காதல் உணர்வு
மேலோங்கி இருக்க..
உண்மையில் ஆன்மாவின்
ஆருதல் தளமாக
கணவனுக்கு மனைவியும்
மனைவிக்கு கணவனுமாக
இருக்க வேண்டும்.
தினமும் புதிதாய்
கனமும் புதிதாய்
இருவருக்கும் இதயம்
இனிப்பாய் வேண்டும்.
அவ்வப்போது தனிமையில்
தலை சாய்த்து
கண்ணயற..
நீவும் விரல்களோடு -உன்
நீளமடியும் வேண்டும்
என்னில் வெப்பக்கனல்
வீசினாலோ – உன்
சேலை சாமரத்தால்
குளிர்விக்க வேண்டும்.
கிளிகளைப்போல..
புறாக்களைப் போல..
மானைப் போல..
மயிலைப் போல..
மயக்கநிலையில் - நம்மையே
மறந்த நிலை வேண்டும்.
வம்புகள் செய்த
அம்புகளும் காதலாகி
கவியமுதமாய் நாளும்
கரைசேர்ந்திடல் வேண்டும்.
வருடல்கள் வேண்டும் –கொஞ்சம்
திருடல்கள் வேண்டும்
மணலாய் நானாக
நதிநீராய் நீயோட வேண்டும்..
சலிக்காத தாம்பத்தியம்
சங்கமமாகி..
சாந்தி திளைக்க வேண்டும்.
இளமையில் உடல்
இணைப்பின் உணர்வு
மேலோங்கலாம்..
இளைமை கடந்தும்
உடல் கடந்து உணர்வால்
இணைந்திருக்க வேண்டும்.
பாச வார்த்தைகளை
ஒருவருக்கொருவர்
பந்தியிட்டு பறிமாறிட
முந்திக் கொண்டு
போட்டியிடல் வேண்டும்.
எத்தனைப் பிள்ளைகள்
பெற்றாலும் - பிள்ளைகள்
நமக்கு நாமேயாகவேண்டும்.
இருவரின் மேலும்
ஒருவருக்கொருவர்
சர்க்கரையாய் அக்கறை
மிகக் கொண்டாடுவதில்
வயதும் தடையில்லை..
சிலரை பார்த்திருக்கிறேன்..
வெகுசிலரே அவர்கள்..!
முத்தத்தில் மட்டுமல்ல
மொத்தத்திலும் வாழ்வில்
மிக இணைந்தவர்கள்.
இனிப்பான வாழ்வை
இதயத்தால் நடத்துபவர்கள்,
அன்னியோன்யமான அவர்களை
கண்கொண்டு கண்டாலும்
அத்தனை சுகம்!
பொறாமை கூட
சில சமயத்தில்,
கோலூண்றிடும் *காலையிலும்
காதல் கரையாமல்
கரிசனமும் குறையாமல்
வளர்க்கும் விதம்..,
ஆஹா…
அப்படித்தான் நாமும்…
காதல் உணர்வு
மேலோங்கி இருக்க..
உண்மையில் ஆன்மாவின்
ஆருதல் தளமாக
கணவனுக்கு மனைவியும்
மனைவிக்கு கணவனுமாக
இருக்க வேண்டும்.
ஜே.எம்.பாட்ஷா
2008ல் துபாயில் ஒரு பேருந்து பயணத்தின் போது சாலையோர சோலையில் கோலூண்றி நடக்கும் அந்த காலத்திலும் காதலில்.. கரிசனத்தில்.. மிக வாஞ்சையோடு இணைந்து அன்பாய் நடந்து வந்த மிக முதிர்ந்த மேற்கத்திய இணையை காண என்னில் ஊறிய எண்ணங்களை அப்போதே இறக்கிவைத்தேன்…
குறிப்பு; காலை என்பதன் பொருள் காலம் என்பதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக