியமுடன் அழைத்து
ஆரத்தழுவி உச்சிமுகர்ந்த‌ பேரன்பே!

ஆர்த்தெழும் அருவியில் கூட
சீரின்றி பலவாறு நீர் விழும்,
என்னை உயிரின் உயிராக பார்த்து
நீ வாழ்த்திய வாழ்த்துச் சுனைகளிலிருந்து
அருவி நீருக்கு சீப்பிட்டு வாரியது போல்
சீரோடு வெள்ளமென வருமேயம்மா..
உன் திருவாய் மொழி!

அந்த வாழ்த்துக்களின் வியாபங்களில்
அதன் தூய்மைகளின் ஜீவன்களில்
நிறைந்து இருக்கும் அருள்கள் தானே
இன்றும் என்னையும் சுற்றத்தையும்
நன்றே வாழ வைத்திருக்கிறது!

நாளும் பொழுதும் என்னை
அன்னையென வளர்த்ததும்
காட்சிக்கு முன்
நான் அறியா குருவாய் ஆகி
நிகரற்ற மேன்மைச் செயல்களால்
ஆன்மீக தேடல்களின் தூபங்கங்களை
ஆழ்மனதில் நீ விதைத்துக்கொண்டே இருந்ததும்
தாயே நான் இன்று உணர்கிறேன்.

கோபம் நெருங்கா கோபுரம் அம்மா நீ!
வாழ்த்துதல் தவிர்த்த மற்ற வகைகள் அறியாதவர் நீ!
பசித்தவருக்கு முப்போதும் ருசித்து அமுதம் வார்த்தவர் நீ!
ஏழைக்கு எப்போதுமே இரங்கும் சீமாட்டியம்மா நீ!
நாடிவந்த யாவரும் நாளெல்லாம் வாழ்த்தியவரம்மா நீ!

இறையருள் மிக்கவர் நீ!
இரசூல் அன்பு மிக்கவர் நீ!
இஸ்லாத்தின் பண்புகள் யாவும்
இனிதாய் வீற்றிருப்பவரன்றோ நீ!

தலைவா நீ அருள் என் அம்மைக்கு!
நின் ஆசி கொண்டும்,
நினதருள் வேந்தர் நீங்கா நீடுபுகழ்
நித்திய சத்திய நாதர் நபிகளார் (ஸல்)
வான்கிருபை கொண்டும்.


சோர்வு நீங்கி.. சுகம் பரவி..
நலம் ஓங்கட்டும்!
நாடிகள் சிறக்கட்டும்!!
நாட்கள் நீளட்டும்!!!
இரத்த ஓட்டங்களெல்லாம் இனிதாகட்டும்
இனியெல்லாம் நலமாகட்டும்!!!
மனம் என்றும் நிறைந்திருக்க
மகிழ்ச்சியே ஆளட்டும்.


அம்மா நீங்கள் வாழ்க!
தாயே நீங்கள் வாழ்க!!


என் ஆருயிர் பாட்டியாரின் உடல் நலம் சிறக்க என் அன்பின் உறவுகளே அருள்கூர்ந்து எல்லாம் வல்ல இறைவனிடம் தங்களின் பிரார்த்தனைகளை எதிர்பார்க்கிறேன்.

-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: