30 ஜூலை 2011
காதல் ஓவியம்
வானம்பாடியாய் பாடித்திரிவோம்

தித்தித்திடும் அத்திப்பழமடி நீ...
தீபமாய் என் நெஞ்சில் என்றும்
பாசப் பசுங்குயில் எனக்கு நீ!
முத்தே.. முந்திரியே.. என் சுந்தரியே..!
வா..! வானம்பாடியாய் பாடித்திரிவோம்,
பிறந்திட்டோம் ஒருவருக்காய் யொருவர்
காணுவோம் மகிழ்வெலாம் மணவாழ்வில் நாளும்..!
27 ஜூலை 2011
பசிக்கு இரக்கம் வருமா..?

வெட்டும் வெயிலில்
வெட்ட வெளியில்
எட்டாம் மாடிக்கு
சித்தாள் கிழவி
சட்டி சுமந்து செல்கிறாள்..!
அறுபது வயதிற்கு மேலிருக்கும்
அந்த கிழச்சித்தாளுக்கு,
எடுபிடி வேலை செய்ய
எடுத்து வந்துவிட்டாள்
சும்மாடு தன்னை,
சும்மா விடுமா வயிறு..!
சற்று நேரத்திற்கெல்லாம்
களைப்படைந்த அக்கிழவி
இப்படியா வெயில் அடிக்கும்
'எப்ப்ப்ப்பாடியோ… ஏ..ஆயா'
அவளுக்கவளே சொல்லிவள்,
நிழல் பார்த்தமர்ந்தாள்!
இடுப்பில் கட்டிவைத்திருந்த
குட்டிச்சுருக்குப்பை எடுத்து
கைவிரல் நுழைத்து
கடைந்துத்தொட்டு கடைசியில்
புகையிலைப் பையெடுத்து
வாயில் மென்றதக்கி…
சின்னச்சுண்ணாம்பை
சிற்றுருண்டையாக்கி
வாய்க்குள் அதையும் வீசி,
காம்பினை கிள்ளி
வெற்றிலையை
கசக்கி..மடக்கிப்..போட்டு
மெல்ல எழுந்தாள்..
மென்று கொண்டே எழுந்தாள்
பசித்தால் இரவு உறக்கம் வருமா..? - இல்லை
பசிக்குத்தான் இரக்கம் வருமா..?
-ஜே.எம்.பாட்ஷா
-இன்னும் புரியும்
26 ஜூலை 2011
தாம்பத்யம் மேலானது..
மயக்க நாழிகைகள்
23 ஜூலை 2011
இப்போதைய சத்தியாகிரகம்..!

உலகெங்கும் கவர்ச்சி,
கண்களைத் திறந்தாலே
காமத்தின் வாசல்,
மூக்கின் மொட்டுகளில்
பாலியல் வாசனை,
காதின் பக்கலோ
கேட்கத்தகா சப்தங்கள்,
நாவுகள் அசைகிறது
நாகரீகமில்லா வார்த்தைகளுக்காய்!
உலகில் எங்கனும்
சுகபோக சுவாரஸ்யங்கள்,
மக்களின் நடப்போ
மனோ இச்சையின் வழியில்!
உடலில் துணியோ நேற்றையபழமை,
ஃபேஸன் எனும் போர்வையில்
ஆடைகுறைப்பு அட்டகாசங்கள்,
ஆதி மனிதன் மீண்டும் பூமியில்..!
பாபம் எத்தனை தீர்க்க தரிசிகள்
வந்தாலும் அடங்காத -இவர்களின்
மிருகங்கள் சுதந்திரமாக!
எந்த பெண்ணோடோ எந்த ஆணும் -இது
தற்போது கண்டெடுக்கப்பட்ட
இ-வேல்டு நாகரீகம்
நினைக்கும் நேரம்..
எப்படியும் எங்கேயும்..
ஆனாலும் இவர்களுக்கு ஆறு அறிவாம்.
கேட்டாலோ..?
21ம் நூற்றாண்டு..
குறுகிய வாழ்நாள்
அறிவியியல் யுகம்
வாழ்க்கை வாழ்வதற்கே
இரவு விடுதிகளில்..
கண்ணாற பெண்கண்டு
களைப்பாற தேனுண்டு
ஒய்யாற இடை கோர்த்து
ஓய்வற நடம் நிகழ்த்து..
இவர்களின் முழக்கம்!
பாழாய்போன
திரைச் சேனல்களிலும்..
தரைச் சேனல்களிலும்..
கணினி கர்மங்களிலும்..
முத்தங்களும் முனங்கள்களும்..
சேட்டைகளும் சில்மிசங்களும்..!
இப்போதெல்லாம்
இங்கங்கு என்றிலாது
எங்கனும் பரவிவிட்டது
அயோக்கிய (ஐரோப்பிய) கலாச்சாரம்!
இவற்றிற்கிடையில் தான் -நம்
பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சுகள்
சத்தியாகிரகத்தில்!
-ஜே.எம்.பாட்ஷா
22 ஜூலை 2011
ஒப்பாரி அரசியல்...

வானத்தில் மேகக்கூட்டம் இலக்கில்லாமல் தவழ்கிறது..
மோகன இறக்கைகளை விசிறியே வண்டுகள் மலர்களில் தேனெடுக்கிறது..
கிளைகொண்ட மரங்ககளில் கிளிக்கூட்டங்கள் பேடைகளுடன் கிளுகிளுக்கிறது..
நிலைமறந்து சோலைகளில் காதலர்கள் மாய மயக்கத்தில் குறுகுறுக்கின்றனர்..
எறும்புகள் ஓரமாய் உணவு சுமந்து சாரை சாரையாய் சுறுசுறுக்கிறது..
ஓடைகள் ரம்ய பாஷை பேசி ஊர்ந்து
புல்வெளியில் ஆடுகள் வேக வேகமாய் புற்களை மேய்கிறது..
மரம் விட்டு மரம் அணில்கள் ஆரவாரமாய் தவுகின்றது..
சிட்டுக்குருவிகள் என்வீட்டு முற்றம் வந்து செல்கின்றது..
கிட்டிப்பிள்ளைகளை கெட்டித்தனமாய் சிறுவர்கள் ஆடுகின்றனர் தெருவில்..
எல்லாவற்றிலும் நிஜத்தில் அமைதி...!
ஏன் இவர்கள் மட்டும்
மதமாச்சர்யங்களை கிளர்ந்தெழ செய்தும்..
சாதி அரசியல் என்றபெயராலும்
பழைய ஒற்றுமைகளை புதைத்தும்
வரலாற்றினை மீண்டும்..மீண்டும்..
வஞ்சம் கொண்டு சிதைத்தும்..
அமைதியை முற்றும் கெடுத்து,
இரத்தத்தை புசித்து பசி போக்கி..
ஒப்பாரியை ரசித்து இன்பமெய்தி
வாழ்வு நடத்துகின்றனர்
ஐயகோ! இவர்களெல்லாம் ஆட்சியாளர்களாம்..!
மக்களை கொல்வதும் மக்களுக்காகத்தானோ..?
-ஜே.எம்.பாட்ஷா
8-4-1997 1 மணி நண்பகல்
-இன்னும் புரியும்
ஓவியன்

நான் ஒரு ஓவியன் - என்
சித்திரங்கள் சிரிக்கின்றதே தவிர
சிரித்ததில்லை நான் இதுவரை,
ஒவ்வொரு நாள்
புலரும் போதும் – என்
சித்திரங்கள் சந்தைதனில் - ஆனால்
அவை விலை போகத்தான்
மறுக்கின்றன!
உண்மையில் உண்மைக்கு ஏது விலை..?
-ஜே.எம்.பாட்ஷா
19-04-19997 இரவு 10.27
-இன்னும் புரியும்
17 ஜூலை 2011
அனுபவம் பற்றி சிறுவன் நான்..

என்னை பொறுத்த மட்டில்
வெண்ணெய் எடுக்கும் மத்துபோல
என்னையே கடைந்தெடுக்க இப்படி
கவிகள் புனைவது வழக்கம்!
படைத்தவன் படைத்த மூளை
பகுத்தறிவை தொடும் வேலை - என்னில்
பகுத்துப் பார்க்க பழகிக்கொண்டது,
தொகுத்துப் பார்த்தால் ஐந்தாண்டு இருக்கும்!
வகுத்து கழித்தது போக
பெருக்கி கூட்ட வெண்டியதெல்லாம் –தூய்மையாக
உருக்கி எடுத்துத் பின் தொடுத்தலையும்
பகுக்கும் மூளை பழக வேண்டியவை.
ஏட்டால் வருமறிவு எண்ணிக்கையில் பல
பாட்டால் பெறுமறிவு எண்ணிக்கையில் பல
பார்வை கேள்வியால் பெறுமறிவுகளும் இப்படித்தான்
இவைகள் பற்றியெல்லாம்
இங்கு கூற நான் விளையவில்லை,
நடைமுறையில் பெறும் அறிவு – என்ற
நல்லதொரு அரும் அறிவைத்தான்
அனுபவம் என்பார்கள்.
அடைந்து சொன்னதெல்லாம்
அனுபவம் தான். – சில சமயம்
ஏட்டுக்கல்விகள் எடுபடாதபோது
நேற்று பெற்ற பாடம் தான்
தோற்றுவிக்கும் புதுவழி தன்னை,
பெரியவர்கள் சொன்னதும் அதைத்தான்
பேரறிஞர்கள் சொன்னதும் அப்படித்தான், - இதனால்
ஊரறிய சொல்வது என்னவென்றால்
அனுபவம் போன்ற ஆசிரியன் இல்லை என்றே!
ஊறும் பிள்ளைகள் கூட
ஓடும் பூச்சியைப் பிடிக்க,
கடித்தபின்னர்
கற்றுகொள்வது தான் அனுபவப் பாடம்
தாயின் மார்பறையில்
அமுதம் அருந்திய நிகழ்வுகளெல்லாம்,
அறிவு முளைக்கும் முன்னே என்பதால்
மறந்து போன அனுபவந்தான்,
சில கனங்கள்,
தொல்லை கொடுத்து அழுததனால்
பல்லைக் கடித்துக் கொண்டு கோபம் வர
அடித்து தீர்த்ததனால்… தாய்
தேம்பி அழுத அனுபவங்கள்
தேடினாலும் வருமா..
-ஜே.எம்.பாட்ஷா
17-10-1997 10.27 இரவு,
இன்னும் புரியும்...
15 ஜூலை 2011
சமூக இதயமே நீயேன் நின்று போனாய்..?

பரிதவிக்கிறது மனது
பாரம்பரியத்தை காத்து வந்த
பாரம்பரியமே – நீ
பரமனோடு சேர்ந்து விட்டாயென்று
பரபரப்பாக காற்றலைகள்
பரப்பிய துக்கம் கேட்டு
பரிதவிக்கிறது – மனம்
பதறுகிறது – நம் மரபே
அருந்து போனதோ வென
உள்ளம் உருகி நீர்க்கிறது.
எழுபதைத் தாண்டிய இளைஞனே – நீ
உழைத்து உழைத்து
உயிர் தேய்ந்தது போதும்
உறங்கு நிம்மதியாய் என்று
உத்தரவு வந்தததோ..!
ரோஜாவைப் பார்த்து
உன்முகம் பார்த்தால்
ராஜாவே நும்முகமே அழகென்று
அகிலமே கூறிய அழகனே!
அதென்ன சூட்சுமம்
உன் தமிழ் மட்டும்
நீ அம்பாய் எய்தாலும்
மல்லிகையாய் மாறி தூவுமே..
தமிழுக்கே நாவினிக்கும்
சக்கரைத் தமிழே
எத்தனை மேடைகளில் உன்
ஒய்யாரத் தமிழ்
தென்றலாய் உலா வந்தது –அந்த
ஆன்மமருத்துவ தென்றலின்
அற்புதம் தெரியாமல் யார்..
இனி உன்னை பேசாமல் செய்தது ?
தீவரவாதம்..மதவாதம்.. இனவாதம்..
பேசிடுவோர் நடுவினில்..
மிதவாதத்திலும் இதவாதமே - என்
கொள்கையென பக்குவ அரசியல் நடத்திய பண்பாளா!
கல்லெறிந்து.. சொல்லெறிந்து.. - உன்
உள்ளத்தில் முள்ளெறிந்த தருணங்களில் -நீ
புன்னகைப்பூவின் மலர்ச்சரம் கொண்டு
அவர்களுக்கே மணிச்சுடர் ஓலையில்
மாலையிடுவாய்.
அவரே நாணிடுவர்..!
ஏனிந்த பிழைசெய்தோமென..!
நீ தாக்கி பேசநினைத்து பேசிய பேச்சே
மற்றவர்களை வருந்தச்செய்யாது
திருந்தத்தான் செய்யும் எனும்போது..
நீ விட்ட மூச்சா கெடுதல் செய்யும் - இன்னும்
கொஞ்ச நாள் இருக்கச்செய்வதனால் – அந்த
விஞ்சும் அருளாளனுக்கு குறைவா வரும்..
அவன் ஏன் இப்படி
அவசர அவசரமாய் - எங்கள்
அன்பை அழைத்துச்சென்றான்
அவனுக்கு ஆசையோ என்னவோ
அமரர்கள் மத்தியில் அருந்தமிழ் பேசச்செய்ய!
பேர் சொல்லும்
பெரும்படைத் திரட்டி
வடநாட்டுச் சிங்கங்களை
மேடையிலே இருத்தி
ஊர்போற்ற உலகு போற்ற
சென்னை சீரணியரங்கில்
சீர்மிகு எழுச்சி மாநாடு
சிறப்பாய் நடத்தி..
திடமான நெஞ்சனே
கொடவேண்டும் எம்மவருக்கு
இடஒதுக்கீடு என - நீ
முதல்வர் முன் - அவர்
மூளை துறுவிடும்
கூவல் தந்த தலைவா..!
காயிதே மில்லத்திற்கு பிறகு – நீ
இருக்கிறாயென நாங்கள்
நம்பிக்கை வைத்திருந்ததில்
நச்சுப் பாம்பு கொட்டியேன் எம்மை
அதிக வேதனையிலிட வேண்டும்
இனி எப்படி பார்ப்போம்
என் இதயத் தலைவரை
புலம்ப விட்டு போன எம் தலைவா
எழுப்பவியலா உறக்கத்தில் ஏன் ஆழ்ந்தாய்…?
ஓ..! என் சமூக இதயமே..
உன் துடிப்பில் தானே
நாங்கள் இயங்கி வந்தோம்
எங்களை ஜடமாக்கி
நீ யேன் நின்று போனாய்..?
-இன்னும் புரியும்